பறவைகளின் கூத்து - சிறுகதை

" கீச் கீச் கீச் கீச்,
ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹரீம்,
லாலிலாலிலாலிலாலி,
கா கா கா கா,
கூக்கூ கூக்கூ கூக்கூ கூக்கூ.. "

என்னடா வித்தியாசமா எழுதியிருக்கே என்று நீங்கள் கேட்பது புரிகிறது,
இவை சில பறவைகளோட சத்தம் ( நீங்க நம்பித்தான் ஆகனும். வேற வழியில்லை. )

அன்று வாய்க்காலோரம் பறவைகள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
அந்த வாய்க்காலைக் கடந்தால் தான் என் நண்பனை வயலுக்குப் போக முடியும் என்பதாலும் நண்பன் வயலில் இருப்பதாலும் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது தான் கண்டேன் அந்த காட்சியை.
அங்கு பறவைகள் சில நீரில் குளித்துக் கொண்டிருந்தன.
சில ஆடிக் கொண்டிருந்தன.
சில தங்கள் இனிய குரலில் இசைத்துப் பாடிக் கொண்டிருந்தன.

அதன் மொழிப்பெயர்ப்பைச் சொல்கிறேன். கேளுங்கள்.

" நாமெல்லாம் ஒரே இனம்.
நம்மை பிரித்து பட்டியலிட்டது மனிதனின் ஈனக் குணம்.
கீச் கீச் கீச் கீச். "

" குணம் பேணாத மனிதன் பணம் பேணி ஓடுகிறான்.
அறிவில் தானே உயர்வென்றே ஆடுகிறான்.
ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ",

" உயிர் கூட்டைவிட்டு ஓடும் முன்னே சேர்த்து வைத்ததும் தான் ஓடிப்போகும் தன்னே.
நிரந்தரமில்லாத உலகில் நிரந்தரமென்று ஆடிய ஆட்டமெல்லாம் காலப்போக்கில் ஒடுக்கிப்போகும் தன்னே.
லாலிலாலிலாலிலாலி... "

" சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றே சோம்பேறிகளும் வளர்ந்துவர, உழைக்கும் நலலவருக்கே திண்டாட்டம்.
நாளும் உழைக்காத அரசியல்வாதிகளுக்கோ கொண்டாட்டம்.
கா கா கா கா... "

" இயற்கை என்னும் அட்சயப் பாத்திரத்தை மனிதக் கூத்தாடிகள் போட்டுடைக்கிறார்கள்.
இயற்கையை எதிரி போல் எண்ணி தன் வாழ்வையெல்லாம் வீணாக அழிக்கிறார்கள்.
கூக்கூ கூக்கூ கூக்கூ கூக்கூ... "

இவ்வாறு கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

இன்னும் சில பறவைகள் அருகில் இருந்த பாறையில் குழுமி இருப்பதைக் கண்டேன்.

ஒரு பறவை மட்டும் தனியாக சற்று உயரமான இடத்தில் நின்றிருந்தது. அதற்குப் பின்னால் இரண்டு பறைகள் கந்தல் துணியால் திரையிட்டு மறத்துக் கொண்டிருந்தன.

மற்றவை கூட்டமாக நின்றன.

தனியாக நின்ற குருவி சொன்னது, " இதோ நீங்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்த மனித அரசியல் நாடகம். கண்டு களியுங்கள். "

சில நொடிகளில், " மாண்புமிகு டாக்டர் உயர்திரு முதல்வர் வருகிறார்.
வருகிறார்.
அவர்களை வருக, வருக என வரவேற்கிறோம். "
என்ற முழக்கிமிட திரை விலகி ஒரு பறவை குச்சிகளால் ஆக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தது. அதோடு சில பறவைகளும் அமர்ந்திருந்தன.

அது ஒரு போதுக் கூட்ட மேடை.
இப்போது முதல்வர் அவர்களுக்கு துணை முதல்வர் அவர்கள் பொன்னாடை போற்றுவார் என்றிட ஒரு பறவை மற்றொரு பறவைக்கு கிழிந்த துணியால் பொன்னாடை போற்றிவிட்டது.
இப்படி எல்லாம் பொன்னாடை போற்றி முடிய, இப்போது உங்க முன் மாண்புமிகு முதல்வர் உரையாற்றுவார்.

ஒரு பறவை எழுந்து குச்சியில் ஆன மைக் பக்கம் வந்து,
" எனதருமை கலகத் தோழர்களே!
மற்றும் அமைச்சர்களே!
சட்ட மன்ற உறுப்பினர்களே!
இளைஞர்களே!
அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போ பார்த்தீங்கனா நம்ம கட்சி ஆரம்பிச்சி இன்றோடு 120 ஆண்டுகளாச்சு.
வெள்ளிவிழாக் கொண்டாடுற இந்த நேரத்தில் எம் தந்தையும் கட்சித் தலைவருமான முன்னால் முதல்வருக்கு நினைவு கூரும் விதமாக அவருடை சமாதிக்கு சென்று விட்டு வந்தேன். மக்களுக்காக வந்தவர். தன் ஆயுளில் முக்கால்வாசியை மக்களுக்காக, நமக்காக, நம் கட்சிக்காக உழைத்தவர். ",
என்று கூறிக் கொண்டிருக்கும் போது
ஓரத்தில் ஒரு பறவை, " இதெல்லாம் உண்மையா? ",என்று மற்றொரு பறவையிடம் கேட்டது.

அதற்கு அந்த பறவை, " மேடையில் ஏறி மைக்கு கிடைச்சால் இவன் புழுக ஆரம்பிச்சுடுவான்.
இவனோட அப்பநா மக்களுக்காக உழைத்தான்!?
நல்லா பினாமி பெயரில் சொத்து சேர்த்து வைத்தான்.
6 பொண்டாட்டிகள் கட்டி வாழ்ந்தான்.
சட்டத்திற்கு முன்னால் ஒன்னா நம்பர் குற்றவாளி.
அரசியல், ஆட்சி, அதிகாரம், கட்சி, பதவினு இருக்கப் போய் தான் இவனெல்லாம் நடமாடுறான்.
அதுமட்டுமில்லாமல் இவனை இனத் தலைவனு பின்பற்றும் நிறைய முட்டாள்கள் மலிந்து கிடக்கிறார்கள்.
ஒரு தடவை இவனோட அப்பன் மேல ஒரு ஊழல் புகார் நிருபிக்கப்பட்டு, சிறைதண்டனை வழங்கப்பட்டது.
அப்போ இவனோட தொண்டர்களென்ற அடியாட்கள் மாநிலம் முழுவதும் கலவரம் பண்ணாங்க.
ஒரு மாவட்டத்தில் ஐந்து மாணவிகளை எரித்து கொன்னுட்டாங்க.
அதன் பிறகு அவன் மீதான எந்த ஊழல் வழக்கிற்கும் சரியான தீர்ப்பு வரல.
எல்லாத்தையும் மிரட்டி காலந்தள்ளிட்டு அவனும் பொய்ட்டான்.
அந்த மாணவிகளை எரித்துக் கொன்றவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. அதை இரத்து செய்துவிட்டான்.
இப்போ அவங்களை விடுதலையே பண்ணிட்டாங்க. ",என்றது.

" அடப்பாவிங்களா! இவ்வளவு அக்கிரமம் பண்ணியிருக்காங்களா? ", என்றது மற்றொரு பறவை.

இதெல்லாம் 0.0001 சதவீதம் தான். இன்னும் எவ்வளவோ பண்ணியிருக்காங்க.

மேடையில் முதல்வர் இன்னும் பேசிக் கொண்டிருந்தார்.

" கட்டத்தில் உங்களுக்கு ஒரு ஆபத்து என்றால் என் உயிரையும் கொடுத்து காப்பாற்றத் தயங்கமாட்டேன். ",என்று வீரவசனம் பேசியது.

அதைக் கேட்ட ஒரு பறவை வேகமாக வந்து மைக்கைப் பிடுங்கி,
" வெள்ளம் வந்த போது வீட்டுக்குள்ள படுத்துக் கொண்டவரெல்லாம் இந்த வசனம் பேசப்புடாது.
அமைதியா இருந்தால் ஓவரா அளக்குற.
போய்யா அங்குட்டு. ",என்றது.

மாண்புமிகு முதல்வரை எதிர்த்து பேசியதற்காக அந்தப் பறவைத் தாக்கப்படுகிறது.
இப்படி எல்லாம் தத்துரூபமாக நடித்துக் காட்டிக் கொண்டிருந்தன பறவைகள்.

நானும் வெகுநேரமாக அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

கடைசியாக நாடகம் முடியும் போது,
ஒரு பறவை உரக்கச் சொன்னது.

" தாழ்த்தப்பட்டவர்களுக்காக கேட்கிறேன் உரிமை,
ஒடுக்கப்பட்டவர்களுக்காக கேட்கிறேன் உரிமை,
என்று ஊலையிடுவாங்க. நம்பிடாதீங்க.
அது இலவசம்,
இது இலவசம்,
அந்த நிதி, இந்த நிதி என்பாங்க.
நம்பி வாங்கிடாதீங்க.
உழைக்காத பணம் உடலில் ஒட்டப்போதில்லை.
அரசியலை நம்பி அழிந்து போகாதீங்க.
நன்றி வணக்கம். "
என்று.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Nov-18, 10:41 am)
பார்வை : 350

மேலே