இரவின் தாலாட்டு
பகலவ னுறங்கப் பறவைகள் உறங்கப்
பாரினில் யாவரும் அயர்ந்திடும் வேளையில்
நம்நான்கு விழிமட்டும் விழித்திருக்கும் நிலையேனோ?
ஒளிமுக நிலவன்னை தன்மடி விரித்தாள்
மறுமொழி கூறாதுக் கண்மூடு என்னன்பே
வெண்மேகப் பஞ்சணைமேல் சிரம்வைத்து முகம்சாய்த்து
நீலமணி எழிலுடைநின் விழிமூடு ரத்தினமே
வெகுதூர மலைநிலத்தே வீழருவிப் பின்னொலியில்
இரவன்னை மென்குரலில் தினம்பாடும் இசைக்கேட்டுத்
தேன்மலரினும் மென்னியல்புப் பொன்விழிகள் அயர்ந்தருள்வாய்
வான்நிலவுப் பொங்கிவரும் வெள்ளிக்கீற் றலையிடத்தே
கடல்விளை வெண்முத்து எழிலொத்த விண்மீன்கள்
களிப்புடனே விளையாட அகமகிழ்ந்துக் கண்ணுறங்கு
வளமான வருங்காலக் கனவெல்லாம் உளம்நிறுத்தி
நாளைவரும் நல்வேளைப் புது - உதயம் மனமெண்ணி
இன்றுடைத்தக் களைப்பதுவே தீர்ந்தொழியத் துயில்கொள்வாய்