கனவுகள்

வாங்கவும் இல்லை விற்கவும் இல்லை
தினமும் புத்தம் புதிதாய்
குவிந்து விடுகின்றன கனவுகள்
**
மனசைக் கட்டிப்போடும் தைரியம்
வளர்த்து கொண்டபோதும்
கனவுகளை கட்டிவைக்க முடியாமல்
தவிக்கிறேன் நான்
**
கனவுகள் யாரையும் காயப்படுத்துவது இல்லை
நீயும் என்னை கனவு கண்டுவிடு
நமக்குள் வளரட்டுமே அன்புத் தொல்லை.
**
நீ என்னை கனவு காண்பதையும்
கனவில் காண ஆசை கொள்கிறேன் நான்
நான் உன்னை கனவில் காண்பதை
கனவிலும் காணக் கூடாது என்கிறாயா நீ!
**
நீ அலுவலகம் வாராத நாட்களில் குட்டித்
தூக்கத்தில் கனவில் காண்கிறேன் உன்னை
உன் அலுவல்களுக்கு மத்தியில் அன்றென்
குட்டித் தூக்கத்தைக் கனவு காண்கிறாயா பெண்ணே!
**
என் நாசிக்கு ஒவ்வாத வாசனை
திரவியங்கள் பூசாமல் ஒப்பனையற்ற
பேரழகியாக நீ திகழ்வதற்கு
போதுமாக இருக்கிறது ஒரு கனவு
**
நான் உன்னை நேசிப்பதிலும் அதிகமாய்
களங்கமின்றி நீ வந்து போகும்
கனவுகளை நேசிக்கிறேன்
**

என் போலவே நீயும்
கனவுகளை நேசிக்கப் பழகிவிடு
காதல் கைவிட்டுப் போனாலும்
கனவுகள் நம் கண்விட்டுப் போகாது
**
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (28-Nov-18, 2:21 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kanavugal
பார்வை : 506

மேலே