நல்லொழுக்கம் காக்கும் திருவத் தவர் – நாலடியார் 57

இன்னிசை வெண்பா

ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர். 57

- துறவு, நாலடியார்

பொருளுரை:

முயன்று தாம் மேற்கொண்ட நோன்புகள் உள்ளத்தில் தளர்வடையும்படி போக்குதற்கரிய துன்பங்கள் தம்மிடம் வந்தடைந்தால் எப்படியானும் அத் துன்பங்களைப் போக்கித் தம் நோன்புகளை நிலை நிறுத்திக் கொள்ளும் வலியுடையோரே துறவொழுக்கத்தினைக் காத்துக் கொள்ளும் பேறுடையவராவர்.

கருத்து:

இன்னல்களை எதிர்த்துத் தவம் முயலுதல் வேண்டும்.

விளக்கம்:

‘தாங்கரு' என்பது ‘தாக்கரு' என வலித்ததெனினும் ஒக்கும். நிறூஉம் - நிறுத்தும்;

உள்ள உரம் உடையோரே இடைவரும் இன்னல்களை நீக்கித் தம் நோன்புகளை நிலை நிறுத்திக் கொள்ளுதல் கூடுமாகலின், ‘உரவோரே ' என்றார்.

நல்லொழுக்க மென்றது இங்கே துறவொழுக்கத்தை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-18, 11:16 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே