எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன் - நாலடியார் 58

நேரிசை வெண்பா

தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்(று)
எம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன். 58

- துறவு, நாலடியார்

பொருளுரை:

காரணமின்றித் தம்மைப் பிறர் இகழ்ந்தமையைத் தாம் பொறுத்துக் கொள்வதல்லாமல், எம் போல்வாரை இங்ஙனம் இகழ்ந்த தீவினையின் பயனால், மறுமையில் ஒருவேளை அழலிடமான நரகத்தில் அவர் வீழ்வரோ என்று இரங்குவதும் தவம் நிறைந்தவரது கடமையாகும்.

கருத்து:

தவமுயற்சியில் நிற்பவர் தம்மை இகழ்பவரிடம் பொறுமையும் இரக்கமும் கொள்ளவேண்டும்.

விளக்கம்:

தனித்துத் தம்மை நினையாராகலின் பிறரையும் அவருடன் சேர்த்தே ‘எம்மை' யெனக் கூறுவரெனக் கொள்ள வேண்டும்.

நல்லோர்க்கு பிழை செய்திருந்தாலும் அவர் இரக்கத்தால் ஒருவேளை உய்தலும் கூடுமாதலின், ‘வீழ்வர்கொல்' என்பதிற் ‘கொல்' என்பதை ஐயப்பொருட்டாகவே கொள்வதில் தவறில்லை. சான்றோர் பரிவையும் அது மிகுதிப்படுத்தும்.

சான்றோர் அவரிடம் பரிவு கொள்ளாவிட்டால், அவருள்ளம் ஒருகால் அப்பிழை செய்தோர்க்குக் கேடு நினைந்து தன்னையே மாசுபடுத்திக் கொள்ளவும் கூடுமாதலாலும், தவத்தோர் நல்லது நினைத்தால், அவர் ஆற்றலுடையோர் ஆதலின், பிழை செய்தவர் திருத்தவுங் கூடுமாதலாலும் அங்ஙனம் பரிவதனைக் ‘கடன்' என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-18, 4:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே