எழுத்தாளர்கள் பெருமை கொள்ளும் தருணம் மூத்த எழுத்தாளர் எஸ்ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

எஸ்.ராமகிருஷ்ணன் 25 ஆண்டு காலமாக தொடர்ந்து முழு நேரமாக எழுதி வருகிறார்.

மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி விருது:

இலக்கியத்திற்கு அளிக்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது தமிழில் மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.2014-ஆம் ஆண்டு வெளியான சஞ்சாரம் என்ற புத்தகத்தை எழுதியதற்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பேசும் நாவலாக சஞ்சாரம் நாவல் உருவானது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் 1984-ஆம் ஆண்டிலிருந்து புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு, தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார்.

ஆங்கிலம்,கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. “அட்சரம்” என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச திரைப்படங்கள் மீதும், உலக இலக்கியங்கள் மீதும் தமிழ் சமூகத்தின் கவனத்தையும் சஞ்சாரம் நாவல் பெற்று வருகிறது. பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் 25 ஆண்டு காலமாக தொடர்ந்து முழு நேரமாக எழுதி வருகிறார்.

2018 ஆம் ஆண்டுக்கான தமிழ் நூலுக்குரிய சாகித்ய அகாடமி விருது யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒட்டு மொத்த எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
-----------------------
சென்னை : மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளா்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தலைசிறந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “சஞ்சாரம்” என்ற நாவலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாதமி விருது அறிவித்துள்ளது.

எஸ். ராமகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புகழ் பெற்றவை

தற்கால தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆன எஸ். ராமகிருஷ்ணன், பல சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், திரைக்கதைகளை இயற்றியுள்ளார். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம் ஆகிய கட்டுரை தொகுப்புகளும், எனது இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா ஆகிய வரலாற்று நூல்களும் புகழ் பெற்றவையாகும். இவர் அட்சரம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சிறுகதைகள் ஆங்கிலம், பிரெஞ்ச், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பெருமைக்குரியவர்...

இவர் எளிய நடையில், பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் பல சிறுகதைகளையும், நாவல்களையும் படைத்தவர் என்ற பெருமைக்குரியவர். இவர் தன்னை முழுமையாக அர்பணித்து தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். எஸ். ராமகிருஷ்ணன் பல விருதுகளின் சொந்தக்காரர். இந்நிலையில் மத்திய அரசு இவருக்கு சாகித்ய அகாதமி விருது அறிவித்து இருப்பது அவரின் புகழுக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.

வாழ்த்துகள்

சாகித்ய அகாதமி விருது பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தமைக்காக, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மேன்மேலும் இதுபோன்ற பல விருதுகளை பெற எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எழுதியவர் : (6-Dec-18, 9:52 pm)
பார்வை : 34
மேலே