ஷாஜகானின் மகள் ஜஹானாரா

முகலாய பேரரசர் ஷாஜகான், தனது மூத்த மகள் ஜஹானாராவுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ராணி மும்தாஜ் மஹலின் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வந்தது.
உடனே தாயின் அறைக்கு ஓடிச் சென்ற ஜஹானாரா, தாயின் பிரசவம் சிக்கலாக இருக்கிறது; குழந்தை கருப்பையில் இருந்து வெளிவரவில்லை என்பதையும், தாயின் தாளமுடியா வேதனையை பற்றியும் தந்தையிடம் கூறினார்.
ஷாஜகான் தனது நெருங்கிய நண்பரும், மருத்துவருமான ஹகீம் அலிம்-அல்-தீன் வஜீர் கான் என்பவரை வரவழைத்தார், ஆனால் அவராலும் மும்தாஜ் மஹலின் சிக்கலான பிரசவத்தை சுலபமாக்க முடியவில்லை.

'முகலாய இந்தியாவை பற்றிய ஆய்வு ' (Studies in Mughal India) என்ற புத்தகத்தை எழுதிய பிரபல வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்க்கார், அதில் கவிஞர் காசிம் அலி அஃப்ரீதியின் சுயசரிதையை மேற்கோளாக காட்டி இவ்வாறு எழுதியிருக்கிறார்: ''தாயின் பிரசவ வேதனைக்கு எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையை எண்ணி, ஜஹானாரா அழுது கொண்டு அப்படியே அமர்ந்துவிடவில்லை. அல்லா தனது தாயை மீட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் ஏழைகளுக்கு தானங்களை வழங்கத் தொடங்கினார்''.
''ஷாஜகானின் நிலையோ மிகவும் மோசமாகிவிட்டது. பேரரசராக இருந்தாலும், மனைவி மேல் கொண்ட பேரன்பால் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட, அதை துடைக்கவும் தோன்றாமல் பித்துபிடித்து அமர்ந்திருந்தார்'' என்று கூறுகிறார் ஜதுநாத் சர்கார்.

''ராணி மும்தாஜின் தீனமான வேதனைக் குரலும், அனைவரின் அழுகுரலும் அரண்மனையில் எதிரொலிக்க, மும்தாஜின் கருவில் இருந்த குழந்தையோ கருவறையிலேயே அழுதது''
மும்தாஜின் கடைசி விருப்பம்
''குழந்தை தாயின் கருவறையிலேயே அழத் தொடங்கிவிட்டால், தாய் பிரசவத்தில் இறந்துவிடுவார்; அவரை காப்பாற்றமுடியாது என்பது பொதுவான நம்பிக்கை. எனவே, தனது இறுதி கணங்கள் நெருங்கிவிட்டதை உணர்ந்த மும்தாஜ் மஹல், கணவன் ஷாஜகானை அழைத்து, தான் எதாவது தவறு செய்திருந்தால், மன்னித்துவிடுமாறு கேட்டார். அதோடு, தன்னுடைய கடைசி ஆசையையும் வெளியிட்டார் மும்தாஜ்'' என்று அந்தகாலத்தில் நிலவிய நம்பிக்கை பற்றியும் பதிவு செய்கிறார் ஜதுநாத்.
''நான் இறந்துவிட்டால், எனக்காக ஒரு நினைவிடம் கட்டுங்கள், அது இதுவரை உலகில் இல்லாத அற்புதமான ஒன்றாக இருக்கவேண்டும். முடிந்தால், எனது கடைசி ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கவும் என்று கேட்டுக்கொண்டார் ராணி மும்தாஜ் மஹல்'' என்று குறிப்பிடுகிறார் ஜதுநாத். இதுவே மும்தாஜின் கடைசி ஆசையாகவும், கணவனிடம் கேட்ட வரமாகவும் அமைந்துவிட்டது.

"கடைசி ஆசையை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே கௌஹர் அராவைப் பிரசவித்த மும்தாஜ் மஹல், இறந்துவிட்டார்" என்று தாஜ்மஹலுக்கு அடித்தளம் இட்ட மும்தாஜ் மஹலின் இறுதிக் கணங்களைப் பற்றி விவரிக்கிறார் ஜதுநாத்.
ஷாஜகான் இந்த அதிர்ச்சியில் இருந்து ஒருபோதும் மீளவில்லை என பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். டபிள்யூ.பெக்லி மற்றும் ஜெட்.ஏ.தேசாய் எழுதிய 'Shahjahanama of Inayat Khan' என்ற புத்தகத்தில் "ஷாஜஹான் இசை கேட்பதை நிறுத்திவிட்டார்; வெண்ணிற ஆடைகளை உடுத்தத் தொடங்கினார். தொடர்ந்து அழுதுக் கொண்டேயிருந்ததால், அவரது கண்கள் பலவீனமாகி, கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மும்தாஜ் உயிருடன் இருந்தபோது, தலையில் ஒரு நரைமுடி தோன்றினாலும், அதை களைந்துவிடும் பழக்கம் கொண்டிருந்த ஷாஜகானுக்கு மும்தாஜ் இறந்த ஒரே வாரத்தில் தலைமுடியும், தாடியும் நரைத்துப்போனது' என்று குறிப்பிடுகிறார் ஜதுநாத்.


ஷாஜகான்
மகன், மகள் மீது அதிக அன்பு
மும்தாஜின் மறைவுக்கு பிறகு மகன் தாரா ஷிகோஹ் மற்றும் மகள் ஜஹானாராவையே முற்றிலுமாக சார்ந்திருந்தார் ஷாஜகான். ஜஹானாரா, 1614 ஏப்ரல் இரண்டாம் தேதியன்று பிறந்தார். ஷாஜகானின் மற்றொரு மனைவியான ஹரி கானாம் பேகம், ஜஹானாராவுக்கு அரச குடும்பத்தின் பழக்கவழக்கங்களை கற்பித்தார். ஜஹானாரா, மிகவும் அழகானவர் என்பதும், புத்திசாலி என்பதும், பாரசீக மொழியில் இரண்டு நூல்களை எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1648இல் புதிதாக கட்டப்பட்ட ஷாஜஹானாபாத் என்ற நகரின் 19 கட்டடங்களில் ஐந்து கட்டடங்கள் ஜஹானாராவின் கண்காணிப்பின்கீழ் கட்டப்பட்டன. சூரத் துறைமுகத்திலிருந்து கிடைத்த வருமானம் ஜஹானாராவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஜஹானாராவுக்கு சொந்தமான 'சாஹிபி' என்ற கப்பல், டச்சு மற்றும் இங்கிலாந்தில் வர்த்தகம் செய்வதற்காக ஏழு கடல்களிலும் பயணித்தது.

பிரபல வரலாற்றாசிரியரும், 'Daughters of the Sun' என்ற புத்தக்கத்தை எழுதியவருமான இரா முகோடி இவ்வாறு கூறுகிறார்: ''முகலாய பெண்களை ஆய்வு செய்தபோது, ஷாஜாகனாதாபாத் கட்ட திட்டமிட்டபோது, (இன்றைய பழைய டில்லி) அதன் வரைபடம் ஜஹானாரா பேகத்தின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டுள்ளதை தெரிந்துக் கொண்டோம். தற்போதும் பழைய டெல்லியில் பிரபலமான கடைவீதியாக விளங்கும்
சாந்தினி சௌக் என்ற சந்தையை திட்டமிட்டு உருவாக்கியவர் ஜஹானாரா. அந்தக் காலத்தில் சாந்தினி செளக் அற்புதமான அழகான கடைவீதியாக பேசப்பட்டது. ஜஹானாரா முகலாய பெண்களில் மிகவும் முக்கியமானவர்; புத்திசாலி; அனைவராலும் மதிக்கப்பட்டவர்'' என்கிறார் இரா முகோடி.
சகோதரர்களான தாரா ஷிகோஹ் மற்றும் ஒளரங்கசீப்பிற்கு அரியணைக்கான சண்டை மூண்டபோது, ஜஹானாரா தாரா ஷிகோஹிற்கு ஆதரவாக இருந்தார். ஆனால் ஒளரங்கசீப் அரசராக இருந்தபோது, ஜஹானாரா பேகத்திற்கு முக்கியத்துவம் அளித்தார்.

ஒளரங்கசீப்
முகலாய பெண்களில் ஜஹானாரா பேகம் மிகவும் பெரிய செல்வந்தராக கருதப்பட்டார். அந்த காலத்திலேயே அவரது ஆண்டு வருமானம் 30 லட்சம் ரூபாய் (இன்று ஒன்றரை பில்லியன் ரூபாய்க்கு சமம்) என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் தகவல்.
ஜஹானாரா மக்களின் அபிமானத்தை பெற்றவராக இருந்தார். ரானா சஃபி என்ற வரலாற்றாசிரியரின் கருத்துப்படி, "ஜஹானாராவை இளவரசியாகவோ, ஷாஜகானின் மகளாகவோ அல்லது ஒளரங்கசீப்பின் சகோதரியாகவோ மட்டுமே எங்களால் பார்க்கமுடியவில்லை. அவர் ஒரு தனித்துவமான ஆளுமை கொண்டவர். 17 வயதில் தாய் மும்தாஜ் மஹல் மறைந்த பிறகு, அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த 'பேகம்' என்ற பட்டம் ஜஹானாராவுக்கு வழங்கப்பட்டது".

"அரச குடும்பத்தை அல்லது உயர் குடியை சேர்ந்த பெண்களில் அதி முக்கியத்துவம் வழங்கப்படுபவர்களுக்கு பேகம் என்ற பட்டம் வழங்கப்படும். பேகம் என்ற மிகவும் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு, மனைவியை இழந்து துக்கத்தில் மூழ்கியிருந்த தந்தை ஷாஜகானுக்கு ஆதரவாக இருந்தார் ஜஹானாரா" என்று வரலாற்று சம்பவங்களை நினைவு கூர்கிறார் ரானா சஃபி.
1644 ஆம் ஆண்டில், ஏற்பட்ட விபத்து ஜஹானாராவை 11 மாதங்கள் கட்டாய ஓய்வு எடுக்கவைத்தது. கோட்டையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, வெளிச்சத்திற்காக தாழ்வாரத்தில் வைக்கப்பட்டிருந்த தீப்பந்தம் ஜஹானாராவின் மீது விழுந்து ஏற்பட்ட தீ விபத்து அது.
முகலாய காலத்தில் நடைபெற்ற பல கதைகளைப் பற்றி ஆராயும் ஆசிஃப் காம் தெஹ்லாவியின் கூற்றுப்படி, "அது ஜஹானாராவின் பிறந்தநாள். பட்டால் ஆன உடைகளை அணிந்திருந்த ஜஹானாரா, தனது பரிவாரங்களுடன் வெளியே வந்தபோது, தாழ்வாரத்தில் இருந்த தீப்பந்தம் இளவரசியின் மேல் விழுந்து தீப்பற்றிக் கொண்டது, தீ அணைக்கப்பட்டாலும், இளவரசிக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன."

வடுக்களான காயங்கள்
"ஜஹானாராவின் பாதுகாவலர்கள் அவர்மீது போர்வைகளை போட்டு தீயை அணைத்துவிட்டாலும், ஜஹானாராவுக்கு மோசமான காயம் ஏற்பட்டது. மதுராவில் பிருந்தாவனத்தில் இருக்கும் துறவி ஒருவர் கொடுக்கும் மருந்து காயங்களை ஆற்றிவிடும் என்று சொன்னதைக் கேட்டு ஜஹானாரா அதையும் பயன்படுத்தினார். உண்மையில் துறவியின் மருந்தால் காயங்கள் ஆறினாலும், சில நாட்களிலும், புதிதாக தோலில் பிரச்சனைகள் எழுந்தன" என்று தெஹல்வி குறிப்பிடுகிறார்.
"அன்பு மகள் படுத்த படுக்கையாய் இருப்பதை ததை ஷாஜஹானால் பார்க்கமுடியவில்லை. ஜஹானாராவுக்கு யாரோ விட்ட சாபம்தான் அவரை கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது, எனவே பிரயாசித்தம் செய்யவேண்டும் என்று ஒரு ஜோதிடர் ஆரூடம் சொன்னார். அண்மையில் ஜஹானாரா யாருக்காவது தண்டனை கொடுத்தாரா என்று விசாரிக்கப்பட்டது. தனது பணிப்பெண் ஒருவரை சீண்டிய சிப்பாய் ஒருவரை, யானையின் காலடியில் இட்டு மரண தண்டனை வழங்கிய விவரம் தெரியவந்தது" என்கிறார் தெஹல்வி
"இறந்துபோன சிப்பாயின் குடும்பம் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் மன்னிப்புக் கோரப்பட்டு, சன்மானங்கள் வழங்கப்பட்டன. பிறகு ஜஹானாரா குணமானவுடன், தேவையான அளவு தானங்கள் செய்வதற்காக ஷாஜஹான் தனது பொக்கிஷத்தையே திறந்துவிட்டார்'' என்று தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பைப் பற்றி தெஹல்வி குறிப்பிடுகிறார்.
ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் அனைத்திலும் ஜஹானாராவின் ஆலோசனைகள் பெறப்பட்டன
அதிகாரம் மிக்க முகலாய பேகம்கள்
முகலாய பேகம்களின் செல்வாக்கு மற்றும் அதிகாரம் பற்றி இரா முகோடி இவ்வாறு குறிப்பிடுகிறார். ''முகலாய பேகம்களுக்கு இருந்த அதிகாரத்தைப் பார்த்த மேற்கத்திய வரலாற்று எழுத்தாளர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் ஆங்கிலேய சீமாட்டிகளிடம் இந்த அளவு செல்வாக்கோ, அந்தஸ்தோ இருந்ததில்லை. ஜஹானாராவுக்கு வர்த்தகம் செய்யவும், ஆணைகளை பிறப்பிக்கவும் இருந்த அளவற்ற அதிகாரத்தை கண்டவர்கள் தேவையில்லாதவற்றை பேசினார்கள். ஜஹானாரா பேரழகி என்று கேள்விப்பட்டதாக பதிவு செய்திருக்கும் அவர்கள், ஆனால் அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.'
'Travels in the Mughal Empire' என்ற தனது புத்தகத்தில் பிரான்சு நாட்டு வரலாற்றாசிரியர் பிரான்சுவா பெர்னியர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்
"பேரழகியான ஜஹானாரா மீது ஷாஜகான் பைத்தியமாக இருந்தார். தந்தையை மிகவும் அக்கறையாக கவனித்துக் கொண்டார் ஜஹானாரா. அவரால் மேற்பார்வையிடப்பட்ட உணவு மட்டுமே அரசருக்கு வழங்கப்படும் என்ற அளவுக்கு ஜஹானாராவின் கண்காணிப்பு இருந்தது".
அரியணைக்கான போட்டியில் தாராவுக்கு ஆதரவாக ஜஹானாரா இருந்தார்.
"ஜஹானாரா திருமணம் செய்துக் கொள்ளவில்லை. . ஜஹானாராவின் அறிவுக்கும், திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது".
"முகலாய இளவரசர்களின் திருமணங்கள் பற்றிய குறிப்பு பேரரசர் ஹுமாயூன் காலத்திலும் காணப்படுகிறது. பேரரசர் அக்பர், அஜ்மீர் அருகே இருந்த ஒரு மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவருக்கு தனது ஒன்றுவிட்ட சகோதரியை திருமணம் செய்துவைத்தார். அந்த மாப்பிள்ளை, அக்பருக்கு எதிராக பிறகு கலகம் செய்தார். முகலாய அரியணை மேல் அதன் இளவரசர்களுக்கு மட்டுமல்ல, மருமகன்களுக்கும் பேராவல் இருக்கும் என்பதை அக்பர் தெளிவாக உணர்ந்துக் கொண்டார்" என்று குறிப்பிடுகிறார் ஆசிப் கான் தெஹல்வி
இளவரசிகளின் திருமணத்தில் குழப்பம்
"இதுபோன்ற அரியணைச் சண்டைகள் இளவரசர்களுடன் முடிந்து போகாமல், மருமகன்களுக்கு விரிவடைவதை முகலாய அரச குடும்பத்தினர் விரும்பவில்லை. எனவே இளவரசிகளுக்கு திருமணம் செய்யும்போது, அரியணையையும் மனதில் வைத்தே மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இளவரசியாக செல்வாக்குடன் வளர்ந்தவர்களை திருமணம் செய்து கொடுத்தால், அரியணை மோகத்தில் அவர்கள் கணவன் வீட்டினரால் பணயப் பொருளாக்கப்படுவார்களா? " என்ற அச்சம் நிலவியதாக தெஹல்வி கூறுகிறார்.
"நாட்டின் மீது போர் தொடுக்கும் எதிரிகளை கொன்றுவிடலாம், ஆனால் இளவரசிகளின் கணவர்களையும், குழந்தைகளையும் எப்படி கொல்வது? என்ற கவலைகள் அரசக் குடும்பங்களில் இருந்தன. இளவரசி ஜஹானாரா பேகம் திருமணத்திலும் இதே பிரச்சனை, அதிலும் புத்திசாலியான, குடும்பத்தினரின் செல்லப் பெண்ணான ஜஹானாராவின் திருமணத்திற்கு மணமகனை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது" என்கிறார் தெஹல்வி.
இருந்தாலும், அரியணைச் சண்டைகள் அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடுமா என்ன? ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஒளரங்கசீப்பும் அவரது தம்பி முராத்தும் இணைந்து 1658ஆம் ஆண்டு1658ஆம் ஆண்டு ஆக்ரா கோட்டையை சுற்றி வளைத்து முற்றுகை இட்டனர். அப்போது அரசர் ஷாஜகான் கோட்டையின் உள்ளே இருந்தார்.
கோட்டைக்குள் நீர் விநியோகம் முதலில் நிறுத்தப்பட்டது, பிறகு ஒவ்வொரு வசதிகளாக துண்டிக்கப்பட, வேறு வழியில்லாமல் சில நாட்களிலேயே, கோட்டை பொக்கிஷங்களையும், ஆயுதங்களையும் மகன்களிடமும் ஒப்படைத்த ஷாஜகான், மகள் ஜஹானாராவை சமாதான தூதராக அனுப்பினார்.
அதன்படி, முகலாய பேரரசை ஐந்தாக பிரித்து நான்கு மகன்களுக்கும் தலா ஒரு பகுதியையும், எஞ்சிய ஐந்தாவது பாகத்தை ஒளரங்கசீப்பின் மூத்த மகன் முகமது சுல்தானுக்கும் கொடுப்பதாக ஷாஜகான் கூறியிருந்தார்.
பஞ்சாப் பிராந்தியம் தாராவுக்கும், குஜராத் பிராந்தியம் இளவரசர் முராத் என்பவருக்கும், வங்காள பிராந்தியம் இளவரசர் ஷாஹ்ஷுஜாவுக்கும், ஒளரங்கசீப்பின் மூத்த மகன் சுல்தான் முகமதுக்கு தக்காணப் பிரதேசத்தையும் கொடுப்பதாகவும், முகலாய சாம்ராஜ்ஜியத்தின் பேரரசர் பதவியையும், இந்தியாவின் எஞ்சிய பகுதிகள் அனைத்தையும் ஒளரங்கசீப்புக்கு கொடுப்பதாகவும் ஷாஜகான் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஒளரங்கசீப் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தந்தை ஷாஜகானை ஆக்ரா கோட்டையில் சிறையில் வைக்க ஒளரங்கசீப் முடிவு செய்தபோது, தானும் தந்தையுடனே இருந்துவிடுவதாக ஜஹானாரா கூறிவிட்டார்.

"மரணத் தருவாயில் ஷாஜஹானிடம் சத்தியம் வாங்கியபோதே, மகள் ஜஹானாராவிடமும் மும்தாஜ் மஹல் ஒரு வாக்குறுதியை வாங்கியதாக கூறப்படுகிறது. மகளின் கையைப்பிடித்துக் கொண்ட மும்தாஜ் மஹல், எந்த ஒரு சூழ்நிலையிலும், தந்தைக்கு ஆதரவாக அவருடன் இருக்கவேண்டும், அவரை விட்டு விலகிவிடக்கூடாது என்ற உறுதியை பெற்றுக்கொண்டார்" என்கிறார் தெஹல்வி.
வாக்குறுதிக்கு கட்டுப்பட்ட ஜஹானாரா
"வரலாற்று நிகழ்வாக இல்லாமல், ஒரு மகள் தாய்க்கு அளித்த வாக்குறுதியாக எடுத்துக் கொண்டாலும், அதை நிறைவேற்றும் முயற்சியில் ஜஹானாரா இறுதி வரையில் ஈடுபட்டார் என்பது இன்றைய காலச்சூழலுக்கும் பொருந்திப்போகும் விஷயமே" என்கிறார் தெஹல்வி.
மூத்த மகன் தாரா ஷிகோஹ் அரசனாக வேண்டும் என்று விரும்பிய ஷாஜகானிடம், 'அரியணைச் சண்டையில் ஒளரங்கசீப்புக்கு எதிராக தாரா ஷிகோவை ஆதரிக்கிறீர்களே, அவர் வெற்றிபெற்றால் அது உங்களுடைய வெற்றி என்று நினைக்கிறீர்களா? என்று ஜஹானாரா கேட்டதாகவும் கூறப்படுகிறது' என்பதையும் பதிவு செய்கிறார் தெஹல்வி.
ஜஹானாராவுக்கு ஆம் என்று பதிலளித்த ஷாஜகானிடம் மற்றுமொரு கேள்வியை தொடுத்தார் மகள். ஒருவேளை தாரா தோற்றுவிட்டால், அதை உங்களது தோல்வியாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு மெளனமே ஷாஜகானின் பதிலாக இருந்தது.
முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு கேடு விளைவிக்கும் மெளனம் அது என்பது விவேகியான ஜஹானாரவுக்கு புரிந்துபோனது. ஆனால், மோசமான காலத்திலும் தந்தைக்கு ஆதரவாக இருப்பேன் என்று தாய்க்கு கொடுத்த சத்தியத்தை மீறாமல் தந்தையின் கருத்தை ஏற்றுக் கொண்டார் ஜஹானாரா.
இதில் சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், தந்தையை சிறையில் அடைத்து, மூத்த சகோதரன் தாரா ஷிகோஹுக்கு மரண தண்டனையை நிறைவேற்றினாலும், சகோதரி ஜஹானாராவை மிகவும் மதிப்புடன் மரியாதையாகவே நடத்தினார் ஒளரங்கசீப்'' என்கிறார் இரா முகோடி.
''அரியணைச் சண்டையில் இளைய சகோதரி ரோஷ்னாரா, ஒளரங்கசீப்புக்கு ஆதரவாக இருந்தாலும், ஜஹானாராவிற்கே பேகம் என்ற அந்தஸ்தை அளித்தார் ஒளரங்கசீப். இதுகுறித்த அதிருப்தியையும், தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற மனக்குறையையும் பல்வேறு சமயங்களில் தமையன் ஒளரங்கசீப்பிடம் வெளிக்காட்டியிருக்கிறார் ரோஷ்னாரா'' என்கிறார் இரா முகோடி.

''ஜஹானாராவை பேகமாக அறிவித்த ஒளரங்கசீப், அவருக்கு கோட்டைக்கு வெளியில் இருந்த அழகான மாளிகையை பரிசளித்தார். ஆனால் இளைய சகோதரி ரோஷ்னாராவை கோட்டைக்குள் இருந்த மாளிகையில் இருந்து வெளியேற ஒளரங்கசீப் அனுமதிக்கவில்லை. ஒளரங்கசீப், ரோஷ்னாரா மீது பரிபூரண நம்பிக்கை வைக்கவில்லை என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன. ரோஷ்னாராவுக்கு காதல் தொடர்பு இருந்திருக்கலாம், அது ஒளரங்கசீப்பிற்கு தெரிய வந்திருக்கலாம்'' என்கிறார் இரா.
1681 செப்டம்பர் மாதம் தனது 67வது வயதில் ஜஹானாரா இயற்கை எய்தினார். ஜஹானாராவின் மறைவு குறித்த செய்தி ஒளரங்கசீப்புக்கு கிடைத்தபோது, அவர் அஜ்மீரில் இருந்து தக்காணத்திற்கு பயணித்துக் கொண்டிருந்தார். சகோதரியின் மறைவுக்கு மூன்று நாள் அரசு துக்கத்தை அறிவித்தார் ஒளரங்கசீப்.

ஜஹானாராவின் விருப்பப்படி, அவரது உடல், டெல்லியில் நிஜாமுதீன் ஒளலியாவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
''தனது கல்லறை திறந்தவெளியில் இருக்கவேண்டும் என்றும், அதை சுற்றி எந்தவித கட்டுமானமும் தேவையில்லை
என்று, அந்தக் காலத்தில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்த ஜஹானாரா உயில் எழுதி வைத்திருந்தார். இன்றும் நிஜாமுதீனில் ஜஹானாராவின் கல்லறை இருப்பதை பார்க்க முடிகிறது''.
''முகலாய அரச குடும்பத்தினரின் கல்லறைகளில், ஒளரங்கசீப் மற்றும் ஜஹானாராவின் கல்லறைகள்தான் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையான கல்லறைகள் என்பது குறிப்பிடத்தக்கது'' என்று முத்தாய்ப்பாய் சொல்கிறார் வரலாற்றாசிரியர் ரானாசஃப்வி

எழுதியவர் : உமாபாரதி (10-Dec-18, 12:04 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 99

சிறந்த கட்டுரைகள்

மேலே