திருவாசகம்----------------------மகாமகோபாத்யாய, முதுபெரும்புலவர்பண்டிதமணி மு கதிரேசச்செட்டியார் இயற்றிய கதிர்மணி விளக்கம் உரைத் தொடக்கம்

திருவாசகம்:---
-------------------

திருச்சதகம்


மகாமகோபாத்யாய, முதுபெரும்புலவர்பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் இயற்றிய கதிர்மணி விளக்கம் உரைத் தொடக்கம்

அருளுரு வாய யானை முகத்தெம்

பெருமுதற் கடவுளின் திருவடி போற்றுதும்

வாதவூரடிகள் மலர்வாய்த் தோன்றிய

திருவாசக மெனுந் தேனின்

இன்சுவை உலகுணர்ந்து இன்புறற் பொருட்டே.

திருவாசகம் என்பது அழகிய தெய்வத்தன்மை வாய்ந்த சொற்களால் ஆகிய செய்யுள் நூல் என்னும் பொருளையுடையதாகும். இது, திருவென்னும் அடையடுத்த வாசகம் என்னும் முதற் கருவியின் பெயர். அதன் காரியமாகிய செய்யுட்கு ஆயினமையின், கருவி ஆகுபெயராம் என்ப. சிவஞான முனிவரர் பிறர் கொள்கையை மறுக்குங்கால் ஆகுபெயர் என்பதை உடன்பட்டுப்பின் “உண்மையான் நோக்குவார்க்கு அன்மொழித் தொகையாகுமன்றி, ஆகு பெயராகாமையுணர்க”எனவுங் கூறியுள்ளர். திரு என்பது தெய்வத்தன்மை, அழகு என்னும் பொருளுடையதாகும். “திரு கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு” என்று பேராசிரியர் உரை கூறினாராயினும், ஈண்டுத் தெய்வத்தன்மை என்று கொள்ளுதல் சிறப்புடைத்தாம், வாசகம் – சொல். இத்திருவாசகத் திருப்பாட்டுக்கள் தெய்வ நலங்கனிந்த சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்தவை; இனிமை எளிமை ஆழமுடைமை யென்னுங் குணங்கள் தம்பால் அமையப்பெற்றவை; மெய்யன்புடன் ஓதுவார் கேட்பார் உணர்வார் எல்லோரையும் மிக்க பேரின்பத்தில் திளைப்பித்துப் பரவசப்படுத்தும் இயல்பின; அநுபவ உண்மைகளைத் தெளிவுண்டாம்படி விளக்குவன. இத்திருவாசகத்தின் அருமை பெருமைகள் அளப்பரியனவாம். இதனைப் பற்றித் தனித்து ஓர் உரைநடை நூல் எழுத எண்ணியிருக்கின்றோம் ஆதலின், ஈண்டு இம்மட்டில் அமைகின்றாம்.

திருச்சதகம்

திருச்சதகம் என்பது தெய்வத் தன்மை வாய்ந்த நூறு திருப்பாட்டுக்களைத் தன் அகத்துக் கொண்ட ஒரு பகுதி என்னும் பொருளதாம். சதம் என்னும் வட சொற்கு நூறு என்பது பொருள். அந் நூறு எண்களையுடைய திருப் பாட்டுக்களைத் தன்னகத்துக் கொண்டது என்னும் பொருளில், ஓர் இடைச்சொற் புணர்ந்து, சதகம் என்றயிற்று. ஒரு பாட்டின் ஈற்றில் உள்ள சொற்றொடர், சொல், எழுத்து என்னும் இவற்றுள் ஒன்றை அடுத்த பாட்டின் முதலாகக் கொண்டு பாடுதல் அந்தாதித் தொடர் எனப்படும். இவ் வந்தாதித் தொடராகவே இந்நூறு திருப்பாட்டுக்களும் அருளிச் செய்யப்பட்டன. “மெய்தான் அரும்பி” என முதல் திருப்பாட்டின் முதலடி தொடங்கப்பட்டு, “மெய்யர் மெய்யனே” என நூறாம் திருப்பாட்டின் இறுதி முடிக்கப்பட்டமை அறிக.

பத்தி வைராக்கிய விசித்திரம்
-------------------------------------------------
பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் இத் தொடர் இத் திருச்சதகம் முழுதும் நுதலிய பொருளைப் பற்றியதாகும். இங்ஙனமே பதிகந்தோறும் (சிவபுராண முதலிய நான்கு திருப்பாட்டுக்களையும் திருச்சதகம், நீத்தல் விண்ணப்ப முதலிய பத்துக்கு மேற்பட்ட பல திருப்பாட்டுக்களையுடைய பகுதிகளையும் தனித் தனியே பதிகம் என்று கூறுதல் முன்னையோர் வழக்கு.) அவ்வப் பதிகத்தின் திரண்ட கருத்துக்களையும் கூர்ந்து ஆராய்ந்து பண்டைப் பெரியார் ஒருவர் தலைப்புக் குறிப்பிட்டுள்ளார். இத்தொடர், பத்தி வைராக்கியங்களின் வியக்கத்தக்க பல்வேறு தன்மை யென்னும் பொருளுடையதாகும். பத்தி – இறைவனைக் குறித்து மெய்யடியார் உள்ளத்தில் நிகழும் பேரன்பு. வைராக்கியம் – பற்று அறுதி. விசித்திரம் – வியக்கத்தக்க பல்வேறு தன்மை. ஆளுடைய அடிகள் திருவாசகத்தின் முதல் திருப்பாட்டில் சிவபெருமானது அநாதி முறைமையான பழமையையும், இரண்டாம் திருப்பாட்டில் அப்பெருமானது திருவருட் புகழ்ச்சி முறைமையையும், மூன்றாம் திருப்பாட்டில் அண்டங்கள் எல்லாம் அணுவாக, அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாய் நிற்கும் இயல்பையும் அருளிச் செய்துள்ளார். திருப்பாட்டுக்களாலும் இறைவன் இயல்புகளை விளக்கிக் கூறிப் பின் நான்காம் திருப்பாட்டில், உயிர்கள் வினைக்கு ஈடாக மாயையினின்றும் உடல் முதலியன பெற்றுப் பிறக்குமாறும், பிறவும் உணர்த்தியருளினர். அதன் பின் அங்ஙனம் தோன்றிய உயிர்கள் தம் இயல்பையும், தம்மையுடைய இறைவன் இயல்பையும், தம்மைப் பிணித்திருக்கும் கட்டின் இயல்பையும் நூன் முகமாகவும், ஞானாசிரியன் உபதேசமுகமாகவும் தெளிந்து, ஆண்டவன் திருவருட்பேற்றிற்கு ஆளாதலை விரும்பி அதற்குச் சாதனமாகிய மெய்யன்பையும், பற்று அறுதியையும் மேற்கொள்ளல் வேண்டும் என்பதை, இத் திருச்சதகத்தில் அருளிச்செய்வார் ஆயினர். ஆண்டவனை அடைதற்குரிய நெறிகள் பலவற்றுள்ளும் சிறந்தது அன்பு நெறியாகும். “முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்தி நெறி யறிவித்து” என்று கூறியிருத்தலின், அந் நெறியையே அடிகள் சிறந்ததாகக் கொண்டு கடைப்பிடித்துள்ளார் என்பது தெளிவாம். ஆண்டவனைக் குறித்து அடியார் மேற்கொள்ளும் மெய்யன்பே ஈண்டுப் பத்தியென்று கூறப்படும். ஆண்டவனிடத்துப் பத்தியுண்டாகுமாயின்; இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பற்றுக்களுக்கு ஒழிவுண்டாம். உடல் முதலியவற்றின் நிலையாமையுணர்ந்து அவற்றைப் பற்றி உண்டாய அவாக்களைக் களைதற்கும், இறைவன் திருவடி கூடுதற்கும் மெய்யன்பே சிறந்த சாதனமாகும். அன்பின் இயல்பு பல திறப்படும். அன்பினால் விளையும் செயல்கள் விதிமுறை பற்றியும், விதிமுறையைக் கடந்தும் காணப்படுவனவாம். கண்ணப்ப நாயனார் வரலாறே அதற்குச் சான்றாகும். பற்றறுதியை வைராக்கியமென்று கூறுவர். உலகப் பற்றொழிவும் பலதிறப்படும். செல்வம் இருந்து நீங்கினமை, உற்றார் பெற்றார் முதலியோரால் வெறுக்கப்படுதல் முதலிய காரணங்களாலும், உலகியற் பொருள்களின் நிலையாமையுணர்ச்சி முதலியவற்றாலும் பற்றறுதியுண்டாம் என்ப. இவ்வியல்புகளைக் குறித்தே வியக்கத்தக்க பல்வேறு தன்மை என்னும் பொருள்படப் பத்தி வைராக்கிய விசித்திரம் என்றாயிற்றென்பது. இத்திருச்சதகம் பத்துப் பத்துத் திருப்பாட்டுக்களையுடைய பத்துப் பகுதிகளைத் தன்னுட் கொண்டது. இப் பகுதிகள் பதிகம் என்று கூறப்பட்டிலவாயினும், தெய்வத்தைப் பற்றிப் பெரும்பாலும் பத்துப் பாட்டுக்களாகப் பாடப்படும் பகுதியைப் பதிகம் என்று கூறும் வழக்கு உண்மையான் பதிகம் என்றே ஈண்டு எடுத்து ஆளலானேம். இப்பத்துப் பதிகங்களிலும் பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருள் விரவியுள்ளதாயினும், ஒவ்வொரு பதிகத்திலும் மெய்யுணர்தல் முதலியனவாகப் பதிகம் நுதலிய பொருள்களும் தனித் தனியாக வுள்ளன. அவற்றை அவ்வப் பதிகத்தின் தலைப்பிற் காணலாம்.

திருப்பெருந்துறைப் புராணத்தில் காணப்படுவனவாகக் குறிக்கப்பட்டுள்ள திருவாசக வுண்மையில், இத்திருச்சதகம் நுதலிய பொருள் பற்றிச் “சத்திய ஞானந்தரு தேசிகர் மோகம் சதகமாம்” என்று கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் திருப்பெருந்துறையிற் குருந்த மரத்து நீழலில் ஞானா சிரியனாக எழுந்தருளித் தமக்கு ஞானோபதேசம் செய்து மறைந்த பொழுது, அடிகள் அப்பெருமானது பிறிவாற்றாத நிலையில் இஃது அருளிச் செய்யப்பட்டது ஆதலின் “உண்மை ஞானமாகிய மெய்யுணர்வைத் தமக்குக் கருணையுடன் அருளிய ஞானாசிரியன்பால் உள்ள வரம் பிகந்த காதல் என்னும் கருப்பொருளையுடையது, இத் திருச்சதகம்” என்று கூறியதும் பொருத்தமே.

மெய்யுணர்தல்
-------------------------
மெய்யுணர்தல் என்பது பொய்ப் பொருளாகிய உடல் முதலியவற்றின் நிலையாமை கண்டு நீங்கி, மெய்ப் பொருளாகிய கடவுளை அநுபவ வாயிலாக உணர்தல் என்னும் பொருளுடையதாகும். இனி இறை உயிர் கட்டு என்னும் பொருள்களின் இயல்பை விபரீத ஐயங்களான் அன்றி உண்மையான் உணர்தல் எனினும் ஆம். பொய்யில் புலவர் திருக்குறளில் துறவற இயலில் வீடு பயக்கும் உணர்வாகிய ஞானத்தை, நிலையாமை துறவு மெய்யுணர்தல் அவாவறுத்தல் என்னும் நான்கு அதிகாரத்துள் அடக்கிக் கூறியுள்ளார். அவற்றுள் மூன்றாவதாகிய மெய்யுணர்தல் என்பதற்குப் “பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களான் அன்றி உண்மையான் உணர்தல்; இதனை வடநூலார் தத்துவ ஞானமென்ப” என்று பரிமேலழகர் உரை கூறினர். இறைவன் திருப்புகழ்களைப் பலபடக் கூறித் தம் வேண்டுகோளைப் புலப்படுத்துமுகமாக அடிகள் இப் பதிகத் திருப்பாட்டுக்களிற் புலப்படுக்கப்பட்ட பொருள் இதுவாம் என்பது. உலகம் யாக்கை இளமை செல்வம் முதலியவற்றின் நிலையாமையைப் பேச்சு அளவின் அன்றி உண்மையின் உணர்தல் வேண்டும். இவ்வுணர்ச்சி முதிர முதிர, அழிவின்றி என்றும் நிலையுதலையுடைய பொருள் யாதாகுமென்னும் ஆராய்ச்சியில் தலைப்படல் கூடும். இவ் வாராய்ச்சிக்குச் சிவாகமங்களையும், ஆகம முடிபுகளாகிய சைவ சித்தாந்த நூல்களையும் கருவியாகக் கொண்டு நேர்மையான முறையில் அவற்றின் பொருள்களை அறிதல் நன்றாம். அங்ஙனம் அறிந்த பெரியவர்களோடு அடுத்தடுத்துப் பழகித் தெளிதலும் இன்றியமையாதது. இம்முறையில் ஒழுகின் மெய்ப் பொருளாகிய கடவுளுண்மையைப் பற்றிய தெளிவுண்டாம் என்பது. அடிகள் இவ்வாறு ஒழுகி உணர்ந்தவர் என்பதை,

பற்பல பொருளா யுள்ள பாசமும் அதனை மேவி
உற்பவ பேதமான உடம்புயி ரோடுங்கு மாறும்
அற்புத புத்தி முத்தி யளித்தரு ளாலே மேலாம்
தற்பர னடாத்து மாறும் உணர்ந்தனர் சைவ நூலில்

என்று வரலாற்று நூலாசிரியர் கூறியமையானும் அறியலாம். அடிகள் அமைச்சராய் அரசியல் அதிகாரம் செல்வம் முதலிய இம்மைக்குரிய வெல்லாம் நிரம்பப் பெற்றவராயினும், சமயத் துறையில் சிறு பருவ முதலே தலைப்பட்டிருந்தமையின், பொய்ப்பொருள் கடிந்து மெய்ப்பொருள் தெளிதற்குரிய ஞானமும், மெய்ப்பொருளாகிய ஆண்டவனிடத்துப் பேரன்பும் உடையராய்க் “கூத்தினர் தன்மை வேறு கோலம்வே றாகுமா போல்” அகத்தே கடவுளுணர்ச்சியும் புறத்தே உலகியற் கடமையும் உடையராயினர் என்பது. அகமும் புறமும் வேறு படல் ஒழுக்க நெறிக்குப் பொருந்துமா எனின், உலகியலில் அது கருதத் தக்கதன்றி ஞானம் கைவரப் பெற்றாரைக் குறித்து நினைக்கத்தக்க தன்றாகலின் ஈண்டுப் பொருந்து மென்க. அடிகள் அருளிச்செய்த திருப்பாட்டுக்களின் முகமாகக் கண்ட மெய்யுணர்தல் என்னும் இஃது, இத் திருச்சதகத்தின் உட் பகுதிகளாகிய பதிகம் பத்துனுள் முதற் பதிகம் நுதலிய பொருளாகும். புகழ் மாலையாகிய இப் பதிகத் திருப்பாட்டுக்களில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பதிகம் நுதலிய பொருளும் சதகம் நுதலிய பொருளும் புலனாதலை உய்த்துணர்ந்து கொள்ளல் வேண்டும். பதிகம் நுதலிய பொருள் ஒவ்வொரு திருப்பாட்டின் இறுதியிலும், சதகம் நுதலிய பொருள் முதல் திருப்பாட்டு இறுதித் திருப்பாட்டுக்களின் இறுதியிலும், இடையிடையேயும் காட்டப்படும்.


உரை முறை


வளரும்

எழுதியவர் : (10-Dec-18, 6:43 pm)
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே