திருவாசகம்----------------------மகாமகோபாத்யாய, முதுபெரும்புலவர்பண்டிதமணி மு கதிரேசச்செட்டியார் இயற்றிய கதிர்மணி விளக்கம் உரைத் தொடக்கம் தொடர் 2

திருவாசகம்
திருச்சிற்றம்பலம்

திருவாசகம்

திருச்சதகம்



மகாமகோபாத்யாய, முதுபெரும்புலவர்பண்டிதமணி

மு. கதிரேசச்செட்டியார் இயற்றிய

கதிர்மணி விளக்கம்

உரைத் தொடக்கம்





அருளுரு வாய யானை முகத்தெம்

பெருமுதற் கடவுளின் திருவடி போற்றுதும்

வாதவூரடிகள் மலர்வாய்த் தோன்றிய

திருவாசக மெனுந் தேனின்

இன்சுவை உலகுணர்ந்து இன்புறற் பொருட்டே.



திருவாசகம் என்பது அழகிய தெய்வத்தன்மை வாய்ந்த சொற்களால் ஆகிய செய்யுள் நூல் என்னும் பொருளையுடையதாகும். இது, திருவென்னும் அடையடுத்த வாசகம் என்னும் முதற் கருவியின் பெயர். அதன் காரியமாகிய செய்யுட்கு ஆயினமையின், கருவி ஆகுபெயராம் என்ப. சிவஞான முனிவரர் பிறர் கொள்கையை மறுக்குங்கால் ஆகுபெயர் என்பதை உடன்பட்டுப்பின் “உண்மையான் நோக்குவார்க்கு அன்மொழித் தொகையாகுமன்றி, ஆகு பெயராகாமையுணர்க”எனவுங் கூறியுள்ளர். திரு என்பது தெய்வத்தன்மை, அழகு என்னும் பொருளுடையதாகும். “திரு கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு” என்று பேராசிரியர் உரை கூறினாராயினும், ஈண்டுத் தெய்வத்தன்மை என்று கொள்ளுதல் சிறப்புடைத்தாம், வாசகம் – சொல். இத்திருவாசகத் திருப்பாட்டுக்கள் தெய்வ நலங்கனிந்த சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்தவை; இனிமை எளிமை ஆழமுடைமை யென்னுங் குணங்கள் தம்பால் அமையப்பெற்றவை; மெய்யன்புடன் ஓதுவார் கேட்பார் உணர்வார் எல்லோரையும் மிக்க பேரின்பத்தில் திளைப்பித்துப் பரவசப்படுத்தும் இயல்பின; அநுபவ உண்மைகளைத் தெளிவுண்டாம்படி விளக்குவன. இத்திருவாசகத்தின் அருமை பெருமைகள் அளப்பரியனவாம். இதனைப் பற்றித் தனித்து ஓர் உரைநடை நூல் எழுத எண்ணியிருக்கின்றோம் ஆதலின், ஈண்டு இம்மட்டில் அமைகின்றாம்.



திருச்சதகம்

திருச்சதகம் என்பது தெய்வத் தன்மை வாய்ந்த நூறு திருப்பாட்டுக்களைத் தன் அகத்துக் கொண்ட ஒரு பகுதி என்னும் பொருளதாம். சதம் என்னும் வட சொற்கு நூறு என்பது பொருள். அந் நூறு எண்களையுடைய திருப் பாட்டுக்களைத் தன்னகத்துக் கொண்டது என்னும் பொருளில், ஓர் இடைச்சொற் புணர்ந்து, சதகம் என்றயிற்று. ஒரு பாட்டின் ஈற்றில் உள்ள சொற்றொடர், சொல், எழுத்து என்னும் இவற்றுள் ஒன்றை அடுத்த பாட்டின் முதலாகக் கொண்டு பாடுதல் அந்தாதித் தொடர் எனப்படும். இவ் வந்தாதித் தொடராகவே இந்நூறு திருப்பாட்டுக்களும் அருளிச் செய்யப்பட்டன. “மெய்தான் அரும்பி” என முதல் திருப்பாட்டின் முதலடி தொடங்கப்பட்டு, “மெய்யர் மெய்யனே” என நூறாம் திருப்பாட்டின் இறுதி முடிக்கப்பட்டமை அறிக.



பத்தி வைராக்கிய விசித்திரம்

பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் இத் தொடர் இத் திருச்சதகம் முழுதும் நுதலிய பொருளைப் பற்றியதாகும். இங்ஙனமே பதிகந்தோறும் (சிவபுராண முதலிய நான்கு திருப்பாட்டுக்களையும் திருச்சதகம், நீத்தல் விண்ணப்ப முதலிய பத்துக்கு மேற்பட்ட பல திருப்பாட்டுக்களையுடைய பகுதிகளையும் தனித் தனியே பதிகம் என்று கூறுதல் முன்னையோர் வழக்கு.) அவ்வப் பதிகத்தின் திரண்ட கருத்துக்களையும் கூர்ந்து ஆராய்ந்து பண்டைப் பெரியார் ஒருவர் தலைப்புக் குறிப்பிட்டுள்ளார். இத்தொடர், பத்தி வைராக்கியங்களின் வியக்கத்தக்க பல்வேறு தன்மை யென்னும் பொருளுடையதாகும். பத்தி – இறைவனைக் குறித்து மெய்யடியார் உள்ளத்தில் நிகழும் பேரன்பு. வைராக்கியம் – பற்று அறுதி. விசித்திரம் – வியக்கத்தக்க பல்வேறு தன்மை. ஆளுடைய அடிகள் திருவாசகத்தின் முதல் திருப்பாட்டில் சிவபெருமானது அநாதி முறைமையான பழமையையும், இரண்டாம் திருப்பாட்டில் அப்பெருமானது திருவருட் புகழ்ச்சி முறைமையையும், மூன்றாம் திருப்பாட்டில் அண்டங்கள் எல்லாம் அணுவாக, அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாய் நிற்கும் இயல்பையும் அருளிச் செய்துள்ளார். திருப்பாட்டுக்களாலும் இறைவன் இயல்புகளை விளக்கிக் கூறிப் பின் நான்காம் திருப்பாட்டில், உயிர்கள் வினைக்கு ஈடாக மாயையினின்றும் உடல் முதலியன பெற்றுப் பிறக்குமாறும், பிறவும் உணர்த்தியருளினர். அதன் பின் அங்ஙனம் தோன்றிய உயிர்கள் தம் இயல்பையும், தம்மையுடைய இறைவன் இயல்பையும், தம்மைப் பிணித்திருக்கும் கட்டின் இயல்பையும் நூன் முகமாகவும், ஞானாசிரியன் உபதேசமுகமாகவும் தெளிந்து, ஆண்டவன் திருவருட்பேற்றிற்கு ஆளாதலை விரும்பி அதற்குச் சாதனமாகிய மெய்யன்பையும், பற்று அறுதியையும் மேற்கொள்ளல் வேண்டும் என்பதை, இத் திருச்சதகத்தில் அருளிச்செய்வார் ஆயினர். ஆண்டவனை அடைதற்குரிய நெறிகள் பலவற்றுள்ளும் சிறந்தது அன்பு நெறியாகும். “முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்தி நெறி யறிவித்து” என்று கூறியிருத்தலின், அந் நெறியையே அடிகள் சிறந்ததாகக் கொண்டு கடைப்பிடித்துள்ளார் என்பது தெளிவாம். ஆண்டவனைக் குறித்து அடியார் மேற்கொள்ளும் மெய்யன்பே ஈண்டுப் பத்தியென்று கூறப்படும். ஆண்டவனிடத்துப் பத்தியுண்டாகுமாயின்; இவ்வுலக வாழ்க்கையில் உள்ள பற்றுக்களுக்கு ஒழிவுண்டாம். உடல் முதலியவற்றின் நிலையாமையுணர்ந்து அவற்றைப் பற்றி உண்டாய அவாக்களைக் களைதற்கும், இறைவன் திருவடி கூடுதற்கும் மெய்யன்பே சிறந்த சாதனமாகும். அன்பின் இயல்பு பல திறப்படும். அன்பினால் விளையும் செயல்கள் விதிமுறை பற்றியும், விதிமுறையைக் கடந்தும் காணப்படுவனவாம். கண்ணப்ப நாயனார் வரலாறே அதற்குச் சான்றாகும். பற்றறுதியை வைராக்கியமென்று கூறுவர். உலகப் பற்றொழிவும் பலதிறப்படும். செல்வம் இருந்து நீங்கினமை, உற்றார் பெற்றார் முதலியோரால் வெறுக்கப்படுதல் முதலிய காரணங்களாலும், உலகியற் பொருள்களின் நிலையாமையுணர்ச்சி முதலியவற்றாலும் பற்றறுதியுண்டாம் என்ப. இவ்வியல்புகளைக் குறித்தே வியக்கத்தக்க பல்வேறு தன்மை என்னும் பொருள்படப் பத்தி வைராக்கிய விசித்திரம் என்றாயிற்றென்பது. இத்திருச்சதகம் பத்துப் பத்துத் திருப்பாட்டுக்களையுடைய பத்துப் பகுதிகளைத் தன்னுட் கொண்டது. இப் பகுதிகள் பதிகம் என்று கூறப்பட்டிலவாயினும், தெய்வத்தைப் பற்றிப் பெரும்பாலும் பத்துப் பாட்டுக்களாகப் பாடப்படும் பகுதியைப் பதிகம் என்று கூறும் வழக்கு உண்மையான் பதிகம் என்றே ஈண்டு எடுத்து ஆளலானேம். இப்பத்துப் பதிகங்களிலும் பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருள் விரவியுள்ளதாயினும், ஒவ்வொரு பதிகத்திலும் மெய்யுணர்தல் முதலியனவாகப் பதிகம் நுதலிய பொருள்களும் தனித் தனியாக வுள்ளன. அவற்றை அவ்வப் பதிகத்தின் தலைப்பிற் காணலாம்.

திருப்பெருந்துறைப் புராணத்தில் காணப்படுவனவாகக் குறிக்கப்பட்டுள்ள திருவாசக வுண்மையில், இத்திருச்சதகம் நுதலிய பொருள் பற்றிச் “சத்திய ஞானந்தரு தேசிகர் மோகம் சதகமாம்” என்று கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் திருப்பெருந்துறையிற் குருந்த மரத்து நீழலில் ஞானா சிரியனாக எழுந்தருளித் தமக்கு ஞானோபதேசம் செய்து மறைந்த பொழுது, அடிகள் அப்பெருமானது பிறிவாற்றாத நிலையில் இஃது அருளிச் செய்யப்பட்டது ஆதலின் “உண்மை ஞானமாகிய மெய்யுணர்வைத் தமக்குக் கருணையுடன் அருளிய ஞானாசிரியன்பால் உள்ள வரம் பிகந்த காதல் என்னும் கருப்பொருளையுடையது, இத் திருச்சதகம்” என்று கூறியதும் பொருத்தமே.



மெய்யுணர்தல்



மெய்யுணர்தல் என்பது பொய்ப் பொருளாகிய உடல் முதலியவற்றின் நிலையாமை கண்டு நீங்கி, மெய்ப் பொருளாகிய கடவுளை அநுபவ வாயிலாக உணர்தல் என்னும் பொருளுடையதாகும். இனி இறை உயிர் கட்டு என்னும் பொருள்களின் இயல்பை விபரீத ஐயங்களான் அன்றி உண்மையான் உணர்தல் எனினும் ஆம். பொய்யில் புலவர் திருக்குறளில் துறவற இயலில் வீடு பயக்கும் உணர்வாகிய ஞானத்தை, நிலையாமை துறவு மெய்யுணர்தல் அவாவறுத்தல் என்னும் நான்கு அதிகாரத்துள் அடக்கிக் கூறியுள்ளார். அவற்றுள் மூன்றாவதாகிய மெய்யுணர்தல் என்பதற்குப் “பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களான் அன்றி உண்மையான் உணர்தல்; இதனை வடநூலார் தத்துவ ஞானமென்ப” என்று பரிமேலழகர் உரை கூறினர். இறைவன் திருப்புகழ்களைப் பலபடக் கூறித் தம் வேண்டுகோளைப் புலப்படுத்துமுகமாக அடிகள் இப் பதிகத் திருப்பாட்டுக்களிற் புலப்படுக்கப்பட்ட பொருள் இதுவாம் என்பது. உலகம் யாக்கை இளமை செல்வம் முதலியவற்றின் நிலையாமையைப் பேச்சு அளவின் அன்றி உண்மையின் உணர்தல் வேண்டும். இவ்வுணர்ச்சி முதிர முதிர, அழிவின்றி என்றும் நிலையுதலையுடைய பொருள் யாதாகுமென்னும் ஆராய்ச்சியில் தலைப்படல் கூடும். இவ் வாராய்ச்சிக்குச் சிவாகமங்களையும், ஆகம முடிபுகளாகிய சைவ சித்தாந்த நூல்களையும் கருவியாகக் கொண்டு நேர்மையான முறையில் அவற்றின் பொருள்களை அறிதல் நன்றாம். அங்ஙனம் அறிந்த பெரியவர்களோடு அடுத்தடுத்துப் பழகித் தெளிதலும் இன்றியமையாதது. இம்முறையில் ஒழுகின் மெய்ப் பொருளாகிய கடவுளுண்மையைப் பற்றிய தெளிவுண்டாம் என்பது. அடிகள் இவ்வாறு ஒழுகி உணர்ந்தவர் என்பதை,

பற்பல பொருளா யுள்ள பாசமும் அதனை மேவி
உற்பவ பேதமான உடம்புயி ரோடுங்கு மாறும்
அற்புத புத்தி முத்தி யளித்தரு ளாலே மேலாம்
தற்பர னடாத்து மாறும் உணர்ந்தனர் சைவ நூலில்

என்று வரலாற்று நூலாசிரியர் கூறியமையானும் அறியலாம். அடிகள் அமைச்சராய் அரசியல் அதிகாரம் செல்வம் முதலிய இம்மைக்குரிய வெல்லாம் நிரம்பப் பெற்றவராயினும், சமயத் துறையில் சிறு பருவ முதலே தலைப்பட்டிருந்தமையின், பொய்ப்பொருள் கடிந்து மெய்ப்பொருள் தெளிதற்குரிய ஞானமும், மெய்ப்பொருளாகிய ஆண்டவனிடத்துப் பேரன்பும் உடையராய்க் “கூத்தினர் தன்மை வேறு கோலம்வே றாகுமா போல்” அகத்தே கடவுளுணர்ச்சியும் புறத்தே உலகியற் கடமையும் உடையராயினர் என்பது. அகமும் புறமும் வேறு படல் ஒழுக்க நெறிக்குப் பொருந்துமா எனின், உலகியலில் அது கருதத் தக்கதன்றி ஞானம் கைவரப் பெற்றாரைக் குறித்து நினைக்கத்தக்க தன்றாகலின் ஈண்டுப் பொருந்து மென்க. அடிகள் அருளிச்செய்த திருப்பாட்டுக்களின் முகமாகக் கண்ட மெய்யுணர்தல் என்னும் இஃது, இத் திருச்சதகத்தின் உட் பகுதிகளாகிய பதிகம் பத்துனுள் முதற் பதிகம் நுதலிய பொருளாகும். புகழ் மாலையாகிய இப் பதிகத் திருப்பாட்டுக்களில் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் பதிகம் நுதலிய பொருளும் சதகம் நுதலிய பொருளும் புலனாதலை உய்த்துணர்ந்து கொள்ளல் வேண்டும். பதிகம் நுதலிய பொருள் ஒவ்வொரு திருப்பாட்டின் இறுதியிலும், சதகம் நுதலிய பொருள் முதல் திருப்பாட்டு இறுதித் திருப்பாட்டுக்களின் இறுதியிலும், இடையிடையேயும் காட்டப்படும்.



உரை முறை



இனி ஒவ்வொரு திருப்பாட்டிற்கும் கருத்துரைத்தல், கண்ணழித்தல் பொழிப்புத் திரட்டல் அகலங்கூறல் என்னும் நான்கு வகையாகக் கொண்டு உரை விளக்கம் செய்யப்படும். அவற்றுள் கருத்துரைத்தலாவது, திருப்பாட்டை அடுத்து அதன் திரண்ட கருத்தையும் முன்னைத் திருப்பாட்டோடு உள்ள இயைபையும் சுருக்கிக் கூறுதலாகும். கண்ணழித்தல் என்பது, பதப்பொருள் சொல்லுதல், பொழிப்புத் திரட்டல் என்பது, மூல பாடத்தின் பதங்களை விட்டு அவற்றிற்குச் சொல்லிய பொருள்களைத் திரட்டிக் காட்டுதல். இவ்விரண்டு வகையும் பதப்பொருள் கூறுமுகமாக அமையும் ஆதலின், விரிவஞ்சிப் பொழிப்புத் திரட்டுதலைத் தனியே கூறினேம் அல்லேம். அகலங் கூறலாவது, திருப்பாட்டின் பொருளைத் தூய்மை செய்தற்கு வினா விடை உள்ளுறுத்தும், ஆற்றன் முதலியவற்றாலும் குறிப்பாலும் சொற்களின் அமைந்து கிடக்கும் பொருள் நயங்களை விளக்கியும், இன்றியமையாத இடங்களில் மேற்கோள் காட்டியும் விளக்கிக் கூறுதலாகும். இம்மூன்றும் முறையே கருத்துரை, பதவுரை, விளக்கவுரை என உரிய இடங்களில் எடுத்தாளப்படும்.

—————————–

தி ரு ச் ச த க ம்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

1. மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்
துன்விரை யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை
யாயென்னைக் கண்டுகொள்ளே.

கருத்துரை: பத்தி வைராக்கியங்களில் மன மொழி மெய்கள் மூன்றும் ஈடுபடல் வேண்டும். இறைவனை மெய்ப் பொருளென உணர்ந்து மனத்தால் நினைந்தும், மொழியாற் பாராட்டியும், மெய்யால் வணங்கியும் அன்பு செய்தல் பத்தியாம். உலக வாழக்கையைப் பொய்யென உணர்ந்து, அம் முக்கரணங்களாலும் வெறுத்துவிடல் வைராக்கியமாகும். ஆகவே, ஆளுடைய அடிகள் முதலிற் பத்திநிலையைப் புலப்படுத்துவாராய்த் தம் மன மொழி மெய்கள் ஆகிய முக்கரணங்களும் இறைவன் வயப்பட்ட செய்தியை இம் முதல் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார்.

பதவுரை: என் மெய்தான் அரும்பி – என் உடல் புளகித்து, விதிர் விதிர்த்து – மிக நடுங்கி, உன் விரையார் கழற்கு – நின் மணம் பொருந்திய திருவடி மலரைக் குறித்து, கை தான் தலை வைத்து – கைகளைத் தலைமேற் குவித்து, கண் நீர் ததும்பி – கண்களில் நீர் நிரம்பி வழிந்து, உள்ளம் வெதும்பிப் பொய் தான் தவிர்ந்து – மனம் வெதும்பிப் பொய்மை நீங்கப்பெற்று, உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் – நினக்கு வணக்கம் வெல்க வெல்க வணக்கம் என்று கூறும், கை தான் நெகிழ விடேன் – ஒழுக்கத்தைத் தளரவிடேன், உடையாய் – எல்லாம் உடைய ஆண்டவனே, என்னைக் கண்டுகொள் – எளியேனாகிய என் இயல்பைக் கண்டு அடிமையாக ஏற்றுக்கொள்வாயாக என்பது.

விளக்கவுரை: அரும்புதல் – முகிழ்த்தல்; மயிர் சிலிர்த்தல். விதிர் விதிர்த்தல் – மிக நடுங்குதல். தமக்கு இனிய தலைவனை நினைந்த துணையானே உண்டாம் அன்பு மேலீட்டால் மயிர் சிலிர்த்தலும் நடுங்குதலும் அடிகளுக்கு நிகழ்ந்தன வென்பது. அன்பிற்கு இடனாகிய பொருளை நினைந்த அளவில் இன்பவுணர்ச்சி யுண்டாதலும், அதன்சத்துவமாக உடம்பில் மயிர் சிலிர்த்தலும், அந் நினைவின் முதிர்ச்சியில் நடுக்கம் உண்டாதலும் இயல்பாதலின், “மெய்தானரும்பி விதிர் விதிர்த்து” என்றார். அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகிய மெய்ப்பாடுகளுள் நடுக்கமும் ஒன்றாகும். அஃது அன்பும் அச்சமும் காரணமாக நிகழும் என்ப. ஈண்டு அன்பு காரணமாகும். இம் மெய்ப்பாடுகள் காமம் பற்றியும் நிகழுமாதலின், அதனை விலக்குதற்கு, “உன் விரையார் கழற்கு” என்றார். விரையென்னும் அடையால் திருவடி மலர் என்பது பெற்றாம். திருக்கோவையில், “வெற்றியார் கழல்” என்று கூறப்பட்ட இடத்து, “இறைவன் திருவடிகள் எல்லாப்பொருள்களையும் கடந்து நின்றனவாயினும், அன்பர்க்கு அணியவாய், அவரிட்ட நறுமலரான் வெறி கமழும் என்பது போதர, ‘வெறியார் கழல்’ என்றார்” என்று பேராசிரியர் கூறியதற்கேற்பத் திருவடிகளுக்கு ஏற்றிக் கூறுதலுமாம். கண்ணீர் ததும்புதல், உள்ளம் உருகிய நிலையில் நிகழ்வதாகலின், பின் வரும் உள்ளத்தை ஒட்டிக் கூறப்பட்டது. “வெதும்பல்”, உருகுதல் என்னும் பொருட்டு.
பொய்மை – மாயா காரியமாகிய பொய்ப்பொருள் மெய்யென்றுணரும் மயக்க வுணர்வு. இதனை, “பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருள்” என்பர் திருவள்ளுவர். இது நீங்கினாலன்றிச் சிவக்காட்சி யெய்தல் அரிதாகலின், “பொய் தவிர்ந்து” என்றார். “போற்றி“, ஈண்டு வணக்கத்தைக் குறிக்கும். இனி வணக்கம் கூறுதல் நாவளவின் இருத்தல் ஆகாதென்பார், “பொய் தவிர்ந்து” என்றாரெனினுமாம். “சய சய” வென்பது வெல்க வெல்க என்று வாழ்த்தியபடியாம். இறைவன் வெற்றிக்கு வாழ்த்தாக அங்ஙனங் கூறியது, அடிகள் மேற்கொண்ட சிவநெறியில் வெற்றி குறித்தாம்.

“வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்” என்பதும் ஈண்டு நினைக்கத் தக்கது. இறைவனைக் குறித்து வாழ்த்துதல் வணங்குதல் என்னும் இரண்டனுள்ளும் வணக்கமே அடியார்க்குச் சிறந்ததென்பது தோன்ற, “சய சய” என்பதன் முன்னும் பின்னும் வணக்கப்பொருள் குறிக்கும் போற்றி கூறப்பட்டது. கை – ஒழுக்கம். “கையொன்றறிகல்லாய்” என்ற இடத்து, கை யென்பது இப்பொருட்டாதல் அறிக. நெகிழ விடுதல் – சிறிது தளர்த்தல். இத்துணையும் மனம் மொழி மெய்கள் இறைவன் வயப்பட்டமை கூறியபடியாம். “உள்ளம் வெதும்பி, பொய் தவிர்த்து” என்றமையால் மனமும், “போற்றி சய சய போற்றி” என்றமையால் மொழியும், மெய்யரும்புதல் முதல் கண்ணீர் ததும்புதல் ஈறாக உள்ள செயல்களால் மெய்யும் இறைவன் வயப்பட்டன என்பது கருத்து.



அடிகள் தம் ஒழுக்கத்தின் சோர்வின்மையை உயிர்க்குயிராக விளங்கும் இறைவன் அறிய மேற்கொண்டமை தோன்ற “என்னைக் கண்டு” எனவும், முக்கரணமும் இறைவன் வயப்பட்ட இந்நிலையே ஆட்கொள்ளுதற் கேற்றதென்பார் “கண்டுகொள்” எனவும் அருளிச் செய்தனர். “கண்டு கொள்ளல்” என்பது உலகவழக்கில் ஒரு சொன்னீர்மைத்தாய், பெரியோன் ஒருவனைச் சிறியவன் காண்டலில் வழங்கப்படுவது. இங்கே அடிகள் ஆண்டவனை நோக்கிக் கூறியதாகலின் அங்ஙனங் கோடல், ஆண்டான் அடிமைகளின் பெருமைக்கு இழுக்காமென்க. இத் திருச்சதகத்தின் முதல் திருப்பாட்டால் அடிகள் தம் இயல்பு கூறினாராயினும், அடிகளின் அன்பு வடிவத்தை நம்மனோர் நெஞ்சக்கிழியின் ஓவியமாகப் பொறித்து நினைவுகூர்தற்கு இத் திருப்பாட்டு மிகவும் பொருந்தியதென்பது அறிந்து இன்புறத்தக்கது. வடமொழியார் இத்தகைய திருப்பாட்டுக்களைத் தியானசுலோகம் என்ப. அடிகளின் மனம் மொழி மெய்கள் இறைவயப்பட்ட நிலையைக் குறிக்கும் இத் திருப்பாடற் கருத்தே இத் திருச்சதகத்தின் இறுதித் திருப்பாட்டிலும் தெளிவாக்கப்பட்டிருத்தல் அறியத்தக்கது.



“தான்” நான்கும் அசைகள். ஈண்டுள்ள வினையெச்சங்களுள், அரும்பி, விதிர் விதிர்த்து, ததும்பி, வெதும்பி என்பன சினைவினைகள்; ஏனைய முதல்வினைகள். சினை வினைகள் எல்லாம், “அம்முக் கிளவியுஞ் சினை வினை தோன்றிற், சினையொடு முடியா முதலொடு முடியினும், வினையோ ரனைய வென்மனார் புலவர்” என்னும் விதிப்படி, “என்னும்” என்ற முதல் வினையைக் கொண்டு முடிந்தன. “உன்னை” என்பதில் நான்கனுருபில் இரண்டாவது மயங்கிற்று.

இதன்கண், மெய் அரும்புதல் முதலியவாகக் கூறப்பட்ட கரணங்களின் செயல்களால் பத்தியும், “பொய் தவிர்த்து” என்றதனால் வைராக்கியமும் பெறப்படுதலின், பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும், பொய் தவிர்த்து முக்கரணமும் ஆண்டவனைப்பற்றி நிகழ்தலே மெய்யொழுக்கமாகும் என்னும் உண்மை பெறப்படுதலின், மெய்யுணர்தலாகிய பதிகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.



2. கொள்ளேன் புரந்தரன் மாலயன்
வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல்
லால்நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே
யிருக்கப் பெறின் இறைவா
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்
லாதெங்கள் உத்தமனே.

கருத்துரை: அடிகள் தம் மனம் மொழி மெய்கள் இறைவன் வயப்பட்ட செய்தியை முதல் திருப்பாட்டில் வெளிப்படுத்தி, அக்கரணங்கள் பிறர் வயப்படா என்பதை இத் திருப்பாட்டில் புலப்படுத்து அருளுகின்றார்.

பதவுரை: எங்கள் உத்தமனே இறைவா – அடியேமாகிய எங்கள் தலைவனே இறைவனே, புரந்தரன் மால் அயன் வாழ்வும் கொள்ளேன் – இந்திரன் திருமால் பிரமன் என்னும் இவர்தம் வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்ளேன், குடி கெடினும் — குடிப்பிறப்பிற்குரிய பெருமை கெட நேரினும், நினது அடியாரோடு அல்லால் நள்ளேன் — உன்னுடைய அடியாரோடல்லாமல் பிறரோடு நட்புக்கொள்ளேன், திருவருளாலே இருக்கப்பெறின் — நின் திருவருளாலே இருக்க நேரின், நரகம் புகினும் எள்ளேன் — நரகத்தின் கண்ணே செல்லினும் அதனை இகழ்ந்து பேசேன், உன்னையல்லாது பிற தெய்வம் உள்ளேன் — உன்னை அல்லாமல் வேறு தேவர்களை மனத்தாலும் நினையேன், என்பது.

விளக்கவுரை: திருமால் பிரமன் வாழ்க்கைகளிலும் இந்திரன் வாழ்வு இன்ப நுகர்ச்சிக்குச் சிறந்ததாகலின் அது முற்கூறப்பட்டது. புரந்தரன் முதலியோர் தம் வாழ்க்கை நலங்களை வலிந்து தர முற்பட்டாலும் விரும்பேன் என்பது தோன்றக் “கொள்ளேன்” என்றார். “கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர், கொள்ளே னென்றல் அதனினும் உயர்ந்தன்று” என்று உலகியல் பற்றிக் கூறிய புறப்பாட்டின் கருத்தும் ஈண்டு நினைக்கத்தக்கது. “குடி” ஆகுபெயர். குடிப்பிறப்புப் பெருமை கெட நேருங்கால், தாங்குவோர் யாவராயினும், அவரை நட்புக்கோடல் அப் பயன்கருதித் தகுமாயினும். அங்ஙனம் நட்புக் கொள்ளப்பட்டார் நின் அடியரல்லராயின், அவர் நட்புத் திருவருட்கு விலக்காக நின்று குடிப்பிறப்புக்கு வரும் கேட்டினும் மிக்க கேடுவிளைக்கும் என்பது கருதிக், “குடிகெடினும் நள்ளேன்” என்றார். அடியார் உறவு அக்குடிப் பெருமையினும் சிறந்த பேறு அளிப்பதாகலின், அவ்வுறவையே வேண்டுவேன் என்பதை வலியுறுத்தற் பொருட்டு, “அடியாரொடல்லால் நள்ளேன்” என எதிர்மறை முகத்தாற் கூறினார். திருவருட் பேறுடையார் நரகம் புகுதல் எக்காலத்தும் இன்றென்பது தோன்றப் “புகினும்” என்றார். உம்மை, புகுதலின்மையை விளக்கி நின்றது. ஒரோவழிப் புகநேரினும், ஆண்டிருத்தல் திருவருட்கு உடன்பாடாயின் அவ்விருப்பையும் இகழ்ந்து கூறேன் என்றார். உயர்வு இழிபு நோக்காது யாங்குறினும் இறையருளில் தலைப்படுதல் ஒன்றையே குறிக்கோளாக உடைமையின். “திருவருளாலே” என்புழி, ஏகாரம் தேற்றப் பொருளது; வேறு நலம் பயக்கும் காரணம் யாதாயினும் இழிவாகக் கருதுவேன் என்பது தோன்ற நின்றமையின் “பிரிநிலை” யெனலுமாம். “எங்கள்” என்றது மற்றை யடியாரையும் உள்ளிட்டு.

பிற தேவர்களுக்கு இல்லாத பரம்பொருள் தன்னை சிவபெருமானுக்கு உண்மை கருதி, “உத்தமனே”, “இறைவா” எனவும், புரந்தரன் முதலியோர்க்கு அத் தன்மை இன்மை கருதி, அன்னாரைப் “பிற தெய்வம்” எனவும் கூறினர். உத்தமன் என்றதனால் தலைமைத் தன்மையும், இறைவன் என்றதனால் எங்கும் நிறைந்த முழுமுதல் தன்மையும் ஆகிய பரம்பொருட்டன்மை பெறப்படும். தெய்வம் என்றது சாமானிய தேவரைக் குறிக்கும். பிறரெல்லாம் விரும்பும் விண்ணுலக வாழ்க்கையும் மண்ணுலக வாழ்க்கையும் எத்துணைச் சிறந்தனவாயினும், அவற்றை வேண்டேன் என்பார், முறையே “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு” எனவும், “குடி கெடினும் நள்ளேன் நினதடியா ரொடல்லால்” எனவும், பிறர் விரும்பாத கீழுலக வாழ்க்கை வேண்டாத தொன்றாயினும், ஆண்டிருத்தல் திருவருட்கு உடன்பாடாயின் வேண்டுவேன் என்பார் “நரகம் புகினும் எள்ளேன்” எனவும் கூறினர். அடியாரோடு கொள்ளும் நட்புத் திருவருட் பேற்றிற்கு ஏதுவாகலின், அது மண்ணுலக வாழ்க்கையைக் குறித்த தாகாமை உணர்க. அடிகள் “சிவபிரானையன்றி வேறு தேவரைப் பரம்பொருளாகச் சிறிதும் நினைந்திலேன் என்பார், “உள்ளேன் பிற தெய்வம்” என்றார். “மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது” என்று பிறிதோரிடத்துக் கூறியதுங் காண்க.

உள்ளுதல் மனத்தின் செயலாதலின், “உள்ளேன்” என்றதனால் மனமும் இகழ்ந்து கூறுதல் வாக்கின் செயலாதலின், “எள்ளேன்” என்றதனால் மொழியும், வாழ்க்கை நலம் பொறி நுகர்ச்சியாலும், நட்புக்கோடல் புணர்ச்சி பழகுதலாலும் ஆவன் ஆதலின், “கொள்ளேன்” “நள்ளேன்” என்றமையால் மெய்யும் ஆகிய முக்கரணங்களும் பிறர் வயப்பட்டில அறிக. “வாழ்வும்” என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.

இதன்கண், “நினதடியா ரொடல்லால் நள்ளேன்” என்றாதனால் பத்தியும், “கொள்ளேன்” “உள்ளேன்” என்பனவற்றால் வைராக்கியமும் பெறப்படுதலின், பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும், “உன்னை யல்லாது பிற தெய்வம் உள்ளேன்” என்றதனால் மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.



3. உத்தமன் அத்தன் உடையான்
அடியே நினைந்துருகி
மத்த மனத்தொடு மால்இவன்
என்ன மனைநினைவில்
ஒத்தன ஒத்தன சொல்லிட
ஊரூர் திரிந்துஎவரும்
தத்தம் மனத்தன பேசஎஞ்
ஞான்றுகொல் சாவதுவே

கருத்துரை: தன் மனம் முதலியன பிறர் வயப்படாமல் சிவபிரான் ஒருவனையே பற்றி நிற்கும் என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், அங்ஙனம் நிகழும் தம் நினைவு சொற்செயல்கள் உலகத்தவர்க்கு மாறுபாடாகத் தோன்றினும் அந்நிலை மகிழ்ந்து ஏற்கத்தக்கது என்பதை இத் திருப்பாட்டிற் கூறுகின்றார்.

பதவுரை: உத்தமன் அத்தன் உடையான் — தலையாயவனும் தந்தையும் உடையானும் ஆகிய இறைவனுடைய, அடியே நினைந்து உருகி — திருவடியே இடையறாது எண்ணி உள்ளம் உருகி, இவன் மால் என்ன — இவன் மயக்கமுற்றான் எனப் பிறர் கருதும்படி, மத்த மனத்தொடு — களிப்பேறிய நெஞ்சத்தோடு, ஊர் ஊர் திரிந்து — பல ஊர்களிலும் போக்கு வரவு செய்து, மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட — என் உள்ளக்கருத்திற் பொருந்தின பொருந்தின செய்திகளை யான் பேச, எவரும் —இந்த நிலையைக் கண்டார் எல்லோரும் , தம் தம் மனத்தன பேச — தங்கள் தங்கள் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்திச் சொல்ல, சாவது எஞ்ஞான்று — இவ்வுலக வாழ்க்கையினின்றும் ஒழிவடைவது எப்பொழுது? என்பது.

விளக்கவுரை: நினைந்து உருகி என்னத் திரிந்து சொல்லிடப் பேசச் சாதல் எஞ்ஞான்று என முடிக்க. ஏகாரங்கள் இரண்டனுள், முன்னது பிரிநிலையும், பின்னது ஈற்றசையுமாம். “கொல்” அசை நிலை.

உலகத்து அறிவுடைப் பொருள்களை நோக்க, இறைவன் ஆண்டான் எனவும் அவை அடிமை எனவும், அறிவில் பொருள்களை நோக்க, அவன் உடையான் எனவும் அவை உடைமை எனவுங் கூறுப. இம்முறையில் அறிவுடைப் பொருள்களை ஆளும் இயல்புடைமையால் ஆண்டான் என்பது போதர உத்தமன் எனவும், அறிவின் பொருள்களை உடைமையாகக் கொள்ளும் இயல்பினன் என்பது போதர உடையான் எனவும் கூறினர். ஓர் அரசன் புதல்வன் வேடர் சூழலிற் பட்டுத் தன் இயல்பை அறியாமல் வளர்ந்தானாக, நல்லூழ் வயத்தால், “நீ வேட்டுவன் மகனல்லை; உண்மையில் என் புதல்வனாவாய்” என அறிவித்து, அவ்வரசர் அப் புதல்வற்குத் தன் அரசுரிமைச் செல்வத்தை நல்குதல் போல, அடிகள் ஐம்புலமாகிய வேடர் சூழலிற் பட்டுத் தம் இயல்பு அறியாமல் இருந்த நிலையில், கட்டறுக்கும் பருவம் உற்றமையால், “நீ புலனுகர் இன்பம் பெறுதற்கு உரியை அல்லை; உண்மையில் பேரின்பம் நுகர்தற்குரிய என் புதல்வனாவாய்” என மெய்யுணர்வால் அறிவித்து, இறைவன் தன் பேரின்பப் பெருஞ் செல்வத்தை அருளிக் காத்தமை தோன்ற, “அத்தன்” என்றார். ஆண்டவன் திருவருளை நினைத்தற்கு அவன் திருவடியே அன்றி வேறு பற்றுக்கோடு இன்மையால், “அடியே நினைந்து” எனவும், அந்நினைவின் முதிர்ச்சி தோன்ற, “உருகி” எனவும் கூறினர்.

அடிகள் தம் புறச்செயலைக் கண்ட பிறர், உண்மை யுணராமல் பித்துப்பிடித்து மயங்கினர் என்று கருதும்படி, பல ஊர்களிலும் சிவதரிசன நிமித்தம் போக்குவரவு செய்து, சிவானந்தத் தேறலை மிகுதியாக உண்டு, அக் களிப்பினால் உலகியலை மறந்து தம் உள்ளக் கருத்திற்குப் பொருந்தின பொருந்தினவாகிய மெய்யன்பு மயமான சொற்களைத் தாம் பேசவேண்டும் என்பார், “மாலிவன் என்ன மத்த மனத்தொடு ஊரூர் திரிந்து மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட” எனவும், அடிகள் அங்ஙனம் உலகியலை நோக்காமல், இறையருள் வயப்பட்டுத் தம் அநுபவத்திற் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துக் கூறும் மொழிகளைக் கேட்பார் எல்லோரும் தத்தம் உள்ளங்களில் நல்லனவாகவும் தீயனவாகவும் தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்துக் கூறினும் கூறுக என்பார், “எவரும் தத்தம் மனத்தன பேச” எனவும் கூறினர். அடிகள் அருட்செயலைக் கண்டாருள் ஒரு சாரார், அவர் தம் மெய்யன்பின் இயல்பை உய்த்துணர்ந்து, அவ்வுணர்ச்சியால் தம் உள்ளத்துத் தோன்றிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துப் பாராட்டிப் புகழ்ந்து கூறுவர் என்பதும், பிறிதொரு சாரார் உண்மை யுணராமல், புறச்செயலைக் கண்டு, அக் காட்சி காரணமாகத் தம் உள்ளத்துத் தோன்றிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்து இகழ்ந்து கூறுவர் என்பதும், “எவரும் தத்தம் மனத்தன பேச” என்னுந் தொடரிற் குறிப்பிற் புலனாதலறிக. புகழ்ந்து கூறுதலையும் இகழ்ந்து கூறுதலையும் குறித்து மனத்தனவெனப் பன்மையாற் கூறினர் என்பது. இங்ஙனம் தம்மைப் புகழ்வாரும் இகழ்வாரும் முறையே நல்வினை தீவினைகளை ஏற்றுக்கொள்ள, அதன் முகமாகத் தமக்கு வினையொழிவு உண்டாக வேண்டுமென்பது அடிகள் கருத்தன்று. “கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றி” என்றபடி, ஆண்டவன் அருளினால் வினை ஒழிதல் வேண்டும் என்பதே குறிக்கோள். ஆயினும் ஞானநிலை யுடைய பெரியோன்பால் அமைந்து கிடைக்கும் ஆகாமிய கன்மமாகிய நல்வினை தீவினைகள், முறையே அப் பெரியோனைப் புகழ்வார்பாலும் இகழ்வார்பாலும் அடைய, அவற்கு அவ்வினை யொழிவுண்டாம் என்பது அறிவியல் நூலிற் கண்டதாகலின், அம்முறையாலும் அடிகளின் உண்மை அன்பைக் கண்டு புகழ்ந்து கூறுவார், ஆகாமிய கன்மத்துள் நல்வினைப் பகுதியையும், புறச்செயலைக் கண்டு எள்ளிக் கூறுவார் தீவினைப் பகுதியையும் ஏற்றுக்கொள்ள, வினையொழிவுண்டாம் என்பதும் ஈண்டுக் கருதத் தக்கது. “சாதல்” — ஈண்டுக் கட்டறுத்து உலக வாழ்வினின்றும் ஒழிவு பெருதலைக் குறிக்கும். அடிகள் “சகம்பேயென்று தம்மைச் சிரிப்ப, நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை பூணதுவாகக்” கொண்டு, உலக வாழ்க்கையினின்றும் ஒழிவு பெறுதல் எப்பொழுது வாய்க்குமோ என்பார், “எஞ்ஞான்று கொல் சாவதுவே” என்றார்.

இத் திருப்பாட்டில், “ஒத்தன ஒத்தன சொல்லிட” என்பதும், “தத்தம் மனத்தன பேச” என்பதும் ஆகிய இரண்டனையும் பிறர் கூற்றுக்களாகக் கொண்டு, முறையே உள்ளூராரும் அயலூராரும் அடிகளைக்கண்டு கூறியனவாகப் பலரும் உரை கூறியுள்ளார். உள்ளூரார் அயலூரார் கூற்றுக்களை நினைந்து அடிகள் கூறினாரென்றதில் ஒரு பொருட்சிறப்பின்மையையும், பின்னர் “எவரும் தத்தமனத்தன பேச” என்றதனால், முன்னர் “ஒத்தன ஒத்தன சொல்லிட” என்பது அடிகள் கூற்றென்பது தானே பெறப்படுதலையும் அவர் உணர்ந்திலர். அதனால் அஃது உடையன்றென்பது தெளிக.
இதன்கண், உலகத்தவர் புகழ்தலினும் இகழ்தலினும் விருப்பு வெருப்புக் கொள்ளாமல், திருவருள் ஒன்றிலே தோய்ந்து நிற்றல் மெய்யுணர்வின் பயனாம் என்பது பெறப்படுதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.



4. சாவமுன் னாள்தக்கன் வேள்வித்
தகர்தின்று நஞ்சம் அஞ்சி
ஆவஎந் தாயென் றவிதா
இடுநம் மவரவரே
மூவரென் றேயெம் பிரானொடும்
எண்ணிவிண் ணாண்டுமண்மேல்
தேவரென் றேஇறு மாந்தென்ன
பாவந் திரிதவரே.

கருத்துரை: தம் மனம் முதலியன பிறர் வயப்படாமல் சிவபிரானையே பற்றி நிற்கும் என முன்னர்க் கூறிய அடிகள், அங்ஙனம் பிற தேவர் வயப்படாமைக்குத் தாம் அறிந்த காரணத்தை இத் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார்.

பதவுரை: முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று — முன் ஒரு காலத்தில் தக்கன் என்பான் இயற்றிய வேள்வியில் அவியாகப் பெய்த ஆட்டுக்கடாவின் இறைச்சியைத் தின்றும், நஞ்சம் சாவ அஞ்சி — திருப்பாற்கடலில் எழுந்த பெரு நஞ்சைக் கண்டு சாதற்கு அஞ்சியும், எந்தாய் ஆ! ஆ! என்று அவிதா இடும் நம்மவர் அவரே — எங்கள் தந்தையே ஆ! ஆ! என் செய்வோம்! என்று கதறித் துன்ப முறையீடு செய்யும் நம்மனோராகிய அத் தேவர்களே, எம்பிரானொடு மூவர் என்று எண்ணி — எம்பெருமானாகிய சிவ பரம்பொருளொடு தம்மையும் சேர்த்து மூவராவோம் என்று நினைத்து, விண் ஆண்டு — விண்ணுலகத்தில் ஒரு கூறு ஆட்சி புரிந்து, மண்மேல் தேவர் என்று இறுமாந்து திரிந்தவர் — நிலவுலகத்தில் யாம் முதற்கடவுள் ஆவேம் என்று செருக்கித் திரிந்தவர், என்ன பாவம் — இஃதென்ன தீவினைப் பயன் இருந்தவாறு! என்பது.

விளக்கவுரை: தின்றும் அஞ்சியும் என்று இடும் நம்மவர் எனவும், எண்ணி ஆண்டு என்று இறுமாந்து திரிதவர் எனவும் முடிக்க. தின்றும் அஞ்சியும் என்புழி, எண்ணும்மைகள் தொக்கு நின்றன. “அவரே” “தேவரன்றே” என்பவற்றில் உள்ள ஏகாரங்கள், முறையே பிரிநிலையும், தேற்றமுமாம். திரிதருவர் என்றது ரகர வுகரம் கெட்டு, “திரிதவர்” என்றாயிற்று. தக்கன் சாவ வேள்வித் தகர் தின்றும் என இயைத்து, “சாவ” என்பதைக் காரியப்பொருட்டாக்கலும் ஒன்று. தக்கன் என்பான் வேள்வித் தலைவனாகிய சிவபிரானை வெறுத்து, மற்றைத் தேவர்களை அழைத்து வேள்வி இயற்ற, அவ்வேள்வியிற் கிடைத்த அவியுணவை அன்னார் உண்டதே அவன் அழிவிற்குக் காரணம் ஆயிற்றென்பதாம். அவியுணவு ஏற்குந் தகுதி தமக்கு இன்று என்பதை உணராமல், ஊன்சுவையில் ஈடுபட்டு, அவ்வாட்டு இறைச்சியை உண்டனர் என்பது போதர, அவியேற்றென்னாது, “தகர் தின்று” எனவும், அங்ஙனம் தின்றற்கு முற்படும் இயல்பினர் நஞ்சத்தைக் கண்டுழிப்பின்னிட்டு நடுங்கினரென்பது தோன்ற, “நஞ்சம் அஞ்சி” எனவும் கூறினர். தகர் ஊன் தின்று என்னாது “தகர் தின்” றென்றது, “யாட்டினின் பாலென மூலமுமாம்” (ஆவின் பாலோ எனக் கருதினார்க்கு, உண்மை உணர்த்தி விலக்க, ஆட்டுப்பால் என்றனராம்; அது கேட்டவர் ஆட்டுப்பால் ஒன்றோ, அதன் மூலமும் ஆகும் என்றனராம். மூலம் ஆட்டு உடல் இறைச்சியைக் குறிப்பதாகும். — பிட்சாடனர் நவமணி மாலை, செ. 4) என்றாற் போல, அவ்விறைச்சி யுண்டலின் வேட்கை மிகுதி குறித்து நின்றது. தக்கன் சிவபிரானை வெறுத்து, அவி தர அழைக்குங்கால், “அப்பெருமான் நம் தந்தையாவரே; அவரை வெறுத்த இடத்தில் நாம் சென்று களித்தல் ஆகாதே” என்று எண்ணாமல் சென்று உண்ட தீச்செயலைக் கண்டு, வீரபத்திரர் ஒறுத்த ஞான்று, அத்துன்பம் பொறாது வருந்தினரென்பதும், அமுதம் பெறக் கடல் கடைந்துழி, நஞ்சு தோன்றிற்றாக, அதற்கு அஞ்சி, அந்நஞ்சினால் தமக்கு ஏதம் விளையாவாறு விரைந்து வெளிப்பட்டுக் காத்தருள வேண்டும் என்று கதறி முறையிட்டனரென்பதும் போதர, “எந்தாய் ஆ ஆ என்று அவிதா இடும்” எனவும், அங்ஙனம் முறையிட்டவர், பாசக் கட்டுடைய மக்களாகிய நம்மை ஒத்தவர் என்பது விளங்க, “நம்மவர் அவரே” எனவும் கூறப்பட்டன.

“ஆவா” என்பது ஆவ எனக் குறைந்து நின்றது. “அவரே” என்பதில் உள்ள ஏகாரம் உயிர்த்தன்மையரே அன்றிப் பிறரல்லர் என்பதைத் தெளிவித்தலால் தேற்றப் பொருட்டாம். “அவிதா” என்பது கேடு நேர்ந்துழிக் கூறப்படும் முறையீட்டுச் சொல். “விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும், உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்” என்று கொற்றவையைப் பரவு முகமாகச் சிவபெருமான் பெருமை கூறப்பட்டது ஈண்டு நினைக்கத்தக்கது. பிரமன் முதலிய தேவர்கள் எல்லாம் மும்மலம் உடைய சகல வருக்கத்தினராதலின், மக்கள் தன்மையராகக் கருதப்பட்டு, “நம்மவரவரே” எனப்பட்டனர்.

வேள்வியிற் பெற்ற ஆட்டிறைச்சியை உண்டற்கு முற்பட்ட தேவர்கள், நஞ்சம் வெளிப்பட்ட பொழுது அதனை அடக்கும் ஆற்றல் இல்லாமையொடு, அதற்கு அஞ்சித் தமக்கு கேடு நேராவாறு சிவபிரானைக் குறித்து, “எங்கள் தந்தையே காத்தருள்க” என முறையிட்டனர் என்னும் இதனால், அன்னார் தலைமைப் பேற்றிற்கு உரியரல்லர் என்பது வெளிப்படையாகும்.

இவ்வுண்மை யறிந்தும், பிரமன் திருமால் உருத்திரன் என்னும் முறையில் சிவபிரானை உருத்திரனாக எண்ணி, அவனோடு தம்மையும் ஒத்த நிலையில் வைத்து எண்ணுதல் அவர் தம் செருக்கைப் புலப்படுத்துவதாகும். இவ்வரிசையில் வைத்து எண்ணப்படும் உருத்திரன், அயன் மாலொடுங் கூடக் குணதத்துவத்தின் வைகிப் பிரகிருதி புவனாந்தம் சங்கரிக்கும் குணிருத்திரனாவான். சுத்த மாயா புவனாந்தம் சங்கரிக்கும் சங்கார காரணனே பரமசிவனாவான். இதனை, “இவ்வேறுபாடுணராது மகாருத்திரனாகிய பரமசிவனைக் குணிருத்திரனாக வைத்தெண்ணுவோரை நோக்கி, ‘நம்மவரவரே மூவரென்றே எம்பிரானோடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல், தேவரென்றே யிறுமாந்து என்ன பாவந் திரிதவரே’ என வாதவூரடிகள் இரங்கிக் கூறிய திருவாக்கும் அறிக” என்னும் சிவஞான மாபாடியத்தானும் உணர்க. “தேவரில் ஒருவன் என்பர் திருவுருச் சிவனைத் தேவர், மூவராய் நின்றதோரார்” என்று சிவஞான சித்தியும், “தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தமிக்கு மற்றை, மூவர்கோனாய் நின்ற முதல்வன்” என்று பிறிதோரிடத்து அடிகளும் கூறியவற்றானும், பரமசிவன் மூவர்க்குந் தலைவன் என்பது தெளிவாதல் உணர்க.

படைத்து அளித்து அழித்தற்குரிய மூவராலும் விண்ணுலகில் ஒவ்வொரு பகுதி ஆட்சி செய்யப்படுதலின், “விண்ணாண்டு” என்று கூறப்பட்டது. அவ்வாட்சியைத் தொழில் நிலையமாகக் கொள்ளாமல், அதுபற்றி மண்ணுலகில் தாமே பரம்பொருளெனக்கருதிச் செருக்கித் திரிதல் அறியாமையின்பாற் படும் என்பது தோன்ற, “மண்மேல் தேவரென்றே இறுமாந்து திரிதவரே” என்று கூறப்பட்டது. “தேவர்” என்பது ஈண்டு ஒருமைப் பொருட்டு. இதனைத் “தேவர்” என்றது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி; “மண்மேற் றேவரென்றே இறுமாந்து’ என்றார் பிறரும்” என்று நச்சினார்க்கினியர் கூறுதலானும் அறிக. நஞ்சுண்டு காத்த அருட்செயலைக் கண்டு வைத்தும், தம்மைப் பரம்பொருளாக எண்ணி இறுமாந்து திரியும் தேவர் நிலைமை இரங்கத்தக்க தென்பார், “என்ன பாவம்” என்று கூறினர்.

இதன்கண், சிவபெருமானை, மூவருள் ஒருவன் என்பது பொருந்தாது; அம்மூவரையும் இயக்கி ஆளும் தலைவன் என உணர்தல் வேண்டும் என்றது மெய்யுணர்தலாதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.
.

5 தவமே புரிந்திலன் தண்மலர்
இட்டுமுட் டாதிறைஞ்சேன்
அவமே பிறந்த அருவினை
யேன்உனக் கன்பருள்ளாஞ்
சிவமே பெறுந்திரு எய்திற்றி
லேன்நின் திருவடிக்காம்
பவமே அருளுகண் டாய்அடி
யேற்கெம் பரம்பரனே.



கருத்துரை: சிவ பெருமான் அல்லாதார் பரம்பொருளாகார் என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், பரம்பொருள் பரமசிவனே யென்பதை உணர்ந்தும், அப்பெருமானை யடைதற்குரிய சரியை முதலிய தவத்தை மேற்கொள்ளாமைக்கு இரங்கி, இனியேனும் அத்தவஞ் செய்தற்குரிய பிறப்பு வேண்டுமென்று இறைவனை நோக்கி இத் திருப்பாட்டிற் கூறுகின்றார்.

பதவுரை: எம் பரம்பரனே — எங்கள் மேலான பரம்பொருளே, உனக்கு அன்பர் உள் ஆம் — உன்பால் மெய்யன்பு மிக்க பெரியார் அகத்துள் உண்டாம், சிவமே பெறும் திருஎய்திற்றிலேன் — வீட்டின்பத்தையே பெறுதற்கு ஏதுவாகிய சிவஞானச் செல்வத்தை அடையப் பெற்றேன். அல்லேன்; தவம் புரிந்திலன் — தவத்தையும் செய்தேன் அல்லேன், நின் திருவடிக்குத் தண் மலர் முட்டாது இட்டு இறைஞ்சேன் — நின்னுடைய திருவடிகளுக்குக் குளிர்ந்த நறு மலர்களைக் குறைவற இட்டு வணங்கேன், அவமே பிறந்த அருவினையேன் — ஆதலின் பயனின்றிப் பிறந்த கடத்தற்கரிய தீவினையுடையேன் ஆயினேன், நின் திருவடிக்கு ஆம் பவமே அடியேற்கு அருளு — ஆதலின் இனி நின் திருவடியை அடைதற்குரிய பிறப்பையே அடியேனாகிய எனக்கு அருளிக் காத்தல் வேண்டும், என்பது.

விளக்கவுரை: அன்பர், உள்ளாம் திரு, சிவமே பெறுந்திரு என இயைக்க. திரு, ஈண்டுச் சிவஞானத்தை யுணர்த்தும்; அது சிவத்தைப் பெறுதற்கு வாயிலாதலின், சிவம் — என்று அழியாத பேரின்பம். ஞானம் மெய்யன்பின் விளைவாதலின், “அன்பர் உள்ளாந்திரு” எனவும், அது பயப்பது வீட்டின்பம் ஆதலின், “சிவமே பெறுந்திரு” எனவும் கூறப்பட்டன. ஈண்டு ஏகாரம் தேற்றப்பொருட்டு. தவம் ஈண்டுக் கிரியையையும் யோகத்தையும் குறிக்கும். அகத்தும் புறத்தும் வழிபடுதலாகிய கிரியையும், மூச்சுக்காற்றை அடக்கி, மனத்தை அசைவற நிறுத்தி, உயிர் பரத்துடன் ஒன்றுதல் என்னும் அகவழிபாடாகிய யோகமும் தட்பவெப்பங்கள் முதலியவற்றால் உடற்கு உறும் துன்பத்தைப் பொறுத்துச் செய்யத்தக்கனவாதலின், தவம் என்று கூறப்பட்டன. சிவஞான போதம் எட்டாஞ் சூத்திரவுரையில், தவம் என்பது சரியை கிரியா யோகங்களை உணர்த்தும் என்ப. “ஈண்டுத் தவம் எனப் பட்டன பிறவல்ல வென்பார், சரியை கிரியா யோகங்களை எனக் கிளந்துரைத்தார்” என்பது சிவஞான முனிவர் உரை. சரியை முதலிய மூன்றனையும் தவம் என்னுஞ் சொல் உணர்த்துமாயினும், ஈண்டுத், “தண்மல ரிட்டிறைஞ்சேன்” எனச் சரியை வேறாகக் கூறப்பட்டமையால், தவம் என்பது கிரியையையும் போகத்தையும் உணர்த்துவதாகும். மேலும், “சரியை கிரியா யோகங்களை” என்னும் மெய்கண்டார் திருவாக்கிற்கு உரை கண்ட சிவஞான முனிவர், “கிரியா யோகங்கள் என்னும் உம்மைத்தொகை வடநூன் முடிபு; கிரியா யோகம் இரண்டற்கும் தீக்கை ஒன்றென்பது தோன்ற, அவ் விரண்டனையும் தொகுத்தோதிச் சரியையைத் தமிழுக்குரிய வீற்றான் வேறு வைத்தார்” என்று கூறினர். இதனால் விசேட தீக்கை ஒன்றே கிரியை யோகங்களை மேற் கோடற்குரிய தகுதியளிக்கும் என்பது புலனாம். இந்நயம் பற்றித் தவம் என்னுஞ் சொல்லால் கிரியையையும் யோகத்தையும் கோடல் பொருந்தும் என்பதுணர்க. தவமே என்புழி, ஏகாரம் தேற்றப்பொருட்டு என்பது உபலக்கணமாக நின்று வழிபாட்டிற்குரிய ஏனைய உபகரணங்களையும் உணர்த்தும், “முட்டா” தென்பதும் உபகரணப் பொருள்களின் குறைவின்மையை வலியுறுத்துவதாகும். மலர் இட்டு இறைஞ்சுதற்குரியது திருவடியாதலின், அஃது ஈண்டுங் கூட்டிப் பொருள் உரைக்கப்பட்டது.

இறைவனை அடைதற்குச் சைவாகமங்களிற் கூறப்பட்ட நெறி நான்காகும். அவை, சரியை கிரியை யோகம் ஞானம் என்பன. இவை ஒன்றற்கொன்று சாதனமும் சாத்தியமுமாக, இறுதியாகிய ஞானத்தால் வீடடைதல் கூடும். “விரும்புஞ்சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும், அரும்பு மலர் காய் கனி போல் ஆகும்” என்பர் தாயுமானார். ஞானம் வீடு பயக்கும் உணர்வாதலின், வீட்டிற்கு வாயிலாகிய அதனைப் பெறுதல் இன்றியமையாததாகும். அது பெறுதற்கு அரிதாயிற்றென்பார், “சிவமே பெறுந்திரு எய்திற்றிலேன்” எனவும், அதற்குச் சாதனங்களாகவுள்ள யோகநெறி, கிரியை நெறியாகிய இவற்றையும் அடைந்திலேன் என்பார், “தவமே புரிந்திலன்” எனவும், அவ்வெல்லாவற்றிற்கும் முதற்படியாக வுள்ள சரியையிலேனும் தலைப்பட்டேனோவெனின், அதுவும் இன்றென்பார். “தண்மலரிட்டு முட்டா திறைஞ்சேன்” எனவும் கூறினர். சிறந்த இந் நால்வகை நெறியினும் தலைப்படாமையால் இப்பிறப்புப் பயனற்ற தென்பார். “அவமே பிறந்த” எனவும் இவ் அவப் பிறப்பிற்குக் காரணம், கடத்தற்கரிய என் தீவினை என்பார், “அரு வினையேன்” எனவும் கூறினர். இதுகாறும் பிறப்பறுப்பதற்குரிய நெறி கைவரப் பெற்றிலேன்; ஆதலால் மேலும் பிறப்புண்டாதல் ஒருதலை; இனிக் கிடைக்கும் பிறப்பாவது நின் திருவடியடைதற்குரிய நெறி நிற்றற்கே யன்றி வேறுபடாவாறு அருளல் வேண்டும் என்பார், “நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு” எனத் தேற்றப் பொருள் தோன்றக் கூறி வேண்டினர். ஈண்டு ஏகாரம் தேற்றப் பொருளது. கண்டாய் என்பது முன்னிலை அசை. பிறப்பு வேண்டத் தக்கதன்றெனினும், சிவ நெறி நின்று, இறைவழிபாட்டில் தலைப்படக் கிடைக்குமாயின், பெரிதும் வேண்டிப் பெறத்தக்கதென்பதை,

குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே

என்னும் பெரியார் திருவாக்காலுந் தெளிக.

இதன்கண் சரியை முதலியவைகளே சிவபெருமானை அடைதற்குரிய நன்னெறிகளாம் என்று கூறியிருத்தலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாயவாறு அறிக.

– வளரும்

எழுதியவர் : (10-Dec-18, 7:19 pm)
பார்வை : 67

மேலே