இந்தியா மக்களின் தேசம் ------------------------சிந்தனைக் கட்டுரை படிக்க பகிர்க ---------சிந்திக்க வேண்டுகோள்

இந்திய ஜனநாயகத்தில் தேர்தல் என்பது எண்ணிக்கைதான். ஒரு தேர்தலில் வெற்றி பெற்றவர் ஒட்டுமொத்த மக்கள் ஆதரவை பெற்றுள்ளார் என்று சொல்ல இயலாது. பெரும்பான்மையான மக்கள் அவருக்கு ஆதரவு அளித்ததால் அவர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இதுதான் ஜனநாயகம். இதுதான் இந்திய தேர்தல் முறை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் உணர்த்துவதும் அதைத்தான். காங்கிரஸ் இல்லாத பாரதம். பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்துகள் வரை பிஜேபிதான் ஆள வேண்டும், ஆளும் என்று கொக்கரித்தார் அமித் ஷா. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல கட்சிகள் தோன்றியுள்ளன. சிதைந்துள்ளன. அழிந்துள்ளன. ஆனால் எந்த கட்சித் தலைவரும், வேறு கட்சியே இருக்கக் கூடாது என்று பேசியதில்லை. நான் மட்டும்தான் வாழ வேண்டும். மற்றவர்கள் எனக்கு அடிமையாக இருக்க வேண்டும், அல்லது இல்லாமல் போக வேண்டும் என்று சுதந்திர இந்தியாவில் யாருமே பேசியதில்லை. ஏன் நம்மை 1947 வரை ஆண்ட வெள்ளையன் கூட இப்படி பேசியதில்லை. இடுப்பில் வேட்டியை மட்டுமே ஆடையாகக் கொண்ட ஒரு கிழவன் உண்ணாவிரதம் இருந்தபோது அவன் மதித்தான். மரியாதை அளித்தான். பேச்சுவார்த்தை நடத்தினான். ஆனால் அந்த கிழவன் உயிரோடு இருப்பதை விரும்பாமல் அவனை கொன்றவர்களின் வாரிசுகள்தான் இப்படி பேசுகிறார்கள்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என்பது, ஒரே நாளில் உருவாக்கப்பட்டதல்ல. உலக நாடுகளில் இருந்த அரசியல் அமைப்புச் சட்டங்களை பரிசீலித்து, நீண்ட நெடிய விவாதங்களை நடத்தி உருவாக்கப்பட்டதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். அதுதான் அடிநாதம். அப்படி உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தின் முகப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “நாம், இந்திய மக்கள், உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை; படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட;மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட.” என்றுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது.

இந்தியா இந்துக்கள் பெரும்பான்மை உள்ள ஒரு நாடு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில், இந்துக்கள் மட்டுமே இங்கு வாழ வேண்டும், பிற மதத்தினருக்கு இங்கே இடமில்லை என்பதை இந்தியாவை ஆண்ட எந்த மன்னரும் சொன்னதில்லை. இஸ்லாமியர்கள் இந்தியாவை படையெடுத்து வந்த 12ம் நூற்றாண்டுக்கு முன்னதாக இந்தியாவை ஆண்ட மன்னர்கள், இந்தியாவில் இந்து மதத்தோடு பிற மதங்களும் இணங்கியிருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டனர். புவுத்தம், ஜைனம் உள்ளிட்ட பல மதங்களை பின்பற்றுபவர்களை அரவணைத்து, மதவேறுபாடு இல்லாமல் இந்தியாவை பல மன்னர்கள் ஆண்டுள்ளனர்.

ஆனால் நேற்று முளைத்த காளான்களான சங் பரிவார அமைப்புகள், இந்தியாவின் தோற்றத்தையே மாற்ற முனைந்தன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றன.

தான் காசநோயால் இறப்பதற்கு முன்னதாக ஒரு நாட்டின் அதிபராக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பாகிஸ்தானை பிரித்து எடுத்தார் முகம்மது அலி ஜின்னா. அந்த நேரத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும் சீக்கியர்களும் வெளியேறி இந்தியா வந்தனர். இந்தியாவில் இருந்த இஸ்லாமியர்கள், பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்று சென்றனர். அதே நேரத்தில் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள், இந்தியா என் பூமி. இது என் நாடு. இவர்கள் என் மக்கள் என்று தேர்ந்தெடுத்து, இந்தியாவிலேயே இருந்தனர். பிறந்த மண்ணை நேசிக்காமல் அவர்கள் ஏன் அந்த முடிவை எடுத்திருப்பார்கள் ?

இந்தியா என் தாய்நாடு என்று முடிவெடுத்த ஒரே காரணத்துக்காக மதத்தின் அடிப்படையில் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற விஷயத்தை மனசாட்சியுள்ள ஒரு மனிதன் ஏற்றுக் கொள்ள முடியுமா ?

ஆனால் அதைத்தானே பிஜேபியும் மோடியும் செய்யச் சொல்கிறார்கள். நேற்று வரை, அத்தா என்று அழைத்து, நெருங்கி உறவாடிய நம்மை, உன் பக்கத்து வீட்டில் இஸ்லாமியன் இருந்தால் அவனை வெறு, அவனை தொல்லைப்படுத்து, அவனை துன்புறுத்து என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா ?

இந்த கட்டுரையை படிப்பவர்கள், படிப்பறிவு உள்ளவர்கள் என்று நான் உணர்கிறேன். நமக்கு பகுத்தறிவு உண்டு. சுயகவுரவம் உண்டு. ஈகோவும் உண்டு. நம்மிடம், நாம் என்ன உணவு உண்ண வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும் என்று ஒரு ரவுடிக் கும்பல் கட்டளையிடுவதை நாம் ஏற்றுக் கொள்வோமா ? நான் சொல்வதைத்தான் உண்ண வேண்டும் என்று ஒருவன் சொன்னால், அவனை செருப்பை கழற்றி அடிப்போமா மாட்டோமா ?

அதைத்தானே மோடி செய்து கொண்டிருக்கிறார் ?

நாடு என்பது என்ன ? வெறும் பூகோள பரப்பளவா ? நாடு என்பது வாழும் மக்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது அல்லவா ? அப்படி வாழும் மக்களிடையே வெறுப்பை விதைத்து, ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவதை ஊக்குவிக்கும் ஒரு நபர் மனித குல விரோதியா இல்லையா ? தீர்மானமாக சொல்கிறேன். மோடி மனிதகுல விரோதி.

2014ல் நாம் ஏன் மோடியை தேர்ந்தெடுத்தோம் ? காங்கிரஸ் மற்றும் திமுகவின் சகித்துக் கொள்ள முடியாத ஊழல். எங்கு பார்த்தாலும் ஊழல். அந்த நேரத்தில் ஊழலை ஒழிப்பேன். உங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சத்தை போடுகிறேன் என்று கூறிய மூணு சீட்டு வியாபாரியின் வார்த்தையை நாம் நம்பினோமா இல்லையா ? நம்பினோம். அதற்கான விலையைத்தான் நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.



ஊழல் சமூகத்தின் மிகப்பெரிய பீடு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில், என் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் இஸ்லாமிய நண்பரை, அவர் நம்பும் கடவுளின் பெயரால், விரோதியாக பார்க்க வேண்டும் என்று என் மனதில் விஷத்தை விதைப்பது ஊழலை விட கொடிய நோயா இல்லையா ?

2014 தேர்தல் சமயத்தில்தான் கேரவன் மாத இதழில் வந்த சிவலிங்கத்தின் மீது செந்தேள் என்ற கட்டுரையை மொழிபெயர்த்து சொந்த செலவில் நூலாக வெளியிட்டேன். எனக்கு அப்போதே மோடி யாரென்பது தெரியும். இது மோடியோடு நெருக்கமாக பழகியதால் கிடைத்த தரவு அல்ல. மிக மிக எளிமையாக பட்டறிவில் கண்டது.

நாம் சாலையில் செல்கிறோம். ஒரு விபத்தை பார்க்கிறோம். அந்த விபத்தில் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டு ரத்தம் கொட்டுகிறது. நம்மை அறியாமல் நாம் முகத்தை திருப்புவோமா இல்லையா ? இது இயல்பான மனிதர்களின் மனநிலை.

58 பேர் இரண்டு ரயில் பெட்டிகளில் எரிக்கப்பட்டு கருகிய நிலையில் பிணங்களாக இருக்கின்றனர். அந்த பிணங்களை வன்முறை சூழ்ந்த ஒரு பூமியில், ஊர்வலமாக எடுத்து வாருங்கள் என்று உத்தரவிடுகிறார் என்றால் அந்த நபர் எப்படிப்பட்ட நபராக இருப்பார் ? அந்த கருகிய உடல்களை பார்க்க முடியுமா ? அந்த கலவரத்தை நடத்தி முடித்த ஒரே காரணத்தினால்தான் இன்று மோடி பிரதமராக இருக்கிறார்.

நாம் அனைவரும் விலங்குகளில் இருந்தே வந்திருக்கிறோம். நம் அனைவரிடமும் விலங்கு குணம் விலகாமல் அடி ஆழத்தில் இருக்கிறது என்பதை மனவியல் வல்லுனர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். நாகரீக வளர்ச்சி காரணமாகவே நாம் நாகரீக வளர்ச்சியை கடைபிடித்து வருகிறோம்.

சமூகம், சட்டம், நீதிமன்றம், சிறை, என்பது போன்ற பல்வேறு அமைப்புகளை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வளர்ச்சியில் உருவாக்கி ஒரு நல்ல சமூகமாக விஞ்ஞான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோம். இப்படி இருக்கும் நம்மை, மீண்டும் விலங்குகளாக்கும் ஒரு அமைப்பை, ஒரு மனிதனை நாம் சகித்துக் கொள்ளலாமா ?

உத்திரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், ஒரே ஒரு இஸ்லாமியரை கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. அறுதிப் பெரும்பான்மையோடு பிஜேபி வெற்றி பெற்றது. உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு ஏழை இஸ்லாமியனாக நான் என்னை அப்போது உணர்ந்தேன். நான் பிறந்த மண்ணில், எனக்கு சொந்தமான ஒரு நாட்டில், நான் கீழ்த்தரமாக, இரண்டாம்தர குடிமகனாக நடத்தப்படுபவனாக உணர்ந்தேன்.

இந்த நான்கரை ஆண்டுகளில் மோடியின் சாதனை என்றால், அது, மனிதர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தி, வெறுப்பை விதைத்து, நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தியது மட்டுமே.

உத்திரப் பிரதேசத்தில் நான் ஒரு பதின்பருவ இஸ்லாமிய இளைஞன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். கோபத்தோடு வளர்கிறேன். என்னிடம், பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் ஏஜென்ட் ஒருவர் பேசுகிறார். இஸ்லாமியர்கள் இந்தியாவில் வஞ்சிக்கபடுகிறார்கள் என்று கூறுகிறார். நான் ஆமோதிப்பேன். இதற்கு பழிவாங்க வேண்டும் என்று கூறுகிறார். அதையும் ஆமோதிப்பேன். என் கையில் ஒரு வெடிகுண்டை அளித்து, இதை இந்துக்கள் நடமாடும் சந்தையில் வை, அல்லது உன் மீதே கட்டிக்கொண்டு இதை வெடிக்கச் செய்து, இந்துக்களை பழிவாங்கு என்று சொல்கிறார் என்றால், நான் அதை செய்வேனா மாட்டேனா ?

எந்த வன்முறையையும் நான் ஆதரிக்க மாட்டேன். அதே நேரத்தில் இளம் இஸ்லாமிய இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதற்கு இந்து அடிப்படைவாதிகளை உதவுகிறார்கள் என்பதையே இந்த இடத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒரு மிருகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, மனிதர்களை கூட்டமாக அடித்துக் கொல்லும் அவலம் உலகில் எங்காவது நடக்குமா ? இதைத்தானே மோடி ஆட்சிக்கு வந்தது முதல் செய்து கொண்டிருக்கிறார் ?

உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் வந்த பின்னர், பல மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என்னிடம் இனி 2024 தேர்தலில் கூட மோடியையோ பிஜேபியையோ வீழ்த்த முடியாது என்றார்கள். நான் அப்போதும் நம்பிக்கை இழக்கவில்லை.

ஏன் ?

1975ல் இந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்தார். அப்போது நாடு முழுக்க நடந்த கொடுமைகளை அவர் அறியவில்லை என்றே, அதன் பிறகு எழுதிய வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். நாடு முழுக்க பலர் சிறை பட்டனர். இடதுசாரி இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. பலர் போலி காவல் படுகொலையில் கொல்லப்பட்டனர். ஊடகம் முழுக்க தணிக்கை செய்யப்பட்டது.



1977ல் தேர்தலை அறிவித்தார் இந்திரா. அப்போது வாட்ஸப் இல்லை. இணையம் இல்லை. மொபைல் இல்லை. ஒரே ஒரு செய்தி தொடர்பு, செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சி / வானொலி. தொலைக்காட்சி மற்றும் வானொலி அரசு கட்டுப்பாட்டில் இருந்தது. அச்சு ஊடகங்கள் தணிக்கைக்குள்ளனானது. தணிக்கை செய்யப்படாமல் ஒரே ஒரு வரியை கூட அச்சிட முடியாது.

1977 தேர்தலில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் தோற்றது. மக்கள் நேருவின் மகளையே தோற்கடித்தனர். மண்ணை கவ்வ வைத்தனர். அப்போது ஒரு கூட்டணி கிடையாது. மகத்பந்தன் போன்ற ஒரு அணி கிடையாது. மக்கள் என்ன நினைத்தார்கள் ? எங்களை நிந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் தோற்க வேண்டும். அதை எந்த வேட்பாளரால் செய்ய முடியுமோ அவரை ஆதரிப்போம் என்று முடிவெடுத்தார்கள். நாடெங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

அதன் பிறகு மொரார்ஜி தேசாய் அரசு, ஒன்றரை ஆண்டுகளில் வீழ்த்தப்பட்டதும், கருணாநிதி ஊழல் புகார் காரணமாக, தன் மகனையே வதைத்த காங்கிரஸ் கட்சியோடும் கூட்டணி வைத்தது வரலாறு.

சஞ்சய் காந்தியின் வரலாறை எழுதிய காலம் சென்ற பத்திரிக்கையாளர் வினோத் மேத்தா, டெல்லிக்கு சென்று தேர்தல் முடிவுகளை பார்வையிட்டார். அப்போது, ஹரியானாவிலிருந்து தன் தோளில் தன் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த ஒரு பெரியவர், இதுதான் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரம் (காங்கிரஸ் ஆட்சியில் இருந்து) என்று உரக்க கத்திக் கொண்டே சென்றார் என்று கூறுகிறார்.

அப்போது மொபைல் போனோ, இணையமோ இல்லை என்பதை மீண்டும் கூறுகிறேன்.

இன்று நம்மிடம், இணையம் உள்ளது. சமூக வலைத்தளங்கள் உள்ளன. அரசு தடுக்க நினைக்கும் தகவல்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியாகின்றன. அப்படி இருக்கையில், மோடியை வீழ்த்த முடியாதா என்ன ?

கேரளாவை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் தேர்தல் முடிவுகள் குறித்து பேசுகையில் “இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு வெற்றி என்று கூற முடியாது. பிஜேபிக்கு தோல்வியென்றால், அது தெலங்கானாவில்தான். பிஜேபி இன்னும் வலுவாகவே உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னே இன்னும் ஒரு வலுவான போராட்டம் உள்ளது. 2019ல் வெற்றி பெற வேண்டுமானால், தன் சுணக்கத்தை தவிர்த்து அது மேலும் கடுமையாக உழைக்க வேண்டும். ராகுலுக்கு இது பெரிய சவால். பிராந்திய கட்சிகளை சமாளிப்பதிலும், உட்கட்சி பூசலை சமாளிப்பதிலும்தான் ராகுலின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது” என்றார்.

அந்த பத்திரிக்கையாளர் சொன்னதில் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும், பிஜேபிக்கும் வாக்கு வித்தியாசம் புள்ளி ஒரு சதவிகிதம் மட்டுமே (தேர்தல் ஆணைய விபரங்களின்படி).

மோடி மத ரீதியாக நம் மனதில் வெறுப்பை விதைத்து விட்டார். அந்த வெறுப்பை அத்தனை எளிதாக அகற்ற முடியாது. இந்த வாக்கு சதவிகித வேறுபாட்டை மிக எளிதாக மோடியால், ஒரே ஒரு மேடைப் பேச்சில் மாற்ற முடியும்.

டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில், “2019 தேர்தல் மோடி நினைத்தது போல அத்தனை எளிதாக அமையாது. இந்தி ஆளும் மாநிலங்களில் பிஜேபியை காங்கிரஸ் கட்சி அகற்ற முடிந்தது அத்தனை எளிதானது அல்ல.

பிஜேபியின் அசுர தேர்தல் இயந்திரத்தை செயலிழக்க செய்வது அத்தனை எளிதல்ல. காங்கிரஸ் கட்சி தேர்தலில் மாற்று வேட்பாளர்களை மட்டும் வெற்றி பெறவில்லை. உயிரை கொடுக்க தயாராக இருக்கும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், பணம், அதிகாரம், மற்றும் சங் பரிவான அமைப்புகளை வீழ்த்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் ஆகியவை பிஜேபியின் கோட்டைகளாக இருந்தன.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் கூட மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பிஜேபியை அவர்களால் வீழ்த்த முடியவில்லை.

தன் வாழ்நாளில் தோல்வியையே சந்தித்திராத நரேந்திர மோடி முதன் முதலாக தோல்வியை சந்தித்திருக்கிறார்.

மோடி குஜராத்திலேயே தன் செல்வாக்கு சரிவதை உணர்ந்திருக்க வேண்டும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கும், மோ மற்றும் அமித் ஷாவுக்கும் சரியான பாடத்தை புகட்டியுள்ளன. அவர்களின் பிரிவினைவாதம் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் எடுபடாது என்பதையும் உணர்த்தியுள்ளன.

2014 தேர்தல் சமயத்தில் அளித்த ஒரே ஒரு வாக்குறுதியைக் கூட மோடி நிறைவேற்றவில்லை.

மோடியின் நவரச நாடகங்களை பார்த்து மக்கள் களைப்பாகி விட்டர்கள். தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றதற்காக அவர்கள் நடத்தும் ஓரங்க நாடகங்களை மக்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

மக்களை மதரீதியாக பிரிவுபடுத்தும் அவர்களின் தந்திரம் எடுபடவில்லை. மக்களுக்கு நம்மை விட்டால் (To save Hindu Pride) வேறு வழியே இல்லை என்று மோடி-அமித் ஷா ஆகியோரின் நினைப்புக்கு சம்மட்டியடி கொடுத்துள்ளார்கள் மக்கள்.

மக்கள் மோடி-அமித் ஷா கூட்டணிக்கு சொல்ல விரும்பும் செய்தி ஒன்றே ஒன்றுதான். “நாங்கள் முட்டாள்கள் அல்ல” என்பதே அது.

ராகுல் காந்தி



ராகுல் காந்தியை நான் மாபெரும் தலைவராக பார்க்கவில்லை. ஆனால் மாபெரும் தலைவராவதற்கான அறிகுறிகளை நான் பார்க்கிறேன்.

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்

துணிவு வர வேண்டும்

என்றார் வாலி. துணிவு வருகிறதோ இல்லையோ. ஒரு தலைவனுக்கு முக்கியமான தகுதி, பணிவு. அது ராகுல் காந்தியிடம் இருப்பதாகவே நான் உணர்கிறேன். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், அவர், பிஜேபி முதல்வர்கள் நல்ல பணி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றி என்றார். மேலும், நாங்கள் யாரையும் நாட்டை விட்டு விரட்ட விரும்பவில்லை. நாம் எல்லோரும் சேர்ந்து இங்கயே இருப்போம். பேசுவோம். விவாதிப்போம் என்றார்.

பாராளுமன்றத்தில், மோடியை கடுமையாக விமர்சித்த பின்னர், அவர் மோடி அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று, அவரை கட்டியணைத்தபோது, அவரை உதாசீனப்படுத்தினார் மோடி. அதன் பிறகு ராகுல் காந்திக்கு அவர் பதில் உரை அளித்தபோது, அவரின் நடத்தைகள் அருவருப்பானது.

அடுத்து

தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. மோடி மற்றும் பிஜேபி வெல்ல முடியாத ஒரு சக்தி என்ற மாயை உடைக்கப்பட்டுள்ளது.

இவ்வுலகம் பல சர்வாதிகாரிகளையும், சக்ரவர்த்திகளையும் கண்டுள்ளது. அத்தனை பேரும் மண்ணோடு மண்ணாக மக்கித்தான் போனார்கள்.

மோடி விதிவிலக்கா என்ன ?

SHARE

BY SAVUKKU · 12/12/2018


Savukku © 2018. All Rights Reserved.

:)

எழுதியவர் : (12-Dec-18, 5:10 pm)
பார்வை : 101

மேலே