என்னை பெற்றவளே

கடும் உழைப்பு செய்தால் மட்டுமே
கால் வயிறுக்கேனும் கஞ்சி கிடைக்கும்
அப்பாவோ இரண்டாம் தாரத்தின் பிள்ளை
அம்மாவோ மூன்று பெண்களுக்கு மூத்தவள்
முடித்து வைத்தனர் மூத்தோர் கூடி திருமணத்தை
அம்மாவிற்கு பூப்பெய்த மூன்று திங்களுக்குள்
புது வீட்டில் குடித்தனம்
குதுகலமாய் வாழ்க்கை கொண்டாட்டமாய்
ஆறு வாரத்துக்கு அப்புறம் அரிசியில்லை வீட்டில்
ஆறுதல் சொல்லவும் ஆரும் இல்லை தோதாய்
அழகான மாப்பிள்ளையோ
ஆலமரத்தின் கீழ் அரட்டையில் - அம்மாவோ
கருக்கருவாளோடு காட்டிற்கு நெல்லறுக்க - இவ்வாறு
கடந்தன வருடங்கள் இரண்டு
புணர்ந்ததால் உருவானேன் பொசுக்கென்று நான்
மசக்கையின் காரணத்தினால் - என் தாய்
தன் வேலையை மாற்றிக் கொண்டாள்
ரேசன் கடையிலே சீமெண்ணை வாங்கி வந்து
ரோடோடும் வண்டிக்கெல்லாம் - கூடுதல்
ரேட்டோடு விற்கவே புது பெயரோடு
ஆரம்பித்தாள் கடைத்தெருவில் ஒரு கடையை
அடுத்தடுத்ததாய் எம் கடையில்
ஆர்ப்பரிக்கும் பெருங்கூட்டம்
ஐயிரெண்டு திங்களிலே
அழகாய் நான் பிறந்தேன் - என்னை
அரவணைக்க நேரமின்றி அவ்வளவு வியாபாரம்
நாயாய் பிறந்திருந்தால் - தினம்
நல்ல சோறு தின்றுறிப்பேன் - பணம் தேடும்
பேயுகளுக்கு பிறந்ததினால்
டீயும் பன்னுமாய் தினம் தினம் தின்று வளர்ந்தேன்
அவ்வாறான நிலையிலே - அம்மாவும்
பெற்றெடுத்தாள் அழகான மழலை ரெண்டு
ஆறுரெண்டு ஆண்டுகள் அப்படியே செல்லையிலே
ஆகி விட்டேன் நானும் பூப்பெய்தி பெரியவளாய்
சிமெண்ணை வியாபாரத்தால்
சில்லரைகள் பெருகியது - அன்னையின்
செயல்பாடுகளும் மாறியது - அல்லும் பகலுமாய்
அவள் ஆணைப் போல் வேலை செய்தாள்
தான் பெற்ற இரண்டாவது பெண்ணால் தான்
இவ்வளவு அதிர்ஷ்டம் என்று
என்னையும் தம்பியையும் ஏளனம் செய்து வந்தாள்
படிப்பிலும் அழகிலும் நான்
பார்ப்பவரை கிரங்கடிப்பேன் - என்றாலும்
படுக்கையை எடுத்து வைத்து
பலகாரம் செய்து வைத்து
பசங்களை கிளப்பி விட்டு பள்ளிக்கு போ என்று
பாசக்காரத் தாய் பல நாளும் பட்டியலிட்டாள்
பரபரப்பாய் நான் மாறி
சுறுசுறுப்பாய் கடமை செய்து
தடதடவென பள்ளி சென்று
கடகடவென வளர்ந்து நின்றேன்
கல்லூரி செல்லலாம் என - கனவோடு நான் கேட்க
உனை காதலிப்பர் ஆண்களென
பெற்றவளே பேரும் வைத்தாள்
பட்டத்தின் நூல் அறுந்து விட்டதைப் போல்
முட்டிய அழுகையோடே மூழ்கி போனேன் நான்
எட்டிக்காயைப் போல் என் வாழ்க்கை செல்லையிலே
கட்டிக் கொடுக்கும் வயது வந்து விட்டதாய் - என் தாயை
சுற்றத்தார் வைய; சுருக்கென்ற கோபத்துடன்
சறுக்கென்று சோழியனிடம் சென்றனர் அனைவரும்
பெண்ணிற்கு மணம் செய்யலாம் அல்லது
மனையில் வீடு கட்டலாம் என்று அவன் கூற
வீடே பிரதானம் என்று வேலை தொடங்கினர்
ஐயிரெண்டு மாதங்கள் கடந்த பின்
சொந்தங்களின் சொல்லிற்கு பயந்து
எள்ளிற்கும் பொருத்தமில்லா
கல்லான ஒருவனுக்கு கழுத்தை நீட்டச் செய்து
கல்யாணத்தில் காரியத்தை முடித்து வைத்தனர்
ஆண்டுகள் பதினேழு அழகாய் உருண்டோட
அழகு குழந்தையின்றி வாழுறேன் தனியாக
அனைவரும் “விதி" என்று
ஆளுக்கொரு திசை செல்ல - என் ஆத்தாளோ
அதிர்ஷ்டக்கார பெண்ணிற்கே
ஆதரவாய் இருக்கிறாள்
நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (13-Dec-18, 3:20 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : ennai petravale
பார்வை : 100

மேலே