சுகமான சுமைகள்

===================
ஆட்டுவிப்போர் ஆட்டிவைக்கும் ஆட்டத்திற் காடும்
=ஆட்டமொன்றே ஆட்டமென்று ஆடுகின்றோர் ஆட்டம்
நாட்டினிலே மேடையின்றி நாள்தோறும் கண்டே
=நலிவடைந்து விட்டமக்கள் நிலைமைக்கோர் தீர்வு
கோட்டையிலே கொடிநாட்டிக் கோலேச்சும் வேந்தன்
=கொடுத்துதவ முன்வரவே கூடுமென்று நம்பி
வாட்டிவைத்தத் துயர்விலகக் காத்திருக்க நேர்ந்தால்
=வருமானக் கழுத்தின்மேல் வாள்விழுந்து கொல்லும்
**
அரசாட்சிச் சச்சரவில் ஆழ்ந்துவிட்ட வேளை
=அரிசிவிலை பருப்புவிலை ஏணியின்றி விண்ணை
உரசிநிற்க விட்டதனை உணராது விட்டோம்.
=உழைத்தபண மெடுத்துசில உணவுபொருள் வாங்கிக்
கரங்களிலே ஏந்துகையில் காற்றடித்தப் பந்தாய்
=கனதியற்று கிடப்பதனால் கால்வயிற்றுக் கஞ்சி
நிரந்தரமாய் ஆகிவிட்ட நிலைநீண்ட ஏழை
=நெஞ்சத்தை யாரிங்கே நினைத்தேதான் பார்த்தார்?
**
அவராட்சி இவராட்சி வந்தாலு மென்ன
=அன்றாடங்க் காய்ச்சிகள் உழைத்தாலே ஆச்சு
எவராட்சி வந்தாலும் இதுதானே என்று
=எந்நாளும் தவிப்போர்க்கு இனியென்ன பேச்சு
தவராட்சி கொள்கின்ற தலைமைக ளாலே
=தவறாமல் விலையேற்றந் தான்மட்டு மிங்கே
சுவர்மேலே அடிபட்டுச் சுணங்காதப் பந்தாய்
=சுகமாக வருகின்ற சுமைதானே கொண்டோம்.
*****
***மெய்யன் நடராஜ்***

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Dec-18, 2:59 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 351

மேலே