என்ன செய்ய போற

வறுமையின் அடையாளமான பசிபட்டினி, களவு, பிச்சை, இந்நாட்டில் பெருகியது ஏன்....?
வறுமையின் பிடியில் இருந்து என் நாட்டை விடுவிக்க போற...!!

வளம் நிறைந்த இந்நாட்டில் இன்னும் வறுமை ஏன்....?
வளமோடு வாழ வழி வகுக்க போற...!!

இயற்கை வளமும் இளைஞர்கள் வளமும் இருந்தும் வளர்ச்சியின்மை ஏன்...?
இவ்விரண்டு வளமும் மேலும் வளர்ச்சியடையச் செய்ய போற...!!

மண் வளம் கொண்ட இந்நாட்டில் விவசாயம் அழிந்து போவது ஏன்.....?
மலைமகள் கொடுத்த நதிநீரையும்,வான்மகள் கொடுத்த மழைநீரையும் வீணாக கடலில் சென்றடையாமல் விவசாயத்திற்குப் பயன்பட செய்ய போற...!!

ஆறுகள்,ஓடைகள்,கால்வாய்களும் தடமழிந்து நீர் ஓட வழியில்லை, எட்டுவழி சாலை ஏன்....?
பசிபட்டினி தீர, மக்கள் தொகைக்கு தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு நீர்வளம் பெருக செய்ய போற...!!

கல்வியெல்லாம் காகிதத்தோடும் கற்றதெல்லாம் காற்றோடு போவது ஏன்..?
வாழ்வியல் வளர்ச்சியும், திறமைகளும் மேம்படத் தரமான கல்விபெற செய்ய போற...!!

கல்விகற்றும் வேலையின்மை ஏன்? கல்விகளும் வேலைவாய்ப்புகளும் விற்கப்படுவது ஏன்....?
அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர அரசிடம் ஆணையிட போற...!!

சட்டங்களும் திட்டங்களும் தீட்டப் பட்டு மட்டுமே இருப்பது ஏன்..?
ஏட்டோடு மட்டும் இருக்கும் செயல்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்த ஊழல் இல்லா அரசாங்கம் அமைக்க போற...!!

சட்டங்களும் திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்தாலும் வளர்ச்சியின்றி வறுமைகள் ஏன்...?
இலவச பொருட்கள் வேண்டாம்! நிரந்தர வருமானம் பெரும் வேலைவாய்ப்பை தர சொல்ல போற...!!

பறவைகளே தனக்கு தேவையான உணவு, இருப்பிடத்தைத் தானே உருவாக்கிக் கொள்ளும் போது மனிதனாய் இருந்தும் இலவசம் வேண்டி நிற்பது ஏன்...?
இருகை நீட்டி யாசகம் கேட்காதே! இருகை கொண்டு உழைத்து வாழச் சொல்ல போற...!!

பூமிக்கு அடியில் இருக்கும் மீத்தேனை கண்டுபிடிக்க முடிகிறது,பூமிக்கு மேல் இருக்கும் கருப்பு பணத்தைக் கண்டுபிடிக்காமல் இருப்பது ஏன்..?
தரமும், திறமையும் வாய்ந்த, தலைமை வகிக்கும் தகுதியுடைய தலைவரை தேர்ந்தேடுக்க மக்களுக்கு கற்றுத்தர போற...!!

அரசாங்கமே மக்களின் அறியாமையை போக்காமல் சோம்பேறிகளாக்குவது ஏன்...?
ஒவ்வொரு மனிதனும் சுயமாக உழைத்து சொந்தக்காலில் நிற்க சொல்ல போற...!!

பொருளாதார வளர்ச்சி மேம்பட உழைக்காமல், விலைவாசி உயர்வு மட்டும் ஏன்...?
இருபத்திஐந்து வயதிற்கு மேல் நாட்டில் அனைவருமே உழைக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க போற...!!

ஊழல்களும் களவுகளும் களையப்பட வேண்டும்
பசிபட்னி,பிச்சைகள் அகற்றப்பட வேண்டும்
வறுமையே இல்லா வளம்பொருந்திய இந்திய தேசத்தை காண போற .....!!!

எழுதியவர் : kayal (14-Dec-18, 3:42 pm)
சேர்த்தது : கயல்
Tanglish : yenna seiya pora
பார்வை : 549

மேலே