இது மார்கழித் திங்களல்லவா

ஏய், இது மார்கழித் திங்களல்லவா?
எழும்பு எழும்பு ...!

மணி நாலு.
நாழியாவதை நயமாய் நல்கினார்
ஆத்துகாரியிடம்...!

பச்சைத் தண்ணீரில்
மேனி வார்த்து
பூஜையறைக்குள் புகுமுன்,
அவையாம்பிகையை தட்டி
எழுப்பிவிட்டார்.

குடு குடுவென ஓடியோடி
தயாரானாள்.
இருவரும் இருள் அகலாத
காலை வேலையில் காலரா
நடந்தனர் கோவிலுக்கு.

விறு விறுவென நடக்கின்றனர்,
குளிர் தேகத்தை துளைப்பதர்குள்
கோவில் சென்றுவிட உத்தேசம்.

சாமி பாடல் ஒலிபெருக்கியில்
கேட்க்க கேட்க உற்சாகமாய்
ஓடினர்.

பிரகாரம் சுத்தி வந்து,
ஒவ்வொரு சிலை முன்பும்
பிரதீக்ஷை செய்து,
பாசுரம் பாடி,
பாதரக்ஷை தொட்டு வணங்கி,
துளசி தீர்த்தம் பருகி,
கொடி மரம் அருகில் இருந்த
மர பெஞ்சில் அமர்ந்தனர்.

திவ்விய தரிசனம்,
இருவரும் வந்து போகும்
பக்தர்களை நோட்டமிட்ட படி இருந்தனர்.

சட்டென்று ஒரு சல சலப்பு,
நெருக்கியடித்து, வரிசை கட்டி நின்றனர்.
அவையாம்பிகையும் ஆத்துக்காரனும் அந்த அணியில்
இணைந்தனர்.

சர்க்கரைப் பொங்கலும்,
புளியோதரையும் தொன்னையில் வைத்து
தர ஆரம்பித்தனர்.

வாங்கிய இரு பொங்கலையும்,
அவையம்பிகாவிற்கு தராமல்,
இவரே உண்ண முடிவெடுத்தார்.

சுட சுட இருந்த தொன்னை பொங்கலை,
சிந்தாமல் சிதறாமல் உண்டுவிட்டு,
கையலம்பி நகர்ந்தனர்.

தெருவுக்கு வந்து காலணி தேடி,
கோபுர கலசத்தை கைகூப்பி வணங்கி
வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தனர்.

ஆத்துக்காரரிடம் அவையாம்பிகா
வெத்தலை வாங்க நினைவூட்ட,
தெருவோரம் இருக்கும் பெட்டிக்கடையில்,
தஞ்சம் புகுந்தார்.

வெத்தலை எடுக்குவரை,
கடையில் தொங்கி கொண்டிருந்த
புத்தக அட்டைப் படங்களை நோட்டமிட்டார்.

வாங்கிய வெத்தலையோடு,
காத்திருந்த அவையம்பிகையோடு
வீட்டிற்கு நடந்தனர்.

மெதுவாக நடந்தும்,
மூச்சிரைக்கிறது...
அவளோ வந்தது போலவே ஓடுகிறாள்.

நெஞ்சும் பட படக்கிறது.
வயிறும் பிசைந்தெடுக்கிறது.
முதல் மாடி ஏறி,
பூட்டியிருந்த கதவைத் திருந்து,
வரவேற்பறை ஊஞ்சலில் அப்பாடா வென
அமர்ந்தார்.

தண்ணீர் கேட்டு,
படக் படக்கென பருகினார்.
மணியோ காலை ஆறு மணி.

வெளிச்சம் குறைவாகவே இருந்தது.
அவளோ அடுப்படிக்கும், வாசலுக்கும்
ஓயாமல் ஒட்டியபடி இருந்தாள்.

ஏமா இப்படி பர பரன்னு சுத்துறே,
கொஞ்சம் மெதுவா நடந்தா எண்ணுன்னு
சொல்லிவிட்டு ஊஞ்சலில் நிமிர்ந்தமர்ந்தார்.

அதிசயமாக அவையாம்பிகாளும்
அதை கேட்டு மெதுவாக நடந்தாள்.

அடுப்படியில்,
பால் காய்ச்சினாள்,
தக்காளி அலம்பி,
லேசாக நறுக்கி வைத்தாள்.

இட்லி மாவை சிறு பாத்திரத்தில் இட்டு,
உப்பு சேர்த்து ருசி பார்த்தாள்.
உச்சு உச்சென வெளியில் இருந்து சத்தம் வந்தது.
கெவிலி சத்தமென்று நினைத்துக்கொண்டாள்.

மேலே கவிழ்த்திருந்த இட்லிப் பாத்திரத்தை
எட்டி எடுக்க,
மெதுவா பாத்து பாத்து என குரல் கேட்டது,
புதிதாய் இருந்தது.

செல்போன் சத்தம் கேட்டதாய் எண்ணி
ஓடி வந்தாள்...
கண்ணன் போன் பன்னாப்ல இருந்திச்சு,
இல்ல போல என்றாள்.

சரி அடுப்படியில் பத்து பாத்திரம்
தேய்க்கணமும் சொல்லி செல்ல இருந்தவளிடம்...
ஒரு நிமிஷம், புடவையை இடுப்புல சொருகி
அலம்பினா வசதியாருக்கும்னு,
புடவை தலைப்பை இடுப்பில் சொருகி விட்டார்.

கட கடவென குதிரை போல,
ஓடி ஓடியோடி வேலை பார்த்தவள்,
சட்டென நிறுத்தி...
ஏண்ணா சதா இப்படியே அடுப்படியவே
பார்த்துன்றிக்கேள்?

பேரனும் பேத்தியும்,
நிச்சயம் வீடியோ கால்ல வருவா
கவலைப்படாதேள்!

அது இல்லடி மண்டு,
ஒரு மாதிரியா இருக்கு.

இது மாதிரி இருந்து ரொம்ப நாளாச்சு,
எப்படி சொல்லுறதுன்னு தெரில.

கோவிலில் இருந்து வரும்போதே
கண்கட்டி வித்த மாதிரி
இருட்டிண்டு வந்துச்சுன்னு
ஆத்துக்காரர் சொல்லி முடித்தார்.

ஓ!
புரிஞ்சிடுத்து!
நான் அப்போவே சொல்லலாம்னு நெஞ்சுண்டேன்,
ஆனா சொல்லல..!
நீங்க வேற சின்ன பசங்களாட்டம்
காலையில கோவிலாண்ட பண்ணினது தப்புண்ணா!

சரி,
போங்கோ போங்கோ,
மெதுவா, மொத படுக்கையறைக்கு போங்கோ,
ஏசிய போட்டு வையுங்கோ,
செத்த நேரத்துல வரேன்னு சொன்னா
அவையாம்பிகா.

பத்து நிமிஷம் கழிச்சு,
கையலம்பி, புடவை தலைப்புல
நல்லா தொடச்சிண்டு,
படுக்கையறைக்குள்ள போனாள்...!

அவரோ கைவச்ச பனியன்,
வெள்ளை வேட்டியோடு படுத்திருந்தார்.

ஏண்ணா? ஏண்ணா?
லேசா கண்ண மூடுங்கோ
என்று சொல்லியபடி,
வேஷ்டியை தொடையோராம் மெதுவாக
விலக்கி விட்டு,
வலது கையால் இரு முறை
தடவிக் கொடுத்து,
சுரீரென்று இன்சுலின் ஊசி குத்தினாள்.

ஐயோவென அலறி
கத்தி அடக்கினார்,
மாமா.......!

எழுதியவர் : கணேஷ்குமார் balu (15-Dec-18, 1:02 am)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 662

மேலே