ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி- சிறுகதை மதுபால் விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் மதுபால் எழுதிய மலையாளக் கதை -------------தமிழாக்கம் அழகியமணவாளன்

ஆட்டோ ரிக்‌ஷாக்களும் கார்களும் ஆட்களும் நிறைந்த ஒரு ரயில்நிலையத்தின் காலைவேளை. பரபரப்பாக ஆட்கள் ஓடி வருகிறார்கள். சூரிய ஒளி பட்டு ரயில்நிலையம் ஜொலிக்கிறது. பயணிகள் பொறுமையின்றி காத்திருக்கும் நடைமேடைக்கு தண்டவாளம் வழியாக வடக்கு நோக்கிச் செல்லும் ஒரு ரயில் பாய்ந்துவருவதன் ஹெலிகாப்டர் ஷாட். டீசல்ப்புகையை கக்கியபடி ரயில் நடைமேடைக்கு வந்து நிற்கிறது. ஆட்கள் அவசர அவசரமாக ஏறி இறங்குகிறார்கள். தூரத்தில் சிக்னல் கம்பத்தில் மஞ்சள் நிறம் மாறி பச்சை எரிகிறது. ஸ்டேஷன் மாஸ்டரின் கையில் இருக்கும் பச்சைக்கொடி ஆட்களின் தலைக்குமேல் உயர்கிறது. எஞ்சின் ஓட்டுநர் தலையை வெளியே நீட்டுப் பார்க்கிறார். மக்கள்திரளின் மேல் விசிலோசை முழங்குகிறது. மெல்லமெல்ல ரயில் நகர ஆரம்பிக்கிறது. பயணிகளை வழியனுப்ப வந்தவர்கள் ரயிலிருந்து அகல்கின்றனர். ஜனங்களின் கண்முன்னாலேயே நத்தை வேகத்திலிருந்து குதிரைவேகத்திற்கு ரயில் பறக்கிறது.



சட்டென ரயிலின் பின்னிலிருந்து ஒரு பெண் காற்றைப்போல ஓடிவருவதைப் பார்க்கமுடிகிறது. அதைப் பார்த்தால் அவளுக்கும் ரயிலுக்கும் ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கிறது என்று தோன்றும். ரயில் அவளை தோற்கடிக்கப்போகிறது என்று பார்வையாளர்களுக்குத் தோன்றிய கணத்தில் ஒரு வித்தைக்காரி போல ரயிலில் பாய்ந்த்து ஏறிவிட்டிருப்பாள்.



கரும்புகை நிறைந்த ஆகாய விதானத்தில் இப்போது ஒரு தலைப்பு தெளிந்து வந்தது: ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறுவது எப்படி?



அருந்ததியின் காலைப்பொழுதுகள் எப்போதுமே ரயிலின் அலறலோடுதான் தொடங்கும். ஏழரைமணி ரயிலைப்பிடிக்க நாலுமணிக்கே எழுந்திருக்கவேண்டும். முதலில் சமையல்கட்டிற்குத்தான் ஓடுவாள்,மதிய உணவு தயாரிக்க. அரிசி கழுவி அடுப்பில் வைத்தவுடன் அது கொதிக்கும் இடைவேளையில் பாத்ரூமை நோக்கி ஓட்டம், ஒரு காக்காய் குளியல் அவ்வளவுதான்.அதற்குள் அரவிந்தன் எழுந்துவிட்டிருப்பான். அவன் வழக்கமான (எந்த காரணத்தாலும் தடைபடாத) காலைநடை சென்றுவிடுவான்.



போகும்போது ’கதவை தாள் போட்டுக்கொள் ’ என்று நினைவுபடுத்திவிட்டுச் செல்வான். பின்புள்ள மிச்சநேரமென்பது இலக்கைநோக்கி ஓடும் ஓட்டப்பந்தய வீரனுடையது போன்றது. அரவிந்தன் நடைசென்று திரும்பியவுடனேயே குடிக்க தேநீரும், குளிக்க வெந்நீரும் தயாராய் இருக்க வேண்டும். சந்துவை எழுப்பி பிரஷ்ஷில் பற்பசை வைத்து கொடுக்க வேண்டும். இதனிடையில் கடிகாரமுள் அதிவேகத்தில் சுழல ஆரம்பித்துவிட்டிருக்கும். மூன்றாம் வகுப்பில் படிக்கும் சந்து டைம் – டேபிள் படி புத்தகங்களை பேகில் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும்போது உச்சத்தில் “அம்மா பென்சில் பாக்ஸ் காணோம்” என்று கத்துவான். அதைத்தேடி எடுத்துக் கொடுக்கவேண்டும், அப்போது அவளையும் மீறி அவனை திட்டிவிடுவாள். எல்லா நாளுமே ஏதேனும் காரணத்திற்காக அவனை திட்ட வேண்டியிருக்கிறதே என நினைத்து அருந்ததி வருந்துவதுண்டு. அதற்குள் அழைப்பு மணி சத்தம் கேட்கும். அரவிந்தன்தான். அவன் வியர்வையை துடைத்துவிட்டு செய்திதாளுடன் வராண்டாவில் அமர்ந்துவிடுவான். தேநீர் கொடுத்துவிட்டு குளிப்பதற்கான வெந்நீர் பாத்ரூமில் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்த வேண்டும். மதிய உணவை டிபன் பாக்ஸுகளில் அடைத்து அதில் ஒன்றை சந்துவின் பையில் வைப்பாள். அவனை குளிக்கவைத்து சீருடை அணிவித்து தலைசீவிவிடுவாள். அதனிடையில் அரவிந்தன் குளித்து முடித்திருப்பான். சந்துவின் கூடவே அமர்ந்து காலையுணவு சாப்பிடுவான். அப்போது அவளிடம் ’நீ சாப்பிடவில்லையா’ என்பான். அருந்ததி அலுவலகத்திற்கு அன்று கட்டிப்போகும் சேலையை இஸ்திரி போட்டுக்கொண்டிருப்பாள். எல்லா நாட்களிலும் அவள் காலை டிபனை ரயிலில் வைத்துத்தான் சாப்ப்பிடுவாள் என்று அரவிந்தனுக்கு தெரியும் என்றாலும் ஒரு சடங்குபோல அந்த கேள்வியை கேட்க என்றுமே அவன் தவறியதில்லை.



அரவிந்தன் சந்துவை சாலைவரை ஸ்கூட்டரில் கொண்டுவிட்டு பள்ளிவேனில் ஏற்றிவிட்டு திரும்பிவரும்போது அருந்ததி சேலையுடுத்தி, பையை எடுத்து வீட்டைப்பூட்டி தயாராக இருப்பாள். சாவியை அரவிந்தனிடம் கொடுத்துவிட்டு ஸ்கூட்டரின் பின்சீட்டில் ஏறி ரயில்நிலையத்திற்கு செல்லும்வழியில் “இந்த மாத சீட்டுத்தவணை செலுத்த இன்றுதான் கடைசிநாள். மதியத்திற்குமுன் அதை கட்டினால்தான் இந்த தடவையாவது சீட்டு எடுக்கமுடியும்” என்பாள். அதற்கு பதில் என்பதுபோல அரவிந்தன் உம் என்பான். அச்சமயம் அவன் மனம்முழுக்க அடைக்க வேண்டிய கடன்களின் முடிவேயில்லாத கணக்குகளில் இருக்கும். அருந்ததியை ஸ்டேஷனில் இறக்கிவிடும்போது மணி ஏழரை ஆகியிருக்கும். அருந்ததி நடைமேடைக்கு ஓட ஆரம்பித்திருப்பாள். வண்டி அப்போது விசில் முழங்கியபடி கிளம்ப ஆரம்பித்திருக்கும்.



ரயில் வயல்கள், ஆறுகள், தென்னந்தோப்புகள், ஓட்டுகம்பெனிகள், சூரியஒளி இவற்றையெல்லாம் கடந்து எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது



4744 நம்பர் கம்பார்ட்மெண்ட் இப்போது ஒர் அலுவலக அறை. கூர்க்கஞ்சேரி கூட்டுறவு வங்கியில் கணக்காளர் சாரதா கோப்புகளில் மூழ்கியிருந்தாள். வருட முடிவு கணக்குகளில் கடனைத் திரும்ப செலுத்தாதவர்களின் பட்டியலை முடிக்கவில்லை என்றால் மேலதிகாரி சிவராமகிருஷ்ணனின் வசைகளை கேட்கவேண்டியிருக்கும் என்று அவளுக்குத்தெரியும். அதனால் அலுவலகத்திலேயே வைத்து முடிக்க முடியாத வேலைகளை வீட்டிலும்,ரயிலிலும் செய்ய வேண்டியதாகிறது.



சாரதா ‘குரியச்சா, விவசாய கடன் வாங்கியவர்களின் பட்டியலை சாருக்கு கொடுத்துவிட்டீர்கள் அல்லவா?’ என்று கேட்டபடி கோப்புகளிலிருந்து தலையை வெளியே நீட்டி பார்த்தாள். குரியச்சன் ஒரு நகைச்சுவை சொல்லி சிரித்துக்கொண்டிருந்த இடைவெளியில் ’கொடுத்து விட்டேன்’ என்றார்.



இப்போது அந்த அறையில் குரியச்சனையும் சாரதாவையும் தவிர்த்து ஆறு பேர் இருந்தனர். அனிருத்தனும் ராமேஸ்வரனும் வங்கியில் குரியச்சனின் கூட வேலை செய்பவர்கள். அழகுமணியும் ஷெனாய் என்று அழைக்கப்படும் பத்மநாபனும் அருந்ததியின் ஆபீஸில் வேலை செய்பவர்கள். பிரபாகரன் பங்குச்சந்தை அலுவலகத்தில் வேலை செய்கிறான். எல்லோருக்கும் சுமார் முப்பத்தி ஐந்திற்கும் நாற்பதிற்கும் இடைபட்ட வயதிருக்கும்.



குரியச்சனுக்கு என்றுமே சொல்வதற்கு ஒரு கதை இருக்கும். பக்கத்துவீடுகளிலோ,சுற்று வட்டாரத்திலோ நடந்த அல்லது நண்பர்கள் சொல்லிக்கேள்விப்பட்ட மரண சம்பவங்களின் கதைகளை எல்லா காலைநேரங்களிலும் மரணத்தின் கருமையோடு சொல்வார்.



”ரயில் முன்னால் விழவேண்டும் என்றால் அசாதாராணமான தைரியம் வேண்டும்……. அவனுக்கு என்ன குறைச்சல் என்றுதான் நான் யோசிக்கிறேன். மாதா மாதம் கிடைக்கும் மூவாயிரம் ரூபாய். ஒரு மனைவியும்,குழந்தையும் உள்ள குடும்பத்திற்கும் அதுவே தாராளம்”

.

”அப்படியென்றால் என்ன நடந்தது??” ராமேஸ்வரன் ஆவலோடு கேட்டான். தேர்ந்த ரசிகனின் எல்லா அம்சங்களையும் உடையவர்கள் ராமேஸ்வரனும் அனிருத்தனும். அதனால் என்றும் குரியாச்சனின் கதைகளுக்கு அவர்களின் காதுகள் தயாராக இருக்கும்



” ஒரு தகவலும் இல்லை. துபாய் போக விசாவும் டிக்கெட் முதற்கொண்டு எடுத்து வைத்திருந்திருக்கிறான். கம்பெனியில் ஒரு வருடம் லீவும் வாங்கியாகிவிட்டது. பத்தாம்தேதி கிளம்புவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு ஊருக்குச் சென்று அம்மாவையும் பார்த்திவிட்டு வருகிறேன் என்று சென்றவன்………நான்கு நாட்கள் கழித்து ஊரிலிருந்து ஆட்கள் வந்து சொன்னார்கள்… அனாதைப்பிணம் என்று நினைத்து போலீஸ்காரர்கள் அப்புறப்படுத்தப் பார்த்தார்கள்.. அப்போது ஒருவனுக்கு தண்டவாளத்திலிருந்து அவனுடைய ஃபோன் டைரி கிடைத்திருக்கிறது. பின்பு உறவினர்கள் வந்து எடுத்துக்கொண்டு சென்றனர். இல்லாவிட்டால் அந்த பெண்ணும் குழந்தையும் பாவம் ஒன்றும்தெரியாமல் காத்திருந்திருப்பார்கள்………” குரியச்சன் முடிப்பதற்குள்ளேயே இடையில் புகுந்து அனிருத்தன் கேட்டான்



‘ஒன்றும் எழுதி வைக்கவில்லையா?”



” என்ன எழுதிவைப்பது.. ஒன்றும் யாருக்கும் தெரியவில்லை.. சும்மா நாம் ஏதாவது காரணங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.,”



’ அவருக்கு மனைவியுடன் ஏதாவது பிரச்சனை இருக்கலாம்”



என்ன பிரச்சனை?அப்படிப்பார்த்தால் யாருக்குத்தான் பிரச்சனை இல்லை?”

.

பின்பு யாரும் ஒன்றும் பேசவில்லை.எல்லோரும் அவரவர் வாழ்க்கையை ரீவைண்ட் செய்து பார்த்துக்கொண்டார்கள். போய் மறைந்த காலத்தின் வண்ணங்கள் நிறைந்த காட்சிகளை கண்டார்கள். பின்பு மௌனத்தின் பொற்சிமிழுக்குள் சென்றுவிட்டனர்.



அரக்கத்தனமான தாளத்தில் ரயில் அதன் பயணத்தை தொடர்ந்தது.



நிறைவேறாத ஆசைகளுடன் உயிரை மாய்த்துக்கொண்ட அந்த மனிதர்களைப்பற்றி நினைக்கும்போது அருந்ததியின் கண்கள் நிறைந்துவிடும். பொறுப்புகளும்,பிரச்சனைகளும் உருவாகும்போது ஏன் சொந்த உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். மரணம் எதையும் தீர்ர்த்துவைத்துவிடாதே என்ற சந்தேகம் எஞ்சும்போது குரியச்சன் சொல்வார்



‘இந்த பூமி மனிதன் வாழ இயலாததாக ஆகிவிட்டிருக்கிறது. அதனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு கிளம்பத்தான் எல்லோரும் அவசரப்படுகிறார்கள். அதனால்தான் மரணத்தை துணைக்கு அழைக்கிறார்கள்… ஒன்றுக்கும் ஒரு உறுதியும் இல்லாத இந்த வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க யாருக்குத்தான் இந்தக்காலத்தில் விருப்பமிருக்கிறது?’



ரயில் ஏதோ இரும்பு பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது. குரியச்சன் ஒரு சிகரெட் பற்றவைத்து புகைவிட்டார். பெட்டியில் புகைவளையங்கள் உயர்ந்து வந்தபோது சாரதா அவரைப் பார்த்தாள். ‘சாரி.சாரதா மேடத்திற்கு சிகரெட் புகை மணம் பிடிக்காதல்லவா என்று கிண்டலாக சொல்லிவிட்டு குரியாச்சன் எழுந்து சென்றுவிட்டார். சாரதா ஒன்றும் சொல்லாமல் மீண்டும் ஃபைல்களில் தலைபுதைத்துக் கொண்டாள்.



வாழ்க்கைக் கடிகாரத்தின் ஒவ்வொரு நிமிடமுள்ளையும் கணக்குப்பதிவேடு வழியாக கடத்தும் சாரதாமேடத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஆனந்த் எழுதிய “ஃபைல்வான்கள்” என்ற கதைதான் அருந்ததிக்கு நினைவுக்குவரும்.



அருந்ததி கைப்பையிலிருந்து டிபன் பாக்ஸை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.



கைகழுவி வந்தபிறகு அவள் பையிலிருந்து பயணத்தின் அலுப்பைபோக்க ஒரு புத்தகத்தை எடுத்தாள்.



‘என்ன புக் அருந்ததி’ பத்மநாபன் கைநீட்டி புத்தகத்தை வாங்கினான்.



பத்மநாபனும் வாசிப்பில் ஆர்வமுள்ளவன் என்று அருந்ததிக்கு தெரியும். அதனாலேயே அவர்கள் எழுத்துகளால் இணைக்கைப்பட்டிருந்தனர்.



பார்த்துவிட்டு ‘ஓ.. இதை நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்’ என்று திருப்பிக்கொடுத்துவிட்டான். அருந்ததி எழுத்துகளின் கருமையில் கண்களைத் தாழ்த்தியபோது குரியச்சன் மீண்டும் ஒரு கதை சொல்லத்தொடங்கினார்.



‘புதுக்காட்டிலிருந்து ஒரு கல்யாண கோஷ்டி பஸ்ஸில் ஏறியது. நம்முடைய கரூவூல அலுவலகத்தில் இருக்கும் சசாங்கனும் பஸ்ஸில் இருந்திருக்கிறான். குழந்தைகளும் பெண்களுமாக நிற்கவோ திரும்பவோ முடியாதபடி நெருக்கியடித்தக் கொண்டு அந்த கல்யாண கோஷ்டி வந்தது. சசாங்கனின் பக்கம் ஒரு பிள்ளை நிற்கிறது மூன்று நான்கு வயதிருக்கும். கூட்டத்தில் அது மிகவும் கஷ்டப்பட்டது. நமது சசாங்கன் மனிதர்கள் மேல் கொஞ்சம் கூடுதல் பற்றுள்ளவன் இல்லையா? அவன் கேட்டுக்கொள்ள குழந்தையைத் தூக்கி அவன் மடியில் கொடுத்தனர். பஸ் அப்படியே போய்க்கொண்டிருந்தது. ஆட்களை எற்றியும் இறக்கியும் விட்டபடி வண்டி திரிச்சூர் வந்தது. சசாங்கன் இறங்கவேண்டிய இடம். குழந்தை நன்றாக தூங்கிக்கொண்டிருந்தது பாவம் … சசாங்கன் பார்த்தான். பஸ்ஸில் எல்லோரும் இறங்கிவிட்டிருந்தனர். அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்று ஒன்றுமே புரியவில்லை. குழந்ததையை அதனுடைய ஆட்கள் வந்து கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள் என்று எண்ணி அங்கேயே விட்டுவிட்டு தான் இறங்கி விட முயன்றபோது குழந்தை எழுந்துவிட்டது. ஒரே அழுகை. அதைகேட்டு ஆட்கள் கூடிவிட்டனர். சசாங்கன் அவர்களிடம் பிள்ளையின் சொந்தக்காரர்கள் ஒருவரையும் காணவில்லை என்றான். ஆனால் ஆட்கள் அவனை விடவில்லை. பின்பு அவர்கள் இஷ்டத்திற்கு பேச ஆரம்பித்தார்கள். எங்கு அவன் குழந்தையை கடத்திக்கொண்டு போகிறான் என்றும் பிள்ளையின் கையிலும் கழுத்திலும் உள்ள நகைகளை திருடிவிட்டு செல்கிறான் என்றும் என்னென்னவோ சொல்லி அவனை திட்ட ஆரம்பித்தனர். பின்பு நடந்த விஷயங்கள், சே, அதை எப்படிச் சொல்வது. எல்லோருமாக சேர்ந்து அவனொரு பக்கா திருடன் என்றே முடிவு செய்து விட்டிருந்தனர். குழந்தையையும் எடுத்துக்கொண்டு அவனை பஸ்ஸிலிருந்து இறக்கி நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். ஸ்டேஷனில் மேலும் ஆட்கள் சேர்ந்தனர். ஒரு பேரணி போல முன்பு குழந்தையை தூக்கிகொண்டு சசாங்கனும் பின்னாடி அவர்களும் சென்றனர். வழியில் சேர்ந்து கொண்டவர்களெல்லாம் அவனை வசைபாடவோ சிரிக்கவோ செய்தபோது பாவம் சசாங்கனால் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஸ்டேஷனுக்கு சென்றபிறகு நடந்தவை அப்பப்பா அதையெல்லாம் என்னால் சொல்லமுடியாது. போலீஸ்காரர்கள் அவன் சொல்வது எதையும் கேட்கத் தயாராக இல்லை. பிடித்து உள்ளே தள்ளிவிடுவோம் என்று பயங்காட்டினர். ஒரு பழந்துணிச்சுருளைப்போல அவனை ஒருமூலையில் தள்ளிவிட்டனர். விவரமறிந்து நாங்கள் சிலர் காவல்நிலையம் சென்றபோது நிலைமை தலைகீழாக மாறிவிட்டிருந்தது.



குழந்தையை காணவில்லையென்று அதன் தாயும் உறவினர்களும் வந்துவிட்டனர். கல்யாண கோஷ்டி வழியில் இறங்கியபோது ஒவ்வொருவரும் குழந்தை மற்றவரிடம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு யாரும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. பின்பு எல்லாம் முடிந்து சசாங்கனும் அவர்களும் வெளிய வந்தபோது ஒரு ஆள் இல்லை. வசைபாடியவர்கள்,சிரித்தவர்கள் ஒருவரும் இல்லை.ஆனால் அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ வந்து மன்னிப்பெல்லாம் கேட்டுக்கொண்டார்.



“இந்தகாலத்தில் மனிதனுக்கு எதிலும் நம்பிக்கையில்லை…பிறகென்ன? … யார் சொல்வதையும் கேட்பதில்லை.’ மனிதனுக்கு கருணை,அன்பு ஒன்றும் தேவைப்படவில்லை. யாருக்காவது ஏதாவது உதவி செய்யப்போனால் அது சிலுவை சுமத்ததலில்தான் போய்முடியும்”.



லெவல் க்ராஸிங்குகள், நடமாட்டமில்லாத இடைவழிகள் ,ஓலைவேய்ந்த குடிசைகள், இவற்றையெல்லாம் கடந்து ரயில் ஓடிக்கொண்டேயிருந்தது. அருந்ததி கைக் கடிகாரத்தைப்பார்த்தாள். பதினைந்து நிமிடங்களில் வண்டி திரிச்சூரில் இருக்கும் என்று கணக்குப்போட்டாள். புத்தகத்தை பையில் வைத்துவிட்டு எழுந்தாள். கழிப்பறைக்கு முன்னால் இருக்கும் வாஷ் பேசினில் முகம்கழுவி துடைத்துவிட்டு வெளியே பார்த்தாள். ஒல்லூரில் வண்டி நின்றது, நல்ல கூட்டம். ஆட்களைப்பார்த்தபோது அவளுக்கு சந்து தொலைக்காட்சியில் பார்க்கக்கூடிய ரோபோக்களின் அசைவுகள் நினைவுக்குவந்தது. அந்தக்காட்சியைப் பார்த்தபடி அவள் கதவுக்குப் பக்கத்திலேயே நின்றுவிட்டாள். வண்டி நகரத்தொடங்கியபோது ஒரு பெண் நடைமேடை வழியாக ஓடி வருவதைப் பார்த்தாள். அவளுடைய கையில் ஒரு சின்னக்குழந்தையும் இருந்தது. ஒவ்வொரு பெட்டியின் கதவையும் பார்த்தபடியே அவள் வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தபோது அதற்குப் போட்டியாக வண்டியும் தன் வேகத்தைக் கூட்டியது. அந்த பெண் அருந்ததி நின்றிருக்கும் கதவிற்கு அருகில் வந்து ஒரு கையை நீட்டினாள்.



‘ஏறுகிறீர்களா?’ என்றாள் அருந்ததி.



‘உம்’



‘குழந்தையை இப்படிக்கொடுங்கள்’ என்று சொல்லியபடி அருந்ததி கைநீட்டி குழந்தையை வாங்கிக்கொண்டு கதவிலிருந்து தள்ளி நின்றாள். அந்த பெண் வண்டியில் ஏறிவிடுவார் என்றுதான் நினைத்தாள். அந்நேரத்திற்கு ரயில் தன் உச்சபட்ச வேகத்தை எட்டியிருந்தது. ஸ்டேஷனை பின்னுக்குத்தள்ளியபடி வண்டி முன்னே சென்றுவிட்டிருந்தபோது அருந்ததி என்ன செய்யவேண்டுமென்று தெரியாமல் கதவருகில்சென்று தலையை வெளியே நீட்டிப்பார்த்தாள். கூட்டத்தில் எங்கேயோ அப்பெண்மணி மறைந்துவிட்டிருந்தார். கையிலிருக்கும் குழந்தையைப்பார்த்தாள். ஏறக்குறைய ஒன்றோ,இரண்டோ வயதிருக்கும். அருந்ததி அதன் முகத்தையே பார்த்துக்கொண்டு என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தாள். ராமேஸ்வரன் அருந்ததியையும் குழந்தையையும் மாறி மாறி பார்த்தான்.



‘என்ன……… என்ன ஆயிற்று? யாருடைய குழந்தை இது.’



’இது……. அந்தப்பெண் குழந்தையை என் கையில் தந்துவிட்டு வண்டி ஏறாமல்…..’ அருந்ததிக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை. உதடுகள் நடுங்கின. கண்கள் நிறைந்தன. ‘ரயிலை நிறுத்துங்கள்’ என்று ஆட்கள் கத்த ஆரம்பித்தனர். அருந்ததியையும் குழந்தையையும் சுற்றி ஏகப்பட்ட பேர் கூடிவிட்டனர். எல்லா கண்களும் குழந்தையின் முகத்தில் பதிந்தன. அதை அறிந்துவிட்டது என்பதுபோல மெதுவாக குழந்தை கண்களை திறந்தது. இப்போது அது அழப்போகிறது என்றும் அதன் அழுகையை நிறுத்த இங்கு யாராலும் முடியாது என்றும் அருந்ததி நினைத்தாள். ஆனால் கண்களைத்திறந்த குழந்தை அவளைப் பார்த்து சிரித்தது.



‘என்னை உங்கள் கையில் கொடுத்து தவிர்த்து விட்டார்கள் இல்லையா? ’



இவ்வளவு சின்னக்குழந்தை இத்தனை தெளிவாகப் பேசியது கேட்டு திடுக்கிட்டு அருந்ததி கேட்டாள் ‘தவிர்த்துவிட்டார்களா?’



‘அம்மாவுக்கு வேறு வழியில்லை’



சற்றும் எதிர்பாராத விதமாக குழந்தை மீண்டும் தூங்குவதற்காக கண்களைத் தாழ்த்தியது.





இந்த உலகத்தில்தான் என்னென்ன மாதிரி அதிசயங்களெல்லாம் நடக்கிறது!. இந்தக்கதையை வேண்டுமென்றால் இனியும் நீட்டி எழுதலாம். அருந்ததியும் அங்கிருந்த நண்பர்களும் ரயில்வே போலீஸுக்கு விவரத்தை தெரிவித்தனர் என்றோ அல்லது குழந்தையை அனாதை ஆசிரமத்தில் ஒப்படைத்தனர் என்றோ



இல்லாவிட்டால் குழந்தையை தானே வைத்துக்கொண்டு நிம்மதியாக ஒரு புது வாழ்க்கையை தொடங்கினாள் என்றோ, எப்படி வேண்டுமென்றாலும் இந்த கதையை மாற்றி மாற்றி எழுதிக்கொள்ளலாம். ஆனால்,அந்த கணத்தில் அருந்ததியுடைய மனஓட்டம் வழியாக ஒருமுறை சென்று மீண்ட கதைசொல்லி அவள் மனதிலிருந்தது வேறொன்று என்பதை அறிந்துகொண்டார். நாளை காலையும் அவசர அவசரமாக ரயில்நிலையத்திற்கு வந்திறங்கும்போது ரயில் கிளம்பியிருக்கக்கூடாது என்ற பிரார்த்தனை மட்டும்தான் அவள் மனதிலிருந்தது. இதை அறிந்தபிறகு, கதைமுடிவை அறியாமல் ரயில்பெட்டியில் குழந்தையுடன் அருந்ததி நின்றிருப்பதன் ஒரு நீளக் காட்சியுடன் (long shot) இந்த கதையை முடிக்க கதைசொல்லி தீர்மானித்தார்.






ஜெ
மின்னஞ்சல்

எழுதியவர் : (15-Dec-18, 4:34 am)
பார்வை : 58

மேலே