திகிலும் ருசிக்கும்-13

திகிலும் ருசிக்கும்-13

மோகினியின் கதையை கேட்கும் ஆர்வத்தை காட்டிலும் உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வேகம் அதிகமாக இருந்தது..

மோகினி எதோ ஒரு பெரிய பிளாஷ்பேக்கை சொல்லி என்னை உறைய வைக்க போகிறது என்ற எண்ணத்தில் காத்திருந்த எனக்கு மோகினியின் பேச்சு சொல்ல முடியாத தடுமாற்றத்தை கொடுத்தது...

"அன்னைக்கு அந்த குடிசைக்கு போகலைன்னா இந்நேரம் உங்களை மாதிரி ஒரு பையனுக்கு அம்மாவா இருந்திருப்பேன்..."

"என்ன மோகினி சொல்ற.."

"ஆமா, அது ஒரு பெரிய கதை, ஆனா அத்தனையும் நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லை , உங்களுக்கு தெரிய வேண்டியதை மட்டும் சொல்றேன்...எங்க ஊருல ஒரு பழக்கம் உண்டு,பொண்ணுங்க வீட்டுக்கு தூரமாகிட்டா ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்க குடிசையில தங்க வைப்பாங்க, அவங்களுக்கு தேவையானதை அவங்களே பண்ணிக்கணும், தலைக்கு குளிக்கற வரை ஊருக்குள்ள வரக்கூடாது..."

"என்னது, இப்படி ஒரு பழக்கமா"

"ஆமா, பல வருஷங்களுக்கு முன்னாடி இந்த மாதிரி பல பழக்க வழக்கங்கள் ஊருக்குள்ள இருக்கும், அத மீறி யாரும் நடக்க முடியாது, அப்படி மீறினா அவங்க ஊருக்குள்ள இருக்க முடியாது"
சற்று திகைப்போடு மோகினியை பார்த்துக்கொண்டிருந்தேன்...

"எனக்கு இஷ்டமே இல்லைனாலும் என்னை சுத்தி இருந்தவங்களோட வற்புறுத்தலால அந்த குடிசைக்கு போக வேண்டிய கட்டாயம்..வேண்டா வெறுப்பா போனேன்..அப்படி போனதால என் வாழ்க்கையே முடிஞ்சிபோகும்னு எனக்கும் தெரியாது, என்னை கட்டாயப்படுத்தி அனுப்பின அம்மாவுக்கும் தெரியாது..."

மோகினியின் குரல் உடைய ஆரம்பித்தது, கண்கள் கலங்க தன்னை தொலைத்த வலியோடு மோகினி என்னை பார்த்ததும் மனம் பதற ஆரம்பித்தது...

ஏதோ மோகினியோடு அந்த வலியை நானும் அனுபவித்தது போன்ற ஒரு உணர்வு...என்ன சொல்லி ஆறுதல்படுத்த முடியும், என்ன முயன்றாலும் வார்த்தை வரவில்லை, மோகினியே மீதியையும் சொல்லட்டும் என்று காத்திருந்தேன்...

"எப்படியெல்லாமோ வாழணும்னு ஆசைப்பட்டேன், ஆனா அத்தனையும் தவிடுபொடியாக்கிட்டாங்க, அவங்களை பழிவாங்க தான் காத்திருந்தேன், இப்போ அதுக்கான நேரமும் வந்தாச்சு, இனி நான் என் பகையை தீர்த்துப்பேன்..."
மோகினி அதற்குள் கதையை முடித்துவிட்டதில் எனக்கு குழப்பமே மிஞ்சியது, மூடப்பழக்கத்தால் மோகினி இறந்தவரை சரி, ஆனால் அதற்கு யார், எப்படி காரணம் என்பதெல்லாம் விளக்காமல் கதை முடிந்துவிட்டதே..

"மோகினி, நீ ..."

"என்ன கேட்கப்போறிங்கனு எனக்கு தெரியும்ப்பா, நான் முன்னயே சொன்னதுபோல உங்களுக்கு இவ்வளவு தெரிஞ்சா போதும், இனி என்கிட்ட எதுவும் கேட்காதீங்க, கேட்கவும் கூடாது"

"ஆனா மோகினி நீ எதுவுமே சொல்லாம..."

"ஆமா எதுவுமே சொல்லாம தானே எனக்கு சத்தியம் செய்திங்க, அதுவும் பொறக்க போற பாப்பா மேல, இப்போ அந்த சத்தியத்தை காப்பாத்த வேண்டியது உங்க பொறுப்பு...இப்போ நீங்க செய்ய வேண்டியதெல்லாம் நான் சொல்றதை கேட்கறது மட்டும்தான், மத்ததை நான் பார்த்துக்கறேன்..."
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இடையில் அகப்பட்டுக்கொண்டு என்னத்தை சொல்வது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன்...

அப்பொழுது தான் மோகினி தன் அசுரரூபத்தை காட்டியது, முன்பு போல் அழகிய தேவதையாக இல்லாமல் மனதை நடுங்க செய்யும் ரூபத்தில் என் உயரத்திற்கு மேல் பெரிதாகி கொண்டே போனது, "சொன்னதை செய்" என்ற மோகினியின் ராட்சச குரல் அடிவயிற்றில் சுளீரென்று ஓர் பயத்தை உண்டுபண்ணியது...

உடலெல்லாம் வேர்த்து கொட்ட, கால் கையெல்லாம் நடுங்க கண்கட்டிக்கொண்டு வந்தது, எந்த நேரத்தில் மயங்கி விழுவேன் என்று நொடிகணக்கை எண்ணிக்கொண்டிருந்தேன்...
மயங்கி விழுந்தால் கூட தேவலாம் என்று ஓர் நப்பாசை உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது..

என் நிலையை யூகித்த மோகினி மெல்ல பழைய நிலைக்கு வந்து மெல்லிய குரலில் சொன்னது...

"சொன்னதை செய்யலைன்னா உங்க குழந்தையை கூடவே கூட்டிட்டு போய்டுவேன்ப்பா..."

அப்படி ஒரு அழுத்தமான மென்மையான குரல், இதற்குமுன் காட்டிய ராட்சச உருவமெல்லாம் கண்ணுக்கு பயத்தை தந்திருக்கலாம், இந்த தீர்க்கமான வார்த்தையோ என் ஒட்டுமொத்த நம்பிக்கையையே ஆட்டிவிட்டது...
ஒரு கணம் உலகமே சுற்றி தட்டாமாலை ஆடியது, எந்த மோகினி என் குழந்தையின் வரவில் மகிழ்ந்ததோ அதே மோகினி என் குழந்தைக்கு எமனாக மாறிவிட்டதே, கனகாவின் கனவை கலைக்க என் முன் ஒரு ராட்சச சக்தி இத்தனை நாளாக மகள் ரூபத்தில் விளையாடிருக்கிறதே... "மோகினி உன்பக்கம் நியாயம் இருக்கலாம், அநியாயமா நீ செத்துருக்கலாம், ஆனா பாசத்தோட என்னை அப்பான்னு கூப்பிட்ட நீ , அதே அப்பாவோட கனவை நாசமாக்க போறியா"

"என் பழிதீர்க்கற எண்ணத்துக்கு முன்னாடி எதுவும் எடுபடாதுப்பா, என் மனச மாத்த முயற்சி பண்றத விட்டுட்டு நீங்க மாற முயற்சி பண்ணுங்க, இன்னைக்குள்ள நீங்க எனக்கு ஒரு நல்ல முடிவா சொல்லணும், அத தவிர உங்களுக்கு வேற வாய்ப்பு இல்ல...
இதை சொல்லிவிட்டு மோகினி மறைந்துவிட பதட்டம், பயம் எல்லாம் சேர்ந்து வயிற்றை புரட்டியது...

மோகினி சொல்வதை செய்வதா,இல்லை மோகினியை எதிர்த்து போராடி வெல்வதா..எந்த வழியை தேர்ந்தெடுப்பது...விடை தெரிய வழியில்லாமல் போகவே தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்...அப்பொழுது தான் ஒரு யோசனை தோன்றியது.

எழுதியவர் : ராணி கோவிந்த் (18-Dec-18, 6:53 pm)
பார்வை : 561

மேலே