அதிசயப் பதுமை

கால்கொண்டு நடமாடும் கலையழகு ஓவியம்
=கண்பார்க்கின் பிறப்பெடுக்கும் கவிஞர்க்குக் காவியம்
பால்நிலவின் பூமுகத்தில் பனித்துளியின் சீவிதம்
=பழங்கால சரிதைதனைப் பதுக்கிவைத்தக் காகிதம்
நூல்கொண்டு இடைநெய்த நூதனத்தின் நூதனம்
=நூலாகாக் காவியங்கள் நோக்கநல்ல நூலகம்
சேல்நீந்திக் களிக்கின்றச் சிறுநயன சாலகம்
=சிக்குதற்கு மனப்பூச்சி சிறகடிக்கு மனுதினம்
**
தேனருவி பாய்ந்துவரும் தேவதையா ளதரம்
=தீராத காதல்நோய் தீர்த்துவைக்கு மமுதம்
வானவெளித் தோன்றுகின்ற வானவில்லை நிகர்த்த
=வனப்புமிக்கச் சித்திரமாம் வஞ்சியவள் புருவம்
கானகத்துப் பூங்குயிலின் கனிந்தமொழி இசைவாய்
=காற்றலையில் தவழ்ந்துவரும் காரிகையின் குரலில்
ஆனமட்டும் நடனமிட்டு ஆடியாடி மகிழ்ந்து
=அனவரதம் மழைபொழிவை ஆதரிக்கும் மயிலும்.
**
எத்தனுக்கும் ராத்தூக்க எமனாகும் இரவை
=ஏந்திழையாள் பேரழகு எடுத்துவைக்கும் புதுமை
பித்தனைத்தும் தெளியவைக்கும் பிணிமருந்துக் குடுவை
=பெண்ணவளின் கண்ணசைவு பில்லிசூன்ய கலவை
புத்தனவன் நேர்வரினும் புரண்டுவிழும் குழியைப்
=புன்சிரித்துக் கன்னத்தில் புரளவிடும் மகிமை
அத்தனையும் கொண்டவொரு அதிசயந்தான் பதுமை
=அடியெடுத்து நடந்துவர ஆடவர்கண் விடுமோ
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Dec-18, 10:07 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 207

மேலே