பெற்ற சிறப்புக்கு அணி செருக்கு இன்மை – அணியறுபது 58

நேரிசை வெண்பா

பிறப்புக் கணிபின் பிறவாமை; பெற்ற
சிறப்புக் கணிசெருக் கின்மை – இறப்புக்கோ
அல்லல் உறாமல் அமைதியாய் ஆதலணி;
நல்லசெயல் யார்க்கும் அணி. 58

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

பின்பு பிறவாமையே பிறவிக்கு அழகு: செருக்கு இல்லாமையே சிறப்புக்கு அழகு; வேதனையுறாமல் வீதலே இறப்புக்கு அழகு; நல்லவை செய்தலே எல்லார்க்கும் இனிய அழகு ஆகும். அல்லல் உறாத அமைதிகள் இப்பாடலில் அறிய வந்தன.

’பிறவா யாக்கைப் பெரியோன்’ என்பது இறைவனுக்கு ஒரு பெயராய் வந்துள்ளது. இத்தகைய ஆண்டவனிடமிருந்து பிரிந்து வந்து சீவன் பிறவித் துயரங்களில் அழுந்தி உழந்து திரிகிறது. சித்தம் தெளிந்து தனது நிலைமையை உணர்ந்து மீண்டும் பிறவாதபடி முத்தியை அடைந்து கொள்வதே அரிய பிறவியால் பெறவுரிய பெரிய பேறாம்.

செல்வச் செருக்கு, கல்வித் தருக்கு, குலத்திமிர். அதிகார மமதை, பதவி இறுமாப்பு என்பன பெரிய மனித இனத்தை எவ்வழியும் இறுகப் பற்றிச் சிறிய புலையாக்கிச் சீரழித்து விடுகின்றன.

இவை வளமாய் எய்திய பொழுது தம்மைப் பெரியராக எண்ணிப் பெரும்பாலும் மனிதர் களிக்க நேர்வர். செருக்கு தருக்கு இறுமாப்பு மமதை அகங் காரம் என்பன எல்லாம் மடமைக் களிப்புகள்: இவற்றை அடைய நேர்ந்தவர் சிறுமை அடைவர். தமக்கு வாய்த்த சிறப்புகளைக் கருதிச் செருக்கு உறாதவரே சிறந்த மேலோராய் உயர்ந்து திகழ்வர்.

சிறப்பு - கல்வி செல்வங்களால் ஆன பெருமை.

பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். 979 பெருமை

சிறந்த பெரியோர் யார்? இழிந்த சிறியவர் எவர்? என்பதை இதில் தெளிவாய்த் தெரிந்து கொள்கிறோம். இயல்பின் அளவே உயர்வு.

தக்க மேன்மைக்கு அடையாளம் கீழ்மையான செருக்கு யாதும் உள்ளத்தே கொள்ளாமையேயாம். மதிகேடான மடமையிலிருந்தே மமதைகள் விளைகின்றன. அவற்றால் அவலத் துயர்களாகின்றன.

இறப்பு - இறுதியுறுவது; முடிவு: சாவு. பிறந்தவர் எவரும் இறந்தே போவர். உடம்பை விட்டு உயிர் பிரிய நேரும்போது கொடிய துயரங்கள் நேர்கின்றன.

எழுசீர் விருத்தம்
(மா விளம் விளம் விளம் / மா விளம் மா)

பரணம் ஆகிய பெண்டிரும் சுற்றமும்
பண்டு தங்கையில் தந்த
இரணம் ஆனவை கொண்டிட இவரைவிட்டு
இயம்பி டாதிவண் ஏகும்
மரண வேதனை யாவரால் அறியலாம்?
மயங்கி ஐம்புலன் அந்தக்
கரணம் யாவையும் கலங்கிட வருந்துயர்
கடவு ளேஅறி. கிற்பார். (பெருந்திரட்டு)

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

வந்திடும் மரணத் துன்பம்
மறித்துரை செய்யப் போமோ
உந்திமேல் ஐயும் பித்தும்
உணர்வொடு பொறிக லங்கி
நந்திடா இருளே மூடி
நாவுலர்ந்(து) அலமந்(து) என்னே
இந்தமா இறப்பின் துன்பம்
பவத்துன்பத்(து) எண்ம டங்கே. - மெய்ஞ்ஞான விளக்கம்

இவ்வாறு துன்பங்கள் நேராமல் சாவது ஒர் அரிய பேறாம். அநாயாச மரணம் அதிசய பாக்கியம்.

மீண்டும் பிறவாமைக்கு வழி செய்.
நீண்ட செருக்கை நெஞ்சில் கொள்ளாதே.
இதமாய் மாள இறைவனை வேண்டுக.
யாண்டும் நல்லதையே செய்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Dec-18, 6:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 78

மேலே