ஓயாத நதியா பாயுமோ

=========================
அட்டை கடிக்கையிலே
அடைமழையும் அடிக்கையிலே
கூடைய மாட்டிக்கிட்டு
கொழுந்து கொய்து போடும் பெண்ணே
கூடை நிறைஞ்ச போதும் நீ
கொண்ட துயர் மாறலியே...
**
பிள்ளை மடுவத்திலே
பிஞ்சு குழந்தைய விட்டு
சொல்ல வழியும் அற்று
சோகம் நெஞ்சில் வழிய வழிய
கிள்ளி கொழுந்தெடுப் பாயே உன்
கிழிஞ்ச துணி மாறலியே..
**
கண்காணி திட்டுவான்னு
கணக்குப்புள்ள கொட்டுவான்னு
கண்ணீர மறைச்சு வைப்பாயே
கால் வயிற காய வைப்பாயே
எந்நாளும் உழைச்சு உழைச்சும்
இன்னும் துயர் மாறலியே
**
பழங்கால லயத்துக் கூரை
படபடன்னு காத்தில ஆட
பதறிப்போய் ஆடி நிற்பாயே
பஞ்சத்திலே வாடி நிற்பாயே
மழைபேயும் காலம் வீட்டில்
மண் பானை பரப்பி வைப்பாயே
**
மளிகை சாமான் எல்லாம்
மாசம் மாசம் விலை ஏறும்
மந்திரி சபை கூட
மாசம் மாசம் மாறுமம்மா
மலைநாட்டுப் பெண்ணே சம்பளம்
மட்டும் உனக்கு உயராதம்மா..
**
பாயிலே படுத்துக்கிட்டு
பழைய கனவை கண்டுக்கிட்டு
ஆயிரம் கேட்டுக்கிட்டு
அடம் பிடித்து அழுற பெண்ணே
ஓயுமோ உனது அழுகையே ..இல்ல
ஓயாத நதியா பாயுமோ..
**
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Dec-18, 12:31 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 90

மேலே