கவிக்குயில் பாரதி

லட்சுமியின் தலை மகனாய்
ஒன்றானவன்
சாரஸ்வதியின் கலையோடு
ஒன்றானவன்

தங்கம்மாள் சகுந்தலா என
இரு பெண் பெற்று இரண்டானவன்
இறக்கும் வரைப் பண் பாடியே இறந்தான் அவன்
உலகிற்குத் தன்னை மெழுகாக்கி
1921 ல் இருண்டான் அவன்

பாரதி என மூன்றானவன்
இயல் இசை நாடகத்தை
தன் கயல் ஓசை ஊடகத்தில்
தீயாய் மூண்டான் அவன்

புண்ணியம் கொடுக்கும்
காசிக்கு நான்காண்டு
பண்ணியம் கொடுத்து
நான்கானவன்
இப்படி ஓர் மகாக்கவியை
இதுவரை நான் காணாதவன்

கவிஞர் எழுத்தாளர் விடுதலை வீரர்
சமூக சீர்திருத்தவாதி பத்திரிக்கையாளர் என ஐந்தானவன்
மீனின் செதிளைப் போல்
பெண்ணடிமை செய்தோரை ஆய்ந்தான் அவன்
தமிழை விஞ்ஞானிபோல் ஆய்ந்தான் அவன்

கவிதை விதையை விதைத்துவிட்டு
நீர் இன்றி தவித்தோருக்கு ஆறானவன்
தன் நெருப்பு உடலோடு போராடி எச்சூழலிலும் சூடு ஆறாதவன்

ஏழு வயது செல்லமாவை மனம் இன்றி மணம் முடித்து ஏழானவன்
ஒரு யானையின் பசி தீர்க்கப்போய்
பாழானவன்

எட்டயபுரத்தில் பிறந்து
எட்டுத்திக்கும்
யாரும் எட்டாக்கவி படைத்து
எட்டானவன்
கதிரவன் போல் யாரும்
எட்டா ஆதவன்

ஒன்பது மொழி அறிந்து
ஒன்பதானவன்
உண்பது ஏதும் இன்றி
பண்ணையே பண்ணாய்
உண்டு வாழ்ந்தவன்

புதுவையில் புது வெய்யிலாய்
ஒளியாது பத்தாண்டு தமிழுக்கு ஒளியும்
விடுதலைக்கு ஒலியும் கொடுத்தப்
பத்தானவன்
மதவாதிகளுக்கு மட்டும் ஆபத்தானவன்

11 ல் மலர்ந்து 11 ல் மறைந்து பதினொன்றானவன்
புரட்சிக் கவிதைக்குப் பதி என்றானவன்

இவன் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த தமிழ்க்கேணி
சமூகத்தை மேலேற்றிய
ஏணி
இவனை ஆண்டு இறுதியில்
மட்டும் நினைப்பது ஏன் நீ ?

பா ரதியை வணங்குவோம்

புதுவைக் குமார்

எழுதியவர் : குமார் (21-Dec-18, 12:42 pm)
Tanglish : KAVIKKUIL baarathi
பார்வை : 205

மேலே