நெல்லின் செல்வர்

நெல்லின் செல்வர்
20/12/2018 அன்று நெல் ஜெயராமன் அய்யாவுக்கு புகழஞ்சலி - கருத்தரங்கில் வாசித்த கவிதை
இடம்: தமுஎகச கைலாசபுரம் கிளை, திருச்சி

உறவாடிய தருணங்கள்
நேற்றைப் போல நினைவில் ஆட
உயிர் பிரிந்த செய்தி கேட்டு
ஊரெல்லாம் அழுது வாட

ஊற்றுக் கண்ணே தூர்ந்து போச்சேன்னு
உடைஞ்ச சொற்கள் கொண்டு
உன் புகழை நான் பாட

பச்சப் பிள்ளை போல
சிரிக்கும் உன் முகம்தான்
பதிஞ்சு கிடக்குதையா
என் மனசு பூராவும்

பெரியப்பா போலத்தான்
பக்கம் நின்னு பேசிப் போன
“நோய் என்ன செய்யும்” ன்னு
நெடுங்கைய வீசிப் போன

நஞ்சில்லா உணவு சொன்ன
நம்மாழ்வார் சீடன் என்ற
நற்பெயரைக் காத்து நின்று
நெற்பயிரை மீட்டெடுத்தாய்

‘உணவே மருந்து’ என்று
உன் பரப்புரைகள் ஏராளம்
புற்றுநோய் வந்ததாலே
மருந்தே உணவாகி - நீ
மாண்ட கதையை என்ன சொல்ல?

நாங்க இயற்கைக்குத் திரும்பும் பாதை
இடையிலேயே அறுந்துடுச்சே...
நாங்க பாதுகாத்த விதை நெல்லை
மரணம் கொண்டு போயிருச்சே...

சொல்லின் செல்வர் இங்கு
பலருண்டு பாரய்யா !
நெல்லின் செல்வர் என்று
உன்னை விட்டால் யாரய்யா ?

பொல்லாத நோய் வந்தும்
நீ சொல்லாத சோகக் கதையை
ஊரு சொல்லிச் சொல்லி அழும்போது
தோற்றுப் போனது மரணம் கூட

எல்லா ஊடகத்திலும்
உன் படம்தான் நெல்லோடு
தலைப்புச் செய்தி எல்லாம்
பசுமையான உன் சொல்லோடு

பச்சை வாசனையை
பரப்பிய பாதங்கள்
மருந்து வாடை வீச
மருத்துவமனையில் கிடக்கையிலும்

பேசிய வார்த்தை எல்லாம்
வரலாறு நினைவில் கொள்ளும்
தேசிய அளவில் கூட
நெல் திருவிழாக்கள் விரைவில் செல்லும்

வரலாற்று நாயகனின் வார்த்தைகளை
நினைவில் கொள்வோம்
“வர்ற மே மாதம்
நெல் திருவிழா வேலைகள் இருக்கு...
உடம்பு இங்க கெடந்தாலும்
மனசு வயக்காட்டுல கெடக்கு”

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (23-Dec-18, 5:30 am)
பார்வை : 49

மேலே