விதிகளை நீயெழுது

நாற்பதாம் அகவையெய்த
நகங்களோ டலகதும்தாம்
வளைந்திட, இரையொன்றேனும்
வசப்படா நிலைமையாகும்
பலமதை யுடலிழக்கப்
பாரமாய்ச் சிறகுகள்போம்
மரணமே விதியென்றான
தருணமவ் விதியைவெல்ல
வலிமிகு வாழ்வு வாழ
வழிவகை தேடலாகும்
மலையதற் கேகியாங்கு
வலியதைத் தாங்கிமோதி
அலகுடைக்கும், அதுவளரக்
காத்திருந்து நகமுடைக்கும், பின்
சிறிதுமே யஞ்சிடாமல்
சிறகதைச் சேதஞ் செய்யும்...!
புதியதாய் அவை வளரப்
புத்துயிர் பெற்றடைந்து
மூபத்து ஆண்டு மேலும்
மன்பதை தனிலே வாழும்...!
கழுகதன் கதையைக் கேட்டால்
கணமேனும் கலங்க மாட்டாய்...!
விதியதே வெல்லுமென்று
வெறும் வாயை மென்றிராதே!
வலிதனை உன்தாயன்று
வரமதாயேற்று னையீன்றாள்
வலிகளை வருவித்தேனும்
வலியவவ் விதியைமாற்று
விதிகளை யுந்தனுக்குப்
புதியதாய் நீயெழுது....!

~ தமிழ்க்கிழவி (2018).

எழுதியவர் : தமிழ்க்கிழவி (29-Dec-18, 2:54 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 371

மேலே