கிளிமஞ்சாரோ

கிளிமஞ்சாரோ
========================================ருத்ரா

ஊதுவத்திப் புகைச்சுருள்
அகர முதல எழுதி
வாசிப்பதற்குள்
அங்கே வெட்ட வெளி மட்டுமே மிஞ்சுகிறது.
உன் வாசனையை
அந்த கூந்தலில்
அந்த உன் எழுத்துக்களில்
அந்த உன்
பூலியன் அல்ஜீப்ரா பல்ஸ்
துடிப்புகளில்
ஸ்பரிஸம் உணருமுன்னேயே
உலர்ந்து போய் விடுகிறாயே!
மறைந்து போய் விடுகிறேயே.
இந்த செல்பேசிகளின்
மின்காந்த குருத்தெலும்புக்குள்
ந‌ம் காதலின் குவாண்டம் மெக்கானிக்ஸ்
சொல்லும் விஞ்ஞானம்
இந்த உலகம் அறியுமா?
இணையவெளியெல்லாம்
நிரவி விரவி போய்விடும்
உன் இதய வெளியில்
நான் இட்ட கையெழுத்தை
எப்படி நான் காண்பேன்.
அந்த உன் ஒல்லியான
புன்சிரிப்பின் ஒற்றைக்கோடு
நெளிய விடும்
அந்த ஊதுபத்திச்சருள்
இதோ இன்னும்
என்னைச் சுருட்டிக்கொண்டு
எங்கோ ஓடுகிறது!
ஓடும் வரை ஓடட்டும்.
உன்னில் நான் நிச்சயம்
தடுக்கிவிழுவேன்.
அந்த மரகதப்படுக்கையில்
ஒரு "புல் தடுக்கி"பயில்வான் போல.
விசைப்பலகை முகடு தோறும்
விரல் தட்டி விரல் தட்டி
ஏறி இறங்குகிறேன்.
எந்த "கிளி மஞ்சாரோ" சிகரத்தில்
உன் குயில் கூடு
பொதிந்து கிடக்கிறதோ?

=======================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (5-Jan-19, 11:34 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 148

மேலே