இலக்கிய அரங்குகளில் பெண்கள்--------------ஊட்டி- பெண்களுக்கு இடமுண்டா-----------------கேள்வி பதில், சந்திப்பு, வாசகர் கடிதம்


ஊட்டி- பெண்களுக்கு இடமுண்டா?
-------------------------------------------------------
நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு

ஊட்டி இலக்கியச் சந்திப்பு பற்றிய தகவல்களைத் தொடர்ந்து படித்து வருகின்றேன். அருமையாகவுள்ளது. கொஞ்சம் எரிச்சலாகவும் எனக்கு உள்ளது. கனடாவில் சில வார இறுதி நாட்களில் கட்டிடக் காட்டிற்குள் மிக சொற்ப நேரத்தில் எமது இலக்கியச் சந்திப்புக்கள் முடிந்து விடுகின்றன.

சந்திப்பு பற்றி அறிவிப்பை முதலில் படித்த போது இந்த வருடம் இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது ஒரு வருடம் இந்தியா சென்று இப்படியான ஒரு இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைக்கலாம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு உங்கள் அனுபவங்களைத் தொடரந்து வாசித்துக் கொண்டிருந்தேன். நேற்று சில நண்பர்களுடன் இதுபற்றி உரையாடி எனது ஆதங்கத்தைத் தெரிவித்த போது ஒரு பெண் நண்பர் கூறினார்’அது ஆண்களுக்கான சந்திப்பு என்று நினைக்கின்றேன், நீங்கள் விரும்பினாலும் இணைந்திருக்க முடியாது’என்று.அப்போதுதான் எனக்கு அது உறைத்தது. முதல் வேலையாக வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் தளத்திற்குச் சென்று மீண்டும் மேலோட்டமாக எங்காவது ஆண்களுக்கு மட்டுமானது என்று குறிப்பிட்டிருக்கின்றீர்களா என்று பார்வையிட்டேன். என் கண்ணில் தட்டுப் படவில்லை, இருந்தும் உங்கள் நிபந்தனைகளைப் பார்வையிடும் போது மறைமுகமாகவே ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளமுடியும் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பதாய் நான் உணர்ந்து கொண்டேன் காரணம். ஒன்றாக அனைவரும் தங்க வேண்டும் என்பது அதைக் குறிப்பிடுவதாய் நான் உணர்ந்தேன். ஆண்கள் பெண்கள் ஒன்றாகத் தங்குவது ஜரோப்பிய இலக்கியச்சந்திப்பில் அசூசை எதுவுமின்றி இயல்பாக நடப்பது .ஆனால் உங்கள் சந்திப்பில் அது சாத்தியமா? காரணம் படங்களில் பெண்ணின் ஒரு முகமாவது தட்டுப் படுமா என்று தேடினேன் கிடைக்கவில்லை.

நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில் இது ஆண்களுக்கு மட்டுமான இலக்கியச் சந்திப்பா? பெண்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று விண்ணப்பிக்கவில்லையா? நான் கலந்து கொள்ளவேண்டும் என்று அறிவித்திருந்தால் தவிர்த்திருப்பீர்களா?

சுமதி (கறுப்பி) கனடாவிலிருந்து

அன்புள்ள சுமதி

இந்த இலக்கியச்சந்திப்புகளில் எல்லாமே பெண்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் விகிதாச்சாரம் குறைவு. சாதாரணமாக ஒரு கூட்டத்தில் இரண்டுமூன்றுபேர். பெரும்பாலான கூட்டங்களில் அருண்மொழி, சைதன்யா கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சேர்க்காமல் சொல்கிறேன்.

பெண்கள் பங்கெடுப்பது வரவேற்கப்படுகிறது என்பது மட்டும் அல்ல, அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் செய்துகொடுக்கப்படுகிறது. சேர்ந்து தங்குதல் என்றால் ஒரே அறையில் அல்ல, ஒரே வளாகத்தில்தான். பெண்களுக்குத் தனி அறைகள் உண்டு.

பெண்கள் கணவர்களில்லாமல் வருவது இந்தியாவில் சாத்தியமில்லை. ஆகவே அவர்கள் கணவர்களுடன் வந்தால் அவர்களுக்கும் தங்குமிடம் ஏற்பாடு செய்கிறோம். தனியாகப் பெண்கள் வரவிருந்தால் அவர்கள் விரும்பினால் இன்னொரு பெண்ணுடன் வரவும் ஏற்பாடு செய்கிறோம்.

இவ்வளவுக்கும் அப்பால் பங்கெடுப்பாளர்களில் பெண்கள் மிகக் குறைவு என்பதற்கான சமூகக் காரணங்களை ஆராயவேண்டும். பொதுவாக எந்த இலக்கியக்கூட்டங்களிலும் , தத்துவ அரசியல் கூட்டங்களிலும் பெண்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறார்கள்

ஆச்சரியமென்னவென்றால் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும்கூட தமிழ் இலக்கியக்கூட்டங்கள் அப்படித்தான் இருக்கின்றன

ஜெ

அன்புள்ள ஜெ,

மாணவர்கள் என்னை நாடித் தடையின்றி வரவேண்டும்!
மாணவர்கள் எல்லா திசைகளிலிருந்தும் வரவேண்டும்!
புலன்களை வெல்லும் திண்மை உடைய மாணவர்கள் வரவேண்டும்!
சாந்தமான மனதுடைய மாணவர்கள் வரவேண்டும்!
எவ்வாறு ஆழமான இடத்தை நோக்கி ஓடைகள் ஓடுகின்றனவோ,
எவ்வாறு மாதங்கள் சேர்ந்து வருடத்தை நிரப்புகின்றனவோ
அவ்வாறே திசையெங்கும் இருந்து தேடல் உள்ள மாணவர்கள் வரவேண்டும்!
அவர்களால் என் வாழ்வு முழுமையடைய வேண்டும்!
என்னை ஒளிபொருந்தியவனாக்கி உன்மயமாக்கிக் கொள்வாய்!
-தைத்திரீய உபநிஷத், சீக்ஷாவல்லீ

நமது ரிஷிகள் மேற்கண்ட மந்திரம் சொல்லி ‘ஆவஹந்தீ’ ஹோமம் செய்து தேடலும், தீராத அறிவுத்தாகமும், ஒழுக்கமும் உடைய மாணவர்களை வேண்டிக் காத்திருந்தனர்.

உங்கள் ஆசிரியர்களும் அப்படி விரும்பியிருப்பார்கள், உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலமும், உங்களோடு விவாதிப்பதன் மூலமும் உள்ளூர நிறைவடைந்திருப்பார்கள். நீங்களும் அப்படித் தான் விரும்புகிறீர்கள் என்றே எண்ணிக்கொள்கிறேன். சமீபத்தில் ஊட்டி காவிய முகாமில் கலந்து கொண்ட நண்பர்களின் பரவசமான பகிர்வுகளைப் படிக்கும் போது அப்படித்தான் தோண்றுகிறது. கடந்த சில வருடங்களாக உங்களை நேரில் சந்திப்பவர்களும், நீங்கள் நடத்தும் இலக்கியக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்பவர்களும், உங்கள் ஆக்கங்களைப் படித்து மடலில் உரையாடியும், விவாதித்தும் வளரும் ஒரு இளந்தலைமுறை மெல்ல பரவிக்கொண்டிருக்கிறது. புதிது புதிதாக அறிமுகமாகிப் பழைய கேள்விகளையே கேட்கும் ஆரம்பநிலையில் உள்ளவர்களிடமும் இத்தனை பொறுமையாகவும், பொறுப்பாகவும், உண்மையான ஆர்வத்துடனும் பதில் சொல்லி ஊக்குவிக்கும் இன்னொரு எழுத்தாளர், சிந்தனையாளர், உரையாடல்காரர் நமது சூழலில் வேறு யாரும் இருப்பதாகத் எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி உரையாடுவது ‘குரு மனப்பான்மை’ என்றால் தயவுசெய்து நீங்கள் குருவாகவே தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன். ஞானத்தாலும், அனுபவத்தாலும் உயர்ந்தவர்களைப் புகழ்ந்து பாராட்டக் கூட ஒரு தகுதி வேண்டும் என்பதே மரபு. எனவே, உங்களோடு விவாதிக்கவும், பேசவும் தகுதியுள்ளவனாக மேம்படுத்திக்கொள்ள முயற்சி மட்டுமே இப்போதைக்கு செய்துவருகிறேன்.
நன்றி,
பிரகாஷ்.
அன்புள்ள ஜெயமோகன்

ஊட்டி காவிய முகாம் இலக்கிய வாசிப்பின் புதிய வாசல்களைக் காட்டுவதாக அமைந்தது இப்போது காளிதாசன் மிக நெருங்கியவனாகக் காட்சி அளிக்கிறான்.இலியட்டை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.இலக்கியம் தவிர்த்து என்னை வியப்பில் ஆழ்த்திய விசயங்களும் உள்ளன.அவை ஜெயமோகன் மற்றும் தேவதேவனின் ஆளுமைகள்.

நீங்கள் உங்களுடைய பழைய கட்டுரைகளில் நான் இனி மேல் சோர்வுற்று இருக்கவோ கவலைப்பட்டுக்கொண்டு இருக்கவோ போவதில்லை என்று எழுதியிருந்தீர்கள் .எழுதுவதன் மன எழுச்சியில் நீங்கள் வெளிப்படுத்திய வாசகங்கள் அவை என்றே எண்ணியிருந்தேன்.ஆனால் உங்களுடன் இருந்த மூன்று நாட்களிலும் நான் எண்ணியது தவறு என்றும் நீங்கள் கூறியதே உங்களின் ஆளுமை என்பது போலும் தோன்றுகிறது.எப்படிக் குழந்தை போல உங்களால் உற்சாகத்துடன் இருக்க முடிகிறது ? உங்களிடமே இதைப்பற்றிக் கேட்டேன் .நீங்கள் “இனி மேல் கவலைப்படக்கூடாது என்று ஒரு நாள் முடிவெடுத்தேன் அன்றிலிருந்து நான் கவலைப்படுவதில்லை ” என்று கூறினீர்கள் .

அதெப்படி நாம் ஒரு முறை முடிவெடுத்து விட்டால் நம் கவலைகள் பறந்து போய் விடுமா?.இழப்புகள், தோல்விகள்,ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள் போன்ற சக்திகள் நம்மைச் சூழும் போது நாம் எப்படி கவலை கொள்ளாமல் இருப்பது ? நானும் கவலைப்படாமல் தான் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன் ஆனால் இந்த சக்திகள் அப்படி இருக்க விடுவதில்லை. கவலைகளிலிருந்து விடுபடுவது ஆன்மீகத் தெளிவிலா? இல்லை வாழ்க்கையைப் பற்றிய புரிதலிலா? இல்லை வேறு ஏதேனும் வழிகள் உள்ளனவா? இல்லை இது எளிதில் கடந்து செல்லக்கூடிய அற்ப விசயமா? உங்களை விடப் பல மடங்கு நான் வியந்த ஆளுமையும் உண்டு . அது பாரதி! தனி வாழ்க்கையில் எவ்வளவு தான் துன்பத்தில் இருந்தாலும் அவருடைய சொற்களில் என்றுமே சோர்வோ விரக்தியோ நான் கண்டதில்லை . ஒளிமிக்க நம்பிக்கை கொண்ட படைப்புகளையே அவர் உருவாக்கியுள்ளார் .அவர் இந்த நிலையை எப்படிச் சென்றடைந்தார் ?

நான் ஆச்சரியப்பட்ட இன்னொரு ஆளுமை தேவதேவன். தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அவரால் எப்படி படைப்பாளிக்குரிய அகங்காரமோ கர்வமோ இல்லாமல் அவ்வளவு எளிமையாக இருக்க முடிகிறது ? அவர் அவற்றைக் கடந்து வந்து விட்டாரா? இல்லை வெளிப்படுதுவதில்லையா? அவருடன் பழகுவது ஒரு மென்மையான தந்தையுடன் பிள்ளை பழகுவது போலவே தோன்றுகிறது .

நான் நிச்சயமாக உங்களையோ தேவதேவனையோ பாராட்டுவதற்காக இதைக் கேட்கவில்லை . உங்களைச் சந்தித்த போது எனக்குள் எழுந்த வினாக்களுக்கான விடைகளை நாடியே இதனைக் கேட்கிறேன்.
அன்புடன்
தர்மராஜன்

----------------------------------------------------------------------------
இலக்கிய அரங்குகளில் பெண்கள்-------March 7, 2016கேள்வி பதில், சந்திப்பு, , வாசகர் கடிதம்

பேரன்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இது. என்னைப் பற்றியும் நான் உங்களிடம் பேச நினைக்கும் பல விஷயங்கள் பற்றியும் விரிவாக மற்றொரு முறை எழுதுகிறேன். இப்போது ஒரு quick question.
ஊட்டி புதிய வாசகர் சந்திப்பு படங்களை உங்கள் வலை தளத்தில் பார்த்தேன். முதலில் தோன்றியது – பெண் வாசகியர் எங்கே? என்றோ ஒரு நாள் நானும் இந்த மாதிரி ஒரு சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இது போன்ற சந்திப்புகளில் வாசகியர் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லையோ? நிறைய பெண்கள் இருந்தால்தான் கலந்து கொள்ள முடியுமா என்றால் அப்படி இல்லை. என்னவோ கேட்கத் தோன்றியது.
P S : இது ஒரு நேரடியான, நேர்மையான கேள்வி மட்டுமே. குற்றச்சாட்டு அல்ல. இன்னொன்று, அமெரிக்காவில் இருந்து கொண்டு, அநேகமாக ஒவ்வொரு தினமும் உங்களுடன் மானசீகமாக விவாதம் நடத்தும் எனக்கு இப்போதைக்கு இந்த மாதிரி சந்திப்பில் கலந்து கொள்ள நினைப்பது ஒரு கனவு மட்டுமே.
சாரதா
அன்புள்ள சாரதா

கடிதத்துக்கு நன்றி

இதே கேள்வியை முன்பு குறைந்தது பத்துபேர் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விரிவான பதிலும் அளித்துள்ளேன். மீண்டும்

தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் கணவன் துணையில்லாமல் இத்தகைய முகாம்களுக்குச் செல்லமுடியாது. இலக்கிய ஆர்வம் கொண்ட பெண்கள் மிகமிகக்குறைவு. அவர்களில் இப்படி செல்லும் வாய்ப்புள்ளவர்கள் மேலும் குறைவு. அவர்களின் கணவர்களுக்கும் ஆர்வமிருந்தால்தான் அவர்கள் வரமுடியும்

எங்கள் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பெண்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவதற்கும் வசதியாகத் தங்குவதற்கும் அனைத்துவகையான வசதிகளையும் ஏற்பாடுசெய்து அளிப்போம். ஆனாலும் ஓரிருவரே ஒவ்வொரு சந்திப்பிலும் கலந்துகொள்கிறார்கள்

இது இங்குள்ள எல்லா இலக்கியக்கூட்டங்களுக்கும் உள்ள பொதுவிதி. சமீபகாலத்தில் இது மாறப்போவதுமில்லை. இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது நம் சமூக மனநிலை. குறிப்பாக தமிழக மனநிலை.

இங்கே பொது இடங்களில் பெண்கள் சீண்டப்படுவதும் அவமதிக்கப்படுவதும் மிகமிக அதிகம். படித்த இளைஞர்களின் மனநிலைதான் மிக மோசம். ஒருநாள் குற்றாலம் போன்ற ஒரு சுற்றுலாமையத்தில் இருந்து பாருங்கள் தெரியும். கணவனுடன் செல்பவர்களுக்கே பாதுகாப்பில்லை.

அத்துடன் இலக்கியம்போன்ற பொதுத்தளங்களில் வரும் பெண்களை ‘அணுகுவது’ இங்கே நம்ப முடியாத அளவு அதிகம். இலக்கியச்சூழலுக்கு வந்தால் தினம் காலை ‘ஸாரி நான் அந்தமாதிரி கிடையாது’ என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். நிறையப்பேரிடம் சொல்வதற்குள் ‘அவள் ஒருமாதிரி’ என்ற பெயர் வந்துவிடும். இலக்கியச்சூழலின், ஃபேஸ்புக்கின் அதியதிதீவிர பெண்ணிய ஆதரவெல்லாம் மிக மேலோட்டமானவை . உள்ளே இருப்பது அடக்கப்பட்ட காமம் மட்டுமே

ஆகவே பெண்கள் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அது ஒருவகையில் சரிதான். முன்பெல்லாம் எங்கள் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்ட பெண்களின் படங்களை வலையேற்றுவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தோம். இப்போது கொஞ்சம் நிலைமை பரவாயில்லை.

ஜெ

எழுதியவர் : (6-Jan-19, 4:59 am)
பார்வை : 105

சிறந்த கட்டுரைகள்

மேலே