காதல் வழியில்

இப்படியே நின்று
கொண்டிருந்தால் எப்படி
என்று நகர மறுக்கும் வாழ்க்கையை
கைபிடித்து அழைத்து செல்லும்
வேளையில் நண்பரானார்
கடவுள்

அப்படியே பேசிக்கொண்டு
நடக்கையில் சக தேவதையாகவும்
உருவம் மாறினார்
என் அழுத்தமான பிடியில்

இன்னும் கொஞ்சம் தூரம்
தான்என சிரித்தபடியே
செல்லும் வழியெங்கும்
விளையாட தவறவும் இல்லை
குழந்தையாய்

மூங்கில் காட்டிற்குள்
நுழைந்து இசையாய் வெளிவர
முயற்சிக்கையில் இருவரும்
தோற்றுத்தான் போனோம்
இயற்கையிடம்

பேரன்பின் பிறப்பிடம் இதுவென்று
உணர்த்திய இரு பறவைகளின்
நேசத்தில் கரைந்து போன
நிமிடங்களை அவருடன்
அனுபவித்ததில் என்னிடம்
எல்லையில்லா உற்சாகமே

ஆதிப்பெருங்கருணையின்
வழி வந்த உயிர்களா நாமெல்லாம்
ஏன் எதற்கு எப்படி என
கேள்விகள் கேட்டு நான் பின்செல்ல
தொலைதூர சூரியனாய்
சலனமில்லாத ஒளியாய்
சன்னல் வழி நுழைந்து வெப்பமாய்
ஆசிர்வதிக்க தொடங்கியிருந்தார்
என் போர்வைக்குள் தகித்தபடி...........

எழுதியவர் : மேகலை (11-Jan-19, 5:12 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : kaadhal valiyil
பார்வை : 81
மேலே