மனிதர்க்கு மேலான குணங்களாகிய அறங்கள் பத்து - அறநெறிச்சாரம் 12

நேரிசை வெண்பா

மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவமடக்கம்
செம்மையொன் றின்மை துறவுடைமை - நன்மை
திறம்பா விரதந் தரித்தலோ டின்ன
அறம்பத்தும் ஆன்ற குணம். 12

- அறநெறிச் சாரம்

உண்மை - truthfulness பொறையுடைமை – forbearance
மேன்மை – greatness தவம் – austerity,
அடக்கம் – humbleness, செம்மை – impartial and neutral,
ஒன்றின்மை – tendency of not owning something for self,
துறவுடைமை – to be satisfied and maintain self-renunciation,
நன்மை – to be helpful for everybody,
திறம்பா விரதம் தரித்தல் – to keep up an unchanging holy practice

பதவுரை:

மெய்ம்மை - உண்மையும், பொறையுடைமை - பொறுமையும்,

மேன்மை - பெருமையும், தவம் - தவமும், அடக்கம் - அடக்கமும்,

செம்மை - நடுநிலைமையும்,

ஒன்றின்மை - தனக்கென ஒன்று இல்லாதிருத்தலும்,

துறவுடைமை - பற்றுவிடுதலும், நன்மை - நல்லன செய்தலும்,

திறம்பா விரதம் தரித்தலோடு - மாறுபடாத விரதங்களை மேற்கொள்ளுதலுமாகிய,

இன்ன அறம் பத்தும் - இவ்வறங்கள் பத்தும்,

ஆன்ற குணம் - மேலான குணங்களாம்.

குறிப்பு:

ஒன்றின்மை - தனக்கென வொன்றைப் பெறாது பொதுமக்களுக்காகக் காரியஞ் செய்தல்.

பொருளுரை:

உண்மையும், பொறுமையும், பெருமையும், தவமும், அடக்கமும், நடுநிலைமையும், தனக்கென ஒன்றைப் பெறாது பொதுமக்களுக்காகக் காரியஞ் செய்தலும், பற்று விடுதலும், பிறர்க்கு நல்லன செய்தலும், மாறுபடாத விரதங்களை மேற்கொள்வதுமாகிய இவ்வறங்கள் பத்தும் மனிதர்க்கு மேலான குணங்களாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jan-19, 9:55 pm)
பார்வை : 64

மேலே