கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் – நாலடியார் 66

நேரிசை வெண்பா

கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு. 66

- சினமின்மை, நாலடியார்

பொருளுரை:

மந்திரித்து இட்ட திருநீற்றால் உடனே படம் சுருங்கிச் சினம் ஒடுங்கிய நல்ல பாம்பைப் போல,

தங்கள் உயர்குல ஒழுக்கத்தால் தடை செய்யப்பட்டு, கற்களை வீசினாற் போன்ற கீழ்மக்கள் வாயிற்றோன்றிய துனபச் சொற்களை அனைவரும் அறியப் பெரியோர் பொறுத்துக் கொண்டு தமது மேற்கோளை நடத்திச் செல்வர்.

கருத்து:

தமது உயர்நிலை கருதிச் சான்றோர், கீழ் மக்கள் சொற்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

விளக்கம்:

‘எறிந்தன்ன இன்னாச்சொல்,' என்க.

பொறுப்பதினும், பலரெதிரிற் பொறுத்துக் கொள்வது அரியதொன்றாதலின், ‘எல்லாருங் காணப் பொறுப்பர்' என்றார்.

உயர்குலம் என்றது, நல்லோர் கூட்டம்;

அவரிணக்கத்தால் உண்டாகும் பெருந்தன்மையான ஒழுக்கமே உயர்குல ஒழுக்கம் எனப்பட்டது.

குடிமை யென்றது அது; அஃதாவது, பெருந்தன்மை.

கயவர் என வந்தமையின், பொறுத்துய்ப்பவர் பெரியோர் எனப்பட்டது.

மேற்கோளை என்றது, தம் நற்கொள்கைகளை,

‘கல்லெறிந்தன்ன' என்றமையால் இன்னாச் சொல்லால் உண்டாகுஞ் சுறுக்கென்ற துன்பமும்,

‘பையவிந்த நாகம்' என்றமையாற் சீற்றந் தணிதலும் பெறப்படும்.

கருத்துரை: வேலாயுதம் ஆவுடையப்பன் • 27-Sep-2018 3:25 pm

கயவர்வாய் இன்னாச்சொல் எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் – நாலடியார் படித்தேன் பகிர்ந்தேன்;
படைப்புக்கு பாராட்டுக்கள்

போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த அறநூல் நாலடியார்.

நாலடியார் பொருள்களைத் தக்க உதாரணம் காட்டி விளக்குவதோடு, கற்போர் உளம் கொளும் வகையில் தெளிவுபடவும் உரைக்கின்றது. இவ்வகையில் நாலடியாரைத் திருக்குறளின் விளக்கம் என்று கூறலாம்.

'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என வழங்கும் பழமொழியிலும், 'பழகு தமிழ்ச்சொல் அருமை நால் இரண்டில்' என உரைக்கும் தனிப்பாடல் பகுதியிலும் இந்த இரு அற நூல்களையும் ஒரு சேர வைத்து எண்ணுதல் நோக்கத் தக்கது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jan-19, 12:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே