அறிவுடையார் தாமவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று – நாலடியார் 67

நேரிசை வெண்பா

மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாமவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று. 67

- சினமின்மை, நாலடியார்

பொருளுரை:

தமக்குப் பகைவராயிருநது அப் பகைமையைப் பாராட்டுகின்றவர் மேல் தாமும் அப்பகைமையைப் பெரியோர்கள் மேற்கொள்ளாமையை இயலாத தன்மை என்று சொல்லி அறிவுடையோர் இகழமாட்டார்கள்;

தம்முடைய தீய தன்மைகளை அடக்கிக் கொள்ளமாட்டாமல் எதிர்த்து அப்பகைவர் துன்பங்கள் செய்தால் தாம் அவர்களுக்குத் திருப்பித் துன்பங்கள் செய்யாமை நல்லது.

கருத்து:

தமக்குத் துன்பஞ் செய்தவர்களுக்குத் தாமுந் துன்பஞ் செய்வது ஆற்றலன்று; துன்பஞ் செய்யாமையே ஆற்றலாவது.

விளக்கம்:

ஏலாமை ஆற்றாமையன்று; மாறு ஏற்றலே ஆற்றாமை என்பது போன்ற, ஈரிடத்தும் ‘ஆற்றாமை' யென்னுஞ் சொல் வந்தது.

இன்னா - இனிமையல்லாமை.

முன்னிரண்டடிகள் மனத்தளவாய் மாறுகொள்ளலும் பின்னிரண்டடிகள் அப்பகைமையைச் செயலிற் காட்டுதலுமாக விளக்கப்பட்டன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jan-19, 1:01 pm)
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே