வழுவான தீமை யணுவுளத்தில் சேரினும் தீங்காகிப் போகும் - மனிதன் நிலை, தருமதீபிகை 7

நேரிசை வெண்பா

அழுகல் சிறிதோர் அருங்கனியில் பட்டால்
முழுதும் கெடுமம் முறைபோல் - வழுவான
தீமை யணுவுளத்தில் சேரினும் தீங்காகிப்
போமே புலையாய்ப் புரண்டு. 7

- மனிதன் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அருமையான இனிய மாங்கனியில் சிறிது அழுகல் உறினும் அது முழுதும் பழுதாய் விரைவில் அழியும்; அதுபோல், மனத்தில் அணு அளவு தீமை புகினும் மனிதன் தீயனாய் அடியோடு கெடுவான்; கெடு நிலைகளை வெறுத்து விரைவில் ஒதுக்குங்கள் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதனது இயல்பான இனிமையும் அருமையும் தெரிய கனியை எதிர் எடுத்துக் காட்டியது. இளிமைப் பண்புகளுடைய மனம் அதிமதுரமான கனியை ஒத்துள்ளது; அதில் தீய எண்ணம் சிறிது மருவினும் அதனையுடையவன் இழிந்து தானாகவே விரைந்து அழிந்து போவான்; அந்த அழிவு நேராமல் விழுமிய நிலையில் தெளிந்து வாழுக. இழிவு நீங்கி உயர்வு ஓங்கி வரும்.

தலைமையாய் நிலவி நிற்கின்ற மனிதனை நிலைதிரித்து நீசப்படுத்துமாதலால் அந்த நீசமான தீமையை நாசகாரியாக அஞ்சி ஒதுங்கி எவ்வழியும் இனிய நீர்மையனாய் ஒழுக வேண்டும்; அவ்வாறு ஒழுகிவரின் அவன் திவ்விய நிலைகளை அடைகின்றான்.

நெஞ்சைப் புனிதமாகப் பாதுகாத்து வருவதனால் இனிய பல மகிமைகள் உன்பால் எளிது வந்து சேரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jan-19, 9:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே