துண்டிட்டார் தொண்டெல்லாம் தொண்டா

===========================================

தொன்றுதொட்டு தேயிலைத் தோட்டமக்கள் சந்தாவால்
நன்குயர்ந்து விட்டவர்கள் நாட்டினிலே – இன்றுமந்த
ஏழை தொழிலாளர் ஏங்கும் நிலைமாற்றா
கோழைத் தனந்தான் கொடிது.
**
நாட்டின் முதுகெழும்பாய் நாளுந் திகழ்ந்திடும்
தோட்டத் தொழிலாளர் துன்பத்தைக் – கேட்டறிந்தும்
சம்பள மாயிரம் சர்ச்சைக்கு முற்றுவைக்கச்
தம்பலம் காட்டார் தனித்து
**
உயர்ந்த மலைமேல் உயராதார் வாழ்வை
உயர்த்திடப் பொய்யை உளறி – மயக்கும்
மகுடிகளின் வாக்குறுதி மக்களின் வாக்கை
தகுதியற்ற தாக்கும் துணிந்து.
**
தேர்தல் வருங்கால் திசைக்கொன்றாய் வந்திவரைச்
சேர்த்தணைத்துச் சொந்தமென்று செவ்வாயின் – தீர்த்தம்
தெறிக்கச் சிதறவிடும் தேன்வார்த்தை வாக்கைப்
பறித்திட மட்டுந்தான் பார்..
**
தொண்டாற்றல் போன்று தொடர்ந்து நடிப்பதற்கே
துண்டெடுத்துத் தோளிட்டத் தொண்டாளி - தொண்டெல்லாம்
தொண்டா? தொழிலாளர் துன்பம் துடைத்தெறிய
தொண்டாற்றும் தொண்டன்றோ தொண்டு.
**
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (14-Jan-19, 2:55 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 30

மேலே