தைமகளே வருக

தித்திக்கும் தைமகளே தீஞ்சுவையோடு வருக/
எத்திக்கும் முத்தமிழை முழங்கியே வருக/
உத்தமியே பத்தினியே சீரோடு வருக/
இத்தரையே மகிழ்ந்திடவே இளையவளே வருக/

கைவளையல் குலுங்கிடவே தமிழ்மகளே வருக/
பைந்தமிழில் பண்ணிசைத்துப் பாங்குடனே வருக/
வையகமே குளிர்ந்திடவே தென்றலாய் வருக/
தைதையென குதித்தோடி குமரியே வருக/

நீர்வளமே நிறைந்திடவே காரோடு வருக /
பார்முழுதும் பசுமையே பூத்திடவே உழுக/
தேரோடும் வீதியிலே அசைந்தாடி வருக/
பேரோடு புகழோடு தமிழினமே மிளிர்க/

இன்பமே பொங்கிடவே இளையவளே வருக/
துன்பமே அகன்றிடவே நல்லாட்சி மலர்க/
அன்பிலே கனிந்தே கன்னியே வருக/
கன்னலென இனித்திடும் கவிதையைத் தருக/

பனியது விலகிடவே செங்கதிரே நுழைக/
கனியோடு இயற்கையை வணங்கினோம் அருள்க/
அணிமணி புனைந்தே அழகியவள் வருக/
பணிவோடு பண்போடு குலமகளே வருக.

எழுதியவர் : லட்சுமி (14-Jan-19, 8:50 am)
சேர்த்தது : Aruvi
பார்வை : 40

மேலே