காலந்தோறும் மதுரை நூல் ஆசிரியர் முனைவர் ச தமிழரசன், நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

காலந்தோறும் மதுரை!
நூல் ஆசிரியர் : முனைவர் ச. தமிழரசன்,

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.



பக்கம் : 116, விலை : ரூ.100
காகிதம் பதிப்பகம், 13-B, TYPE-2 குடியிருப்பு வட்டம் 4, நெய்வேலி 607 801. கடலூர் மாவட்டம். அலைபேசி : 89032 79618


******

நூலாசிரியர் முனைவர் ச. தமிழரசன் அவர்கள் தான் பயின்ற தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியிலேயே உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர். மதுரையைப் பற்றி ஆய்வு செய்து ‘காலந்தோறும் மதுரை’ என்ற நூலை வழங்கி உள்ளார். மதுரைவாழ் மக்கள் மதுரையின் பெருமையை அறிந்திட அவசியம் படிக்க வேண்டிய நூல்.



வரலாற்று சிறப்புமிக்க மதுரை, சங்கம் வளர்த்த மதுரை என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். இந்நூலில் மதுரையின் வரலாற்றை புள்ளிவிபரங்களுடன் நன்கு பதிவு செய்துள்ளார். பாண்டித்துரைத் தேவர் தமிழ் வளர்த்த வரலாறும் நூலில் உள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.



தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் உடன் பணியாற்றும் நண்பர் தமிழ் விரிவுரையாளர் பேரா. சு. முத்தையா அவர்களிடமே அணிந்துரை வாங்கியது சிறப்பு. நட்பிற்கு மரியாதை நன்று.



1) பண்டைய இலக்கியங்களில் மதுரை 2). பக்தி இலக்கியங்களில் மதுரை 3) இடைக்காலச் சிற்றிலக்கியங்களில் மதுரை 4) தற்காலத்தில் மதுரை என 4 தலைப்புகளில் மதுரையின் அருமை பெருமை அனைத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார், பாராட்டுக்கள்.



மதுரை என்ற சொல்லே பேச்சுவழக்கில் மருதை என்றானது. குதிரரை என்பது குருதை என்றானது போல என அறிஞர் தொ.பரமசிவம் அவர்கள் எழுதியதை மேற்கோள் காட்டி உள்ளார். மதுரைக்க்கு எத்தனை பெயர்கள் என பட்டியலிட்டுள்ளார். ஆலவாய் மாநகர், கடம்பவனம், கூடல், நான்மாடக்கூடல், கோயில் இவை நாம் பலரும் அறிந்த பெயர்கள்.



ஆனால் அறியாத பெயர்களும் குறிப்பிட்டு உள்ளார். கன்னிபுரீசம், சிவராஜதானி, சிவநகரம், சம்ஸ்டிவிச்சாபுரம், சீவன்முத்திபுரம், சிவலோகம், துவாசுந்தரம், விழாமலி மூதூர் என பல பெயர்களை பட்டியலிட்டு உள்ளார்.



மதுரை தொடர்பான பல நூல்களை ஆராய்ந்து ஆராய்ச்சி கட்டுரை வடித்துள்ளார். கடின உழைப்பு நல்கி உள்ளார். தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற மதுரை, சிலப்பதிகாரம் காலம் தொடங்கி இன்றுவரை ‘அல்லங்காடி’ என்று இரவுக்கடைகளுடன் இயங்கி வருவதையும் இரவு முழுவதும் பேருந்துகள் ஓடுவதையும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.



பல்லாயிரம் ஆண்டுகள் வயதான பழமையான நகரமான மதுரை இன்றும் உயிர்ப்புடன் இயங்கி வருவது வியப்பு. தாமரை வடிவம் போன்று சித்திரை, ஆடி, மாசி, வெளி வீதிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரம். அது மட்டுமல்ல தேர்களை திருப்புவதற்கு வடத்தைக் கொண்டு சென்று திருப்ப வேண்டும். அந்த தெருவிற்குப் பெயர் வடம் போக்கித் தெரு, இன்றைக்கு வரை அதே பெயரில் தெருக்களும் உள்ளன. தேர்களின் வடங்களும் சென்று வருகின்றன.



மதுரை போன்ற ஊரை உலகம் எங்கும் தேடினாலும் காணமுடியாது. கலை, இலக்கியம், சுற்றுலா என எல்லாத் துறையிலும் முத்திரை பதிக்கும் மதுரை, திரைப்படத்திற்கு முதல் பாடல் எழுதிய பாஸ்கரதாஸ் தோன்றியது மதுரை தான். இப்படி பல தகவல்கள் நூலில் உள்ளன. படிக்கப் படிப்ப பெருமையாகவும், வியப்பாகவும் இருந்தது.



இவ்வளவு சிறப்பு மிக்க மதுரையில் பிறந்துள்ளோம் என்று பெருமை அடைந்தேன். நான் மட்டுமல்ல மதுரையில் பிறந்த அனைவருமே பெருமை கொள்ள வைத்திடும் நூல் இது. அதனால் தான் சொன்னார்கள் மதுரையைச் சுற்றிய கழுதையும் மதுரையை விட்டுப் போகாது என்று. இதற்கு இருபொருள் உண்டு. மதுரையை விரும்பியதால் போகாது ஒரு பொருள். சதுரசதுரமாக தெருக்கள் இருப்பதல் சுற்றிச்சுற்றி வரும் வெளியே போகாது என்றும் பொருள் கொள்ளலாம்.



சிலப்பதிகாரத்தில் மதுரை திருவிளையாடல் புராணத்தில் மதுரை, திருத்தொண்டர் புராணம் இப்படி இலக்கியங்களில் மதுரை பற்றி வரும் வைர வரிகளை மேற்கோள்காட்டி விளக்கிய விதம் அருமை. ஆழ்வார்களின் பாடல்களை மேற்கோள் காட்டி மதுரையின் சிறப்பை இயம்பியது சிறப்பு.



மதுரையில் சோழர்களின் ஆட்சி பாண்டியர்கள் மீட்டது முகலாயர் படையெடுப்பு நாயக்கர்கள் ஆளுகை குறிப்பாக திருமலை நாயக்கர் ஆண்ட வரலாறு கட்டிய மண்டபங்கள் என மதுரையின் வரலாற்றை மிக நுட்பமாக எழுதி உள்ளார். ஆங்கிலேயர் ஆளுகைக்கு உட்பட்ட மதுரை என மதுரையின் வரலாற்றை அங்குலம் அங்குலமாக எழுதி உள்ளார்.



மதுரையில் இந்துமதக் கோயில்கள் மட்டுமல்ல, தேவாலயங்கள் பல உள்ளன. அவற்றின் வரலாறும் இடம் பெற்றுள்ளன. இசுலாமியரின் புகழ்பெற்ற பள்ளிவாசல்கள் சந்தனக்கூடு திருவிழா நடக்கும் பள்ளிவாசல்களின் பட்டியல் எல்லாம் நூலில் உள்ளன. மதுரையில் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர்கள் எண்ணிக்கையும் நிறைய உண்டு. அதனையும் குறிப்பிட்டு இருக்கலாம்.



நான் படித்த சேதுபதி பள்ளி வரலாறு உள்ளது. படித்து மகிழ்ந்தேன். மதுரா கல்லூரி, புனித மரியன்னை மேனிலைப்பள்ளி, அமெரிக்கன் கல்லூரி இப்படி நூற்றாண்டுகள் கண்ட கல்வி நிறுவனங்களின் வரலாறு நூலில் உள்ளன.



மதுரையில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை நடைபெறும் திருவிழாக்களின் பட்டியல் நூலில் உள்ளன. மகாகவி பாரதியார் ரூ.20 மாதச் சம்பளத்தில் சேதுபதி பள்ளியில் பணியாற்றிய வரலாறும் அவரது கவிதையை முதன்முதலில் அச்சில் வழங்கியது மதுரை மாநகரம் என்ற தகவலும் படித்து பெருமை அடைந்தேன்.



மதுரை நடிகர் சங்கத்தை 1926ல் தோற்றுவித்தவர் பாஸ்கரதாஸ். காளிதாள், பிரகலாதா, வள்ளி திருமணம், உஷா கல்யாணம் உள்ளிட்ட படங்களுக்கு பாடல் எழுதிய விபரம் நூலில் உள்ளது. ஆய்வுக்கு பயன்படுத்திய நூல்களின் பட்டியல் உள்ளன.



மொத்தத்தில் மதுரையின் அருமை பெருமை பறைசாற்றிடும் அற்புத நூல். பாராட்டுக்கள். அடுத்த பதிப்பில் இரண்டு செய்திகளை திருத்தி விடுங்கள்.



சிந்தாமணி திரையரங்கம் இப்போது இல்லை, இடித்து விட்டனர், மீனாட்சியம்மன் கோயில் அருகே இருந்த காய்கறி சந்தையும் இப்போது இல்லை. இடித்து விட்டனர். அடுத்த பதிப்பில் இந்த உண்மைகளும் இடம்பெறட்டும்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (14-Jan-19, 9:40 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 60

சிறந்த கட்டுரைகள்

மேலே