வேள் பாரி

வேள் பாரி பாண்டிநாட்டுப் பறம்பு மலையைச் சூழ்ந்த நாட்டை
யுடையன்; இப் பறம்பு நாடு முந்நூறு ஊர்களை யுடையது; பறம்புமலை
இப்போது பிரான்மலை யென வழங்குகிறது; புதுக்கோட்டை நாட்டைச்
சார்ந்திருக்கிறது. பாரி என்பான் வேளிர் குலத்தவனாதலின், இவனைவேள்
பாரி யென்பது வழக்கு. இவர் வேளிர் குலத்தில் எவ்வி யென்பான் குடியிற்
பிறந்தவன். பறம்பு நாட்டைச் சார இருந்த பாண்டி நாட்டுத் திருவாதவூரிற்
பிறந்து சிறந்து விளங்கிய கபில ரென்னும் நல்லிசைப் புலவர்க்கு இவன்
இனிய நண்பன்; ஒளவையாராலும் சிறப்பித்துப் பாடப்பெற்றவன்; வரையாது
வழங்கும் வள்ளல்; காற்றில் அலைந்த முல்லைக்கொடியின்பால்
அருள்கொண்டு அது கொழுகொம்பாகப் பற்றிப் படரும் பொருட்டுத் தான்
ஊர்ந்து சென்ற தேரைத் தந்தவன். முடிவில் தமிழக மெங்கும் இவனது
புகழ் பரவக் கண்டு அழுக்காறு கொண்ட தமிழ்வேந்தர் மூவராலும்
சூழ்ச்சிவகையாற் கொலையுண்டனன். இவற்கு இரு மகளிர் உண்டு.
இவற்குப் பின் கபிலர் இம் மகளிரை ஒளவையார் துணைக்கொண்டு
தக்கார்க்கு மணம்புரிவித்துத் தாமும் உயிர் நீத்தார். இவன்
காலததுக்குப் பின்வந்த சான்றோர்கள் பலரும் ஆளுடைய நம்பி முதலிய
அருட்குரவன்மார்களும் இவனையே கொடைக்கு எல்லையாகக் கொண்டு
கூறினரெனின், மேலும் கூறல் மிகையாம். தமிழகத்துப் புரவலர் வரலாற்றில்
வேள்பாரி சிறப்பிடம் பெறுதற்குரியன். இவன் நாட்டு மலைவளமும் சுனைநீர்
நலமும் புலவர் பாடும் புகழ் படைத்தவை.

கபிலர் ஒருகால் வறுமையால் வாடி வதங்கும் விறலி
யொருத்தியைக் கண்டு அவளை வேள்பாரியிடம் சென்று அவனைப் பாடித்
தனக்கு வேண்டுவன பெற்றுக்கொள்க வென இப்பாட்டின்கண் அவளை
ஆற்றுப் படுத்தியுள்ளார்.

சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யா தாயினு மருவி
5 கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக
மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும்
நீரினு மினிய சாயற்
பாரி வேள்பாற் பாடினை செலினே. (105)
திணை: பாடாண்டிணை. துறை: விறலியாற்றுப்படை. வேள்
பாரியைக் கபிலர் பாடியது.

உரை:வாணுதல் விறலி - ஒளி தங்கிய நுதலினையுடைய
விறலி;தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை - பெரிய
இடத்தையுடைய சுனையின்கண் தழைத்த கரிய இதழையுடைய
நீலத்தினது; வண்டு படு புது மலர் - வண்டு மொய்க்கும் புதிய
மலரின் கண்; தண் சிதர் கலாவ - குளிர்ந்த துளி கலக்க;
பெய்யினும் பெய்யா தாயினும் - மழை பெய்யினும் பெய்யா
தொழியினும்; அருவி - அருவி; கொள் ளுழு வியன்புலத் துழை
காலாக - கொள்ளிற் குழுத பரந்த நிலத்திடை நீரோடு காலாக ஓட;
மால் புடை நெடு வரைக் கோடு தோறு இழிதரும் -
கண்ணேணியையுடைய நெடிய மலையினது சிகரந்தோறும் இழிதரும்;
நீரினும் இனிய சாயல் - நீரினும் மிக இனி மையையுடைய; வேள்
பாரிபால் பாடினை செலின் - வேள் பாரி பக்கலே நீ பாடிச்
செல்லின்; சேயிழை பெறுகுவை - சிவந்த அணியைப் பெறுகுவை
எ-று.

விறலி, பாரி வேள்பாற் பாடினை செலின் சேயிழை பெறுகுவை
யெனக்கூட்டுக. அவன் மலையாதலால் எக்காலமும் அருவி கோடுதோ
றிழிதரு மெனப்பட்டது. புது மலர்த் தண் சிதர் கலாவப் பெய்யினும்
பெய்யாதாயினும் காலாகக் கோடுதோ றிழிதரும் அருவி நீரினும் இனிய
வென இயையும். எனவே அவன் குணங்கள் தோன்றி நின்றன.

விளக்கம் : விறலியின் நுதலொளி அவளது இசையும் கூத்தும்
வல்ல நலத்தை விளக்கி நிற்றலின், “வாணுதல் விறலி”யென்றார். தடவுவாய்,
சுனைக்கு ஆகுபெயர். மாரியிற் பெய்த மழையைக் கோடையின் கண்
உமிழும் வாய்ப்புடைய மலையாதலின், “அருவி கொள்ளுக் குழுத
வியன்புலத்தில் நீரோடு காலாகக் கோடுதோறும் இழிதரும்”என்றார்.
பறம்பு மலையின் சுனைநீர் தட்பமும் இனிமையும் உடையதென்று
சான்றோரால் “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்”(குறுந். 194)
என்று பாராட்டப்படும். சிவந்த பொன்னாற் செய்த அணியைச் “சேயிழை”
யென்றார். மால்பு, மூங்கிலின் கணுவினிடத்தே புள் செருகிய ஏணி;
இதனைக் கண்ணேணி யென்றலும் வழக்கு. பாடுவோர் பசி தீர்த்துப்
பெருங்கொடை நல்கும் பண்பினன் பாரி யென்றற்கு, “பாடினை செலினே”
யென்றார். மழை பொய்யாவிடத்து அருவி கோடுதோ றிழிதரும் என்றது,
வருவாய் குன்றினும் பாரி தன் கொடை நலம் குன்றுவதிலன் என்பது
முதலிய குணநலம் தோற்றுவித்தலின், உரைகாரர், “எனவே.........நின்றன”
என்றார்.

எழுதியவர் : (14-Jan-19, 12:44 pm)
பார்வை : 20
மேலே