உள்ளம் புனிதம் உடையான் இனிய தெள்ளமிர்தம் என்னத் திகழுவான் - மனிதன் நிலை, தருமதீபிகை 9

நேரிசை வெண்பா

உள்ளம் புனிதம் உடையான் உயர்ந்தினிய
தெள்ளமிர்தம் என்னத் திகழுவான் - உள்ளமைந்த
உள்ளத்தே நல்லவியல்(பு) இல்லான் உலகிற்கோர்
கொள்ளித்தேள் என்றே குறி. 9

- மனிதன் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனம் தூய்மையாயுள்ளவன் எவர்க்கும் இனியனாய் உலகில் உயர்ந்து விளங்குவான்; உள்ளம் தீயவன் கொள்ளித் தேள் போல் எல்லார்க்கும் கொடியனாய் நெடிதோங்கி நிற்பான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நல்ல மனமுடையவன் சொல்லும் செயலும் எல்லார்க்கும் இனிமையாய் இன்பம் பயந்து நிற்குமாதலால், 'அவன் தெள்ளமிர்தம்' என நின்றான். உள்ளம் கனிய உலகம் கனிகின்றது.

மனம் புனிதமானால் மனிதன் அமிர்தமயமாகின்றான்; அது தீயதாயின் அவன் மிகவும் கொடிய தீயனாய்க் கொடுமை மண்டி நிற்கின்றான். அந்த நெஞ்சின் படு கொடுமை தெரியக் கடு நஞ்சு வந்தது. கொள்ளித்தேள் என்றது தேள்களுள்ளே கொடிய விடமுடையது; உயிர்க்கேடு புரிவதாகும்.

உருவத்தால் மனிதன் ஆனாலும் உள்ளத்தே நல்ல இயல்பு இல்லையானால் அவன் பொல்லாத ஒரு கொள்ளிக் தேளாக எள்ளப்படுவான் என்றதனால் அவனது ஈன நிலை எளிது புலனாம்.

“Without good nature, man is but a better kind of vermin” - Bacon

'நல்ல இயல்பு இல்லையானால் அந்த மனிதன் நச்சுப் புழுவைப் போல் தொல்லையே செய்வான்” என ஆங்கிலப் பெரும் புலவராகிய பேகன் என்பவர் இங்ஙனம் கூறியுள்ளார்.

மனத் தீமை மனிதனது உயர்வை யெல்லாம் ஒருங்கே அழித்து விடுமாதலால் அதனை ஒழித்துப் புனித மனமுடையனாய் யாண்டும்.அவன் இனிது ஒழுக வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-19, 9:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே