ஆத்மாவின் இராகங்கள்

இதயத்தின் கதவுகள் என்ற தலைப்பில் 80ம் ஆண்டு தினகரன் வாரமலரில் தொடர்ந்து வெளிவந்ததும் பின்பு கனடா தமிழோசை பத்திரிகையில் ஆத்மாவின் ராகங்கள் என்ற பெயரில் 92ம் ஆண்டில் மீள் பிரசுரம் செய்யப்பட்டதுமான இக் குறுங்காவியம் யாழ்ப்பாணத்தில் தலைவிரித்து ஆடிய சீதனப் பிரச்சனையின் ஒரு பதிவாகும்! இதை எழுதிய போது எனக்கு வயது இருபத்தியொன்று! காவியத்துக்காக தினகரன் வழங்கிய காசோலையைக் கூடப் பணமாக்கி விடாமல் போற்றிப் பாதுகாத்தேன்! என் கைவிட்டுப் போனவற்றில் அதுவும் ஒன்றாகி விட்டது! கனடாவில் எனது இலக்கிய முயற்சிகள் அனைத்துக்கும் பிரதிபலன் கருதாது பின்புலமாக இருக்கும் இனிய நண்பர் ஞானபண்டிதன் அவர்களுக்கு இக்காவியம் சமர்ப்பணமாகும்!
– இரா. சம்பந்தன்




காவியம்



அந்தக் கல்லூரி



வெண்முகில்கள் தவழ்கின்ற மாட உச்சி!
வேங்கைமரம் மலைவேம்பு வாகை என்ற
மண்வளரும் மரவினங்கள் கவிந்த சூழல்!
மாணவரும் மாணவிய மலர்கள் தானும்
கண்கவரும் வெண்மைநிற உடையில் கூடும்
கல்லூரி அதுவாகும்! அன்னார் அங்கே
விண்ணுலக அமுதமெனும் கல்வி மாந்தி
விளையாடி மகிழ்வுடனே வீடு செல்வர்!



சின்னஞ்சிறு பிள்ளைகளோ அங்கும் இங்கும்
சிரிப்புடனே ஓடிவிளை யாடும் போதில்
புன்முறுவல் ஒன்றாலே உலகை வெல்லும்
பூவையரும் கொடிபோல அசைந்து செல்வர்!
அன்னவரின் முழந்தாளைத் தடவும் சட்டை
அதன்கீழே பாதணிகள் பின்னால் நின்று
மின்னாத முகில் கொண்ட வானம் போல
மிதக்குமொரு கூந்தலவர் அழகைச் சொல்லும்!

அலைகடலில் பிறப்பெடுக்கும் முத்தை அள்ளி
அரவுதிர்க்கும் மலைப்புறத்து மணியும் சேர்த்துச்
சிலை வடிக்கும் தங்கத்தைத் துகளாய்த் தூவிச்
சிலவிடத்தில் மாங்கனியும் தூங்கச் செய்து
கலைபயில விட்டதுபோல் பாடம் கேட்கக்
கன்னியர்கள் உயர்வகுப்பில் கூடு வார்கள்!
வலைவிரித்துப் பார்த்திடுவார் அவரை வீழ்த்த
வகு ப்பிருக்கும் மாணவர்கள்! ஆனால் தோற்பார்!

புருவத்தை வில்லாக வளைத்தே அன்னார்
பூப்போலும் பார்வையினை நாணாய்ப் பூட்டி
பருவநிலை உணர்வுகளை அம்பாய் வைத்துப்
பைந்தமிழின் காதலெனும் நஞ்சும் தோய்த்துத்
தெருவதனில் செல்கின்ற இளைஞர் நெஞ்சைத்
தீயாகத் துளைத்துப்பின் இதழ்கள் என்ற
உருவதனில் புன்னகையை மருந்தாய்க் காட்டி
உயிர்கொடுக்கும் கலையறிந்த நிலையில் நின்றார்!

ஊர்க்கதைகள் பேசுவதும் உயர்ந்த காதல்
உணர்வுகளைப் பேசுவதும் சினிமாப் பார்த்து
நீர்விழியில் மல்கிடவே அதனைப் பற்றி
நினைவிழந்து பேசுவதும் இனிய பாடல்
சீர்முறையில் பாடுவதும் கண் ணால் வெட்டிச்
சிக்னல்கள் கொடுப்பதுவும் காலால் தொட்டு
நேர்முகமாய் ஆசிரியர் நிற்கும் போதும்
நினைத்தகதை கூறுவதும் என்று வாழ்ந்தார்!



அங்கே ஒரு ஆசிரியன்

கல்வியெனும் பயிர்வளர உரமாய் நிற்கும்
கல்லூரி ஆசிரியர் கூட்டம் தன்னில்
சொல்லுணர்வில் பணிவுடமை தோன்றப் பேசி
சூடான மனங்களையும் குளிரச் செய்யும்
நல்லுணர்வைப் பெற்றிட்ட ஒருவன் வாழ்ந்தான்
நல்லிளைஞன் ஜெயதெவன் என்னும் பேரோன்
செல்லுகிற இடமெல்லாம் சேர்சேர் என்னும்
சிறப்பினையே காதேற்கும் புகழைக் கொண்டான்!

உயர்வகுப்புப் பிள்ளைகட்கே கல்வி ஊட்டும்
உயர்நிலையை அவன்படித்து உயர்ந்த போதும்
தயவுணர்ந்து பழகிடுமோர் தன்மை யாலே
தானவரின் அன்புக்கே உரியன் ஆனான்!
அயலவரின் வகுப்புக்கும் அமைதி யாக
அவன்கல்வி போதிக்கும் நிலையைக் காண
மயல்பெருகும் மாணவர்க்கு அன்னான் மீத ு
மனதவனை நிறுத்தியவர் பாடம் கேட்பர்!

நல்லவர்கள் இருப்பதனை உலகம் கண்டால்
நல்லதுநீர் இருமென்றே விடுமோ ஐயா?
வில்லெனவே வளைந்தெல்லாம் வேலை பார்த்து
விரட்டியதன் பின்பேதான் உறக்கம் கொள்ளும்!
கல்லூரிக் குள்ளேயும் எதிர்ப்பார் உண்டு
கருத்தரங்க மேடைகளில் எதிர்ப்பார் உண்டு
எல்லோரும் ஒன்றாக முயன்று ஈற்றில்
யாரினையோ பிடித்தவனை மாற்றம் செய்தார்!

வீட்டினிலெ தாய்தந்தை அக்கா உண்டு
வெளிநாட்டில் அண்ணனென்ற புகழும் உண்டு
நாட்டினிலே ஆசிரியர் பட்டம் உண்டு
நல்லவர்கள் பலருடைய நட்பும் உண்டு
ஏட்டினிலே கதையெழுதும் புலமை உண்டு
என்றாலும் ஒன்றில்லைப் பணமே இல்லை!
நீட்டுதற்கும் ஆளில்லை ஆனால் இங்கே
நிம்மதியைக் கெடுத்திடவோ நாய்கள் கோடி!

கண்காணா இடத்துக்கு மாற்றம் என்றே
கைகளிலே கிடைத்திட்ட கடிதம் கண்டான்
கண்ணோடு கண்ணாகப் பழகி வாழ்ந்த
கல்லூரிப் பிள்ளைகளே கண்முன் நின்றார்
பெண்ணோடு உடன்பிறந்த பாவத் தாலே
பிழைப்புக்கு வழிதெடித் தோட்டம் செய்தால்
மண்ணோடு பயிர்வளரும் நேரம் தன்னில்
மாற்றத்தைத் தந்தவர்கள் நீடு வாழி!

நாமார்க்கும் குடியல்லோம் என்று பேச
நாவேந்தர் அப்பரது பிறப்போ நாங்கள்?
சீமான்கள் பணத்தாலே ஏவும் பேயை
செகத்தினிலே ஏழைகளால் தடுக்க லாமோ?
பாமாவும் ருக்மணியும் கிடைத்தால் போதும்!
பழிபாவம் அன்னாரின் நினைவில் ஏது?
ஏமாற்றம் நெஞ்சத்தைச் சூழ்ந்து வாட்ட
எல்லோர்க்கும் இடமாற்றச் சேதி சொன்னான்!




அரசாங்கச் சம்பளமோ கொஞ்சம் தானே
ஆகையினால் வேலையினை விட்டால் என்ன
மரபாக நாம்செய்யும் தோட்டம் தன்னை
மதிப்போடு நீசெய்தால் போதும் தம்பி
அரவாடும் புற்றருகே வாழ்தல் போல
அயலூரில் சென்றுழைக்க உன்னை விட்டு
இரவோடு பகலாக நெஞ்சம் ஏங்க
இயலாதே என்றழுதாள் அன்னை தானும்!

பதவியினை விட்டிடலாம் ஆனால் இந்தப்
பாரினிலே சனமெல்லாம் பதவி தேடிக்
கதவுகளைத் தட்டுகின்ற காலம் தன்னில்
கைவிட்டால் செல்லாத காசாய்ப் போவேன்
பதரோடு கலந்திருக்கும் நெல்லைப் போல
பாவியரும் நல்லவரும் கலந்து வாழும்
மிதவாதப் போக்குலகில் ஒழியும் நாளே
மீண்டுமொரு புத்துலகம் உதய மாகும்!

அலையெழுந்து தாலாட்டும் அகிலம் தன ்னில்
ஆங்காங்கே வாழ்பவரைப் பகுத்துப் பார்த்தால்
சிலைவடிக்கும் கைத்திறனும் சிறந்த பாடல்
செய்தளிக்கும் புலவர்களும் தெய்வம் வாழ
மலைகுடைந்து கோவில்களும் மானம் காக்க
மதயானைப் பிடரேறிப் பொருத வேந்தும்
நிலைகுலையா மொழிவளமும் நிறைந்த நாங்கள்
நினைவுதரம் தாழ்ந்ததனால் நிலையில் கெட்டோம்!

அக்காவின் திருமணத்தை முடித்தற் காக
அவசரமாய் எனக்கும்பெண் தேடிப் பார்ப்பார்
தக்கோர்கள் யாரென்று பார்க்க மாட்டார்!
தரும்கையின் கனவளவே கருத்தில் நிற்கும்
எக்காலம் திருந்திடுமொ எங்கள் நாடும்
என்றிந்தச் சீதனத்துக் கழிவு நாளோ?
நக்காத இலையில்லை நாய்கள் ஆனால்
நாயைவிடக் கேடாக நடக்கின் றோமே!

பிறக்கின்றோம் பிறந்தவுடன் பாசம் என்ற
பிணப்பாலே தொடுபட்டோம் தொடுத்த மீதி
திறப்பிலாச ் சமுதாயப் பூட்டி னாலே
திறனின்றி உடனேயே பூட்டிக் கொண்டோம்!
மறக்கின்றோம் எங்களையே நாங்கள் ஒன்றும்
மாறாட்டம் கொள்வதற்குப் பித்தர் அல்ல
இறக்கின்றோம் இறுதியிலே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நாம்வைத்த வடுக்கள் இலட்சம்!

சாதியெனும் பிரச்சனைகள் தமக்கு வந்தால்
சாதியினை ஒழிக்கவென்று கூட்டம் கோடி!
பாதிவரை சீதனத்தைப் பேசித் தோற்றுப்
பலனில்லை என்றவுடன் எதிர்ப்புக் கூச்சல்!
ஆதிவரை குலம்பற்றித் துருவி ஆய்ந்து
அப்பாலும் முடியுமெனில் எட்டிப் பார்க்கும்
நீதியலாச் சமுதாய அடிகள் தாங்கி
நினைவிழந்து கிடக்கிறதே தருமம் இங்கே!

பொங்கிடுவான் ஜெயதெவன் இதயம் நொந்து
புதுமைகளைச் சமுதாயம் மறுத்தல் எண்ணி
எங்களுக ்கு இதுதானே வாழ்க்கை என்று
ஏழைமனம் கவலையுடன் சொல்லிக் கொள்ளும்
திங்கள்தவழ் சடையிறைவன் என்பா னிங்கே
திரிலோக சங்காரம் செய்தே மீண்டும்
செங்குருதி தனிலன்பு உண்மை நேர்மை
சேர்ந்தோடும ் மனிதர்களைப் படைப்ப தென்றோ?

சிந்தனைகள் சுழன்றிடவே பாயைப் பொட்டு
சிற்றோலைக் குடிசையதன் திண்ணை மீது
பந்தமுற்ற காதலிபோல் தென்றல் வந்து
பாயோடு சேர்த்தணைத்துத் தடவிச் செல்ல
சொந்தமன உழைவெல்லாம் நீங்கி உண்மைச்
சுகமொன்றைக் கண்டவனாய் உறங்க லானான்
இந்தநிலை ஒன்றினிலே மட்டும் தேவன்
இதயமது கவலைகளை மறந்தே வாழும்!

பிரிந்தொருவர் போகின்ற நேரம் தன்னில்
பெருமைக்கு உபசாரம் உலகம் செய்யும்
பரிந்துரைகள் பலபேசும் பாசம் காட்டும்
பதைக்கின்றோம் எனச்சொல்லும் மாலை போடும்!
அரிந்தெடுத்து அகற்றிவைத்த பெரியார் கூட்டம்
அன்பொழுகப் பிரிவுப சாரம் என்றே
தெரிந்தெடுத்து விழாவொன்றை நிகழ்த்த உண்மை
தெரியாதோர் கவலையுடன் கூடி நின்றார்.

வெள்ளமென மாணவர்கள் கூடி நின்று
வெம்பியழ மேடையிலே பிரிவு நாளில்
உள்ளமுவந் தளித்தபா ராட்டைப் பெற்று
உரைநிகழ்த்த ஜெயதெவன் எழுந்து நின்றான்
துள்ளுகின்ற மொழிநடையில் வயிற்று நோவைத்
தூண்டுகின்ற சிரிப்பெழவே பேசி வந்த
தெள்ளுதமிழ் உரைவிட்டுக் கேட்போ ரெல்லாம்

தேம்புமொரு குரலினிலே பேச லானன்!



என்னருமைப் பெரியவர்காள்! இங்கு தோன்றும்

என்னினிய நண்பர்களே! கல்வி கற்றுப்

பின்னுமொரு அன்பாலே வளரும் எங்கள்

பிள்ளைகளே! மாணவர்காள்! வணக்கம் சொன்னேன்!

என்னுடைய வாழ்வினிலே ஏனோ உங்கள்

இன்முகத்தைப் பிரிந்தேகும் இந்த நாளோ?

புன்னகையைத் தினம்பார்த்த முகங்கள் கூட

பொலிவிழந்து விடைதருமிக் காட்கி ஏனொ?



பெரியவர்கள் பாதமதைப் போற்றி வாழும்

பேறெனக்கக் கிடைத்ததென மகிழ்வாய் வாழ்ந்தேன்!

தரிசனமாய் உங்களையே மீண்டும் என்று

தரணியிலே காணுவதோ அறியேன் நானும்

உரியுமொரு ஆடையினைக் கைகள் ஓடி

உடுப்பதுவே உயர்நட்பாம் என்றே சொன்ன

புரிநூலில் துணிநெய்த புலவன் சொன்ன

புத்தகத்தின் வழிநடந்த நண்பர் வாழி!



மாணவர்காள் உங்களையே வாழ்க்கை என்ற

மணல்தீவில் விடுகிறது கால வெள்ளம்!

பேணரிய கல்வியெனும் பயிரை நட்டுப்

பிறர்புகழ ஒழுக்கமெனும் நீரை ஊற்றிக்

காணரிய சோலையென வாழ்வை யாக்கல்

கடமையென நீருணர்ந்து கொள்ளல் வேண்டும்!

பாணரிந்து உண்ணுகின்ற வறுமை யேனும்

பண்புடனே இருந்திடலே உண்மை வாழ்வாம்!



உறவென்ற ஒன்றாலே இணையும் போதில்

உணர்வுகளும் மனங்களிலே கலத்தல் உண்மை!

சிறக்கின்ற பெருமகிழ்வு சிந்தை நோதல்

சீறிவரும் பெருந்துயரம் பிரிவு எல்லாம்

அறமென்ற ஒன்றுணர்த்த அன்றே அந்த

ஆண்டவனால் தரப்பட்ட அமைப்பே ஆகும்!

பறக்கின்ற காலமெனும் பறவை யாலும்

பலமாற்றம் வாழ்க்கையிலே வந்து போகும்!



ஆகையினால் நடப்பதையே காணல் வேண்டும்

அதைமீறிச் செயற்படுதல் பெருமை யல்ல!

சாகையிலே எதைக்கொண்டு போவோம் நாங்கள்?

சந்தனமா? சாக்கடையா? எனவே நாமும்

வேகையிலே துன்பமெலாம் தாங்கி மீண்டும்

வெந்தவுடன் உணவாகும் அரிசி போல

தோகைமயில் பார்வதியைப் பாகம் கொண்டான்

தூயமலர்ப் பாதமதைப் போற்றி வாழ்வோம்!



உரைமுடித்து ஜெயதேவன் இறங்கி வந்தான்

ஊரவர்கள் அவனுக்காய் இரங்கி நின்றார்!

கரையறியாக் கலம்போல கலங்கி மீண்டும்

கல்லூரி தனைவிட்டு நடக்க லானான்

தரைதடவும் பார்வையுடன் அன்னான் செல்லத்

தடுத்திட்டார் மாணவர்கள் சிறிது நேரம்!

நிரைநிரையாய் நின்றவர்கள் பிரிவு பேசி

நினைவுகளைப் பரிமாறிக் கொள்ளும் போதில்!





மாணவி என்றொரு தாரகை





நிழலென்னும் போர்வையினால் நிலத்து மண்ணை

நெடுந்தூரம் மறைக்குமொரு வேம்பின் கீழே

அழலென்னும் பொருள்விழுந்த மலரைப் போல

அமர்ந்திருந்தாள் சிவச்செல்வி என்னும் பெண்ணாள்!

குழலென்னும் பொருள்தொலைத்த ஆயன் போல

குருவான தேவனையே பிரியும் பேதை

உழவென்னும் துயருற்ற நிலத்தைப் போல

உளமுற்ற வேதனையால் அழுதாள் உள்ளே!



அன்றேதான் விரிந்திட்ட வாழை தன்னின்

அழகான குருத்தின்நடு நரம்பைப் போல

நின்றிருக்கும் நேருச்சி இரண்டு பக்கம்

நீண்டிருக்கும் பின்னல்கள் ஒன்று முன்னால்

சென்றவளின் மடியினிலே பள்ளி கொள்ள

செம்மண்ணில் மற்றதுவோ ஊஞ்ச லாடும்!

பொன்னகையைக் கண்டறியாக் கழுத்தின் பின்னே

புகைநிறத்தில் உரோமங்கள் அழகு சேர்க்கும்!



திரைநீக்கம் இதழ்களுக்கு ஆகும் போதில்

தேனான சிரிப்பொன்றை உலகம் காணும்!

நிரையான பற்களிலே கூடத் தானும்

நிம்மதியைக் கெடுக்கின்ற சக்தி ஏன ோ?

கரையோரம் குழிவிழுந்த கன்னத் தோடு

கதைபேசிச் சிரிக்கின்ற அவளைக் கண்டால்

தரைவாழ்வில் துறவியெனத் திரிவோர் எல்லாம்

தவமெதற்கு செய்கின்றார் என்றே தோன்றும்!





இல்லையென மறுத்திட்ட பொருளாம் ஒன்றை

இரந்தேனும் பெறவிரும்பும் குழந்தை போல

எல்லையிலா அவள் விழிகள் ஏக்கத்தோடு

எப்போதும் தவிப்புடனே எதையும் நோக்கும்!

கல்லைவிடக் கனமான பொருளைக் கூடக்

கணப்போதில் அவள்விழிகள் பொடியாய் ஆக்கும்!

தொல்லையிந்த உலகிற்கு விழியோ? இல்லைத்

தோகையவள் வேறுபல கொண்டும் வாழ்ந்தாள்!



வெண்பட்டுத் துணிவிரித்து அதற்கு மேலே

விதைத்திட்ட மைசூரின் பருப்புப் போலே

கண்பட்ட இடமெல்லாம் கன்னம் தன்னில்

கனிவான செம்மஞ்சள் பருக்கள் கொஞ்சம்!

பண்பட்ட கவிதையெனக் கைகள் தன்னில்

படுத்திருக்கும் சாமைக்கதிர் நிறத்தில் உரோமம்

தண்பட்ட இருமார்பின் இடையில் நின்று

தலைநீட்டும் பேனாவும் ஒன்றைப் பற்றி!





திங்களது முகங்காணாக் குமுதம் தானோ

திசையறியாப் புதர்புகுந்த பிணைமான் தானோ

வெங்களத்தில் வேல்பாய்ந்த வேழம் தானோ

வேறுதிசை துணைபிரிந்த குயிலின் பேடோ

பொங்குபுயல் உருக்குலைத்த முல்லை தானோ

புதுவிளக்கின் சிமிழுடைத்த நெஞ்சம் தானோ

அங்குவந்து செல்வியவள் இருந்த கோலம்

ஆண்டவனும் உவமைசொல்ல அரிய தாகும்!









கேள்வியும் பதிலும்







அங்கவளை நிழலில்ஜெய தேவன் கண்டான்

அன்புடனே அவளருகில் சென்றே மெல்லத்

திங்களொளி வீசுகின்ற முகத்தைப் பார்த்துத்

திரும்புங்கோ சிவச்செல்வி என்றும் சொன்னான்

அங்கவளோ திடுக்குற்று எழுந்து சொன்னாள்

அன்புடனே சேர்போட்டு வாங்கோ என்றே

பொங்கிவரும் வேதனையை வார்த்தை காட்ட

புன்னகையை வேண்டுமென்று இதழ்கள் சிந்தும்!



சிவச்செல்வி உமையொன்று கேட்க வேண்டும்

சினங்கொள்ளக் கூடாது படிப்புக் கப்பால்

இவரென்ன கேட்கின்றார் இப்போ என்று

எண்ணாமல் உண்மையினைச் சொல்லல் வேண்டும்!

அவரெல்லாம் உம்முடனே படிப்போர் தானே

அவர்களைநீர் விட்டிங்கே இருத்தல் ஏனோ?

எவரோடும் வகுப்பினிலே உறவாய் இன்றி

எப்போதும் தனிமையிலே தவித்தல் ஏனோ?



கனிந்தவிழி உயர்பண்பு உயர்ந்த கல்வி

கருத்துக்கள் கட்டுரைகள் கடவுள் பக்தி

இனியமொழி இவையனைத்தும் நிறைந்த நீர்தான்

எப்பொழுதும் கவலையுடன் வாழ்தல் ஏனோ?

தனியவிருந் தேநீரும் தவித்தல் தன்னைத்

தரமறிய முடியாத மடையன் அல்லேன்

மனிதவியல் தத்துவத்தை நோக்கும் போது

மனம்நிறையக் கவலைகளே உமக்கும் உண்டு!



வாழ்க்கையிலே கவலைகளும் சூழ்தல் உண்மை

வழியதற்கு இதுவல்ல வலிமை யோடு

வீழ்ச்சியிலும் எழுந்திருக்கப் பழகல் வேண்டும்!

வேண்டுவன எல்லார்க்கும் கிடைத்தல் இல்லை

ஏழ்மையிலே பிறந்திட்ட கவலை தானோ

இரக்கமற்ற உறவுகளால் கவலை தானோ?

சூழ்ந்தமனக் கவலையினைச் சொன்னீ ராகில்

சோகமது தீரவழி சொல்வேன் என்றான்



உளந்தடவி உயிர்தடவி நோக்கும் கண்கள்

உணர்விழந்து நிலந்தடவ நின்றாள் அந்தக்

களந்தடவும் மார்புடைய கன்னி தானும்

கருத்தேதோ சொல்வதற்கு உதடு துள்ளும்

இளம்பருவ முகமதுவோ இருண்டு தோன்றும்

இருகரமும் தம்முள்ளே பிசைந்து கொள்ளும்

குளவரம்பின் உடைப்பெனவே பெருகும் கண்ணால்

குறிவைத்தே தேவனையும் நிமிர்ந்து பார்த்தாள்!



பூமரத்தில் பூக்கின்ற பூக்கள் எல்லாம்

புண்ணியத்தைச் செய்வதில்லைக் கோவில் சேர

மாமரத்துப் பூந்தளிர்கள் எல்லாம் கூட

மாதவத்தைச் செய்வதில்லை அணிலைக் காண!

தாமரைகள் வண்டுகட்குத் தேனைச் சேர்க்க

தவளைகளே அதைச்சுவைக்கும் விதியாம் என்றால்

தேமதுர மலர்தவிக்கும் தவிப்பைக் கொஞ்சம்

தேவன்சேர் சிந்தியுங்கள் என்றாள் செல்வி





தணியாத தாகம்





எரிமலை என்னும் நெஞ்சில்

எழுந்திடும் துன்பம் எல்லாம்

புரிந்திட ஒருசொல் லாலே

பூவையும் சொல்லி அங்கே

சரிந்திடும் பொழுதை நோக்கிச்

சாய்ந்திடும் உள்ளம் நோக

பரிவுடன் விடையும் கூறிப்

பதைப்புடன் நடக்க லானாள்



நடந்திடும் போதும் கூட

நங்கையின் கண்கள் பின்பு

கடந்திடும் தேவன் தன்னைக்

கனிவுடன் எட்டிப் பார்க்கும்

படர்ந்திடும் கால்கள் கூடப்

பாரடி நின்று என்கும்

உடனடித் தீர்வைக் கேளா

ஊமைநீ என்னும் நெஞ்சம்!



பள்ளியும் படித்த பாடப்

பக்கமும் பிரியும் தேவன்

துள்ளிடும் முகமும் வகுப்பில்

துளித்திடும் கதையும் சிரிப்பும்

அள்ளியே நெஞ்சில் யாரோ

அனலெனக் கொட்டச் செல்வி

கொள்ளியை மிதித்தாள் போலக்

குலைவுடன் வீடு சென்றாள்



வீட்டிலே சென்ற நங்கை

விளக்கினை ஏற்றி வைத்துக்

கூட்டிலே கோழி யெல்லாம்

கூவியே அடைத்துப் பின்னும்

ஆட்டுக்குக் குழையும் கட்டி

அடுப்பையும் ஊதி மூட்டி

ஓட்டினை வைத்தே தோசை

ஒருமுறை சுட்டுப் பார்த்தாள்!



தோசையை வருவோக் கெல்லாம்

தோகையின் அம்மா விற்பாள்

ஆசையாய் அரிசி சீனி

அனைத்தையும் வாங்கி மீதிக்

காசையும் பார்ப்பாள் ஏதும்

கையினில் கிடையாத் துன்ப

ஓசையை நெஞ்சம் கேட்க

ஊர்வயல் வேலை செய்வாள்!



அடுப்படி நிலையில் செல்வி

அமைதியாய்த் தலையைச் சாய்த்து

விடுபட்டுப் போகும் அந்த

வேங்கையாம் தேவன் தன்னை

தொடுபடாது அறுந்த அன்புத்

துடிப்புடன் நினைத்துப் பார்ப்பாள்

நடுவழி பிரிகின் றானே

நாயகன் என்னும் நெஞ்சம்!



ஆண்டுகள் பலவாய் நானும்

ஆசையை வளர்த்த போதும்

வேண்டியே கேட்டேன் இல்லை

விருப்பத்தை அடக்கி வந்தேன்

பூண்டொடு எந்தன் ஆசை

புதைகுழி போகும் என்றே

நீண்டநாள் எண்ணி வாழ்ந்தேன்

நினைவெலாம் அவரே ஆக



உண்மையில் அவரும் கூட

ஊரினில் ஏழை தானாம்!

எண்ணத்தைச் சொன்னால் என்னை

ஏற்கவும் கூடும் ஆனால்

அண்ணனும் வயதில் மூத்த

அக்காவும் இருக்கம் போது

பண்பினை எனக்காய் விட்டால்

பழியெலாம் அவர்க்குத் தானே!



நாங்களும் பணமும் வீடும்

நகைகளும் இருந்தால் அந்தத்

தீங்கனிப் பழமே யான

தேவன்சேர் வீட்டில் கேட்டு

பூங்குயில் கூவ நல்ல

புதுமலர் மாலை சூட்டி

நீங்களே எல்லாம் என்ற

நினைவுடன் வாழ லாமே!



ஒன்றுமே இல்லா ஏழை

ஓட்டிலே தோசை சுட்டு

என்றுமே வாழும் வாழ்க்கை

இப்படி நினைத்தேன் பாவம்

சென்றுவீழ் பொழுது நாளை

செகத்தினில் வருதல் கூடும்

இன்றுவந் திடாதே அன்றோ

இதயத்தை வருத்தல் ஏனோ?



மற்றவர் போல எங்கள்

மனத்திலும் அன்பு நேர்மை

பற்றியே வளரும் ஆனால்

பணமென்ற ஒன்றே இல்லை

கற்றவள் அம்மா ஆனால்

கடனுக்குத் தொசை விற்கும்

நற்செயல் புரியத் தானே

நான்முகன் எழுதி வைத்தான்!



பணத்தினால் மிதந்த பெண்கள்

பண்புகள் தவறித் தங்கள்

குணத்துக்கு ஒவ்வாச் செய்கை

குறைவறப் புரியும் போதும்

மணத்துணை யாக நல்ல

மனிதரைத் தேர்ந்து வாழ

பணமெனும் கருவி ஒன்றே

பாரினில் துணையாய் நிற்கும்.



கடவுளின் கோயில் கற்பு

கண்ணிய மான வாழ்க்கை

படலையைத் தானும் எட்டிப்

பார்த்திடாப் பண்பும் பொல்லா

விடத்தினை தந்து கூட

விரும்பினால் கணவர்க் காக

கடனெனக் குடிக்க அஞ்சாக்

கன்னியர் வாழ்க்கை என்ன?



குடிவெறி கொடிய செய்கை

கொண்டவள் வாழ்வைப் பேணா

அடிதடிக் கூச்சல் போடும்

அப்படி ஒருவன் தானே

துடியடி என்று எந்தன்

துணையென வந்து சேர்வான்

எடிபிடி என்ற வார்த்தை

எத்தனை வருமோ சாமி!



இனியென்ன அவரும் போட்டார்

இதயமே அமைதி கொள்வாய்!

கனிந்திட விதியில் லாமல்

காய்களோ பழங்கள் ஆகா

பனிமுகில் போல வாழ்க்கைப்

பாதையில் வந்த அந்த

மனிதரும் போயவிட் டாரே

மனமது தவித்தல் ஏனோ?



நினைப்பது நடந்தே விட்டால்

நிலத்திலே பெருமை என்ன

நனைத்திடும் கண்ணீர் தம்மை

நாங்களும் காண மாட்டோம்!

கனைத்திடும் குதிரை வாழ்வில்

கவின்தரு கொம்பு வையாத்

தினைவளர் மலையாள் கேள்வன்

திறனையும் உணர மாட்டோம்!



போகட்டும் தேவன் ஆகா!

போய்விட்டால் எனக்கு என்ன

வேகட்டும் எந்தன் நெஞ்சு

வெடிக்கட்டும் வெடித்து நூறாய்

ஆகட்டும் இறைவா! ஆனால்

அன்பிலே பிறந்த நெஞ்சத்

தாகத்தை உன்னால் என்றும்

தடுத்திட முடியா தப்பா!





விதியின் கவலைகள்







பெட்டி படுக்கைகள் புத்தகம் – எழுதப்

பேனை முதலிய யாவையும் – அள்ளிக்

கட்டிக் கொண்டே யந்தத்தேவனும் – அயல்

கல்லூரிக்குப் பயண மாயினான்!



தொட்டில் பசுவினக் கூட்டத்தை – இனித்

தோட்ட வரம்பெலாம் கொண்டுபோய்க் – தினம்

கட்டிவைத் தேபுல் மேய்த்திட – வீட்டில்

கவன மெடுப்பவர் வேறுயார்?



கூலி கொடுத்தென்றும் தோட்டத்தை – தினம்

கொத்திப் புரட்டிட முடியுமோ – சிறு

வேலிப் பொட்டுக்கு ளால்வரும் – பல

வீட்டுச் சனங்களின் ஆடுகள்!



தேடிக் கலைத்திட யாரினை – நாம்

தேடித்தான் வைத்திடப் போகிறோம் – பயிர்

நாடிப் பனிபொழி காலையில் – தண்ணீர்

நாளை ஊற்றவோர் ஆளில்லை!



அப்பாவும் அம்மாவும் தோட்டத்தை – இனி

அப்படியே விடப் போகிறார் – வீட்டில்

சுமா இருந்துமே வாழ்க்கையின் – உண்மைச்

சுவையை இழந்திடப் போகிறோம்!



எண்ணங்கள் தொடர்கதை ஆகவே – அவன்

இதயம் புகுந்ததை வாட்டிட – அங்கு

புண்ணென நொந்திடும் மூலையில் – ஒரு

புத்துணர்வும் வலி தந்திடும்!



நேற்றந்த மாலையில் சிவச்செல்வி – ஏன்

நின்றந்த வார்த்தைகள் கூறினாள்? – எதில்

தோற்றந்தப் பிள்ளையும் வாடினாள் – என்ன

துன்பத்தில் அக்கதை பேசினாள்!



விரும்பாத ஒருவனைச் செய்யென்று – பெற்றார்

வேண்டினரோ அவள் செல்வியை – என்ன

இரும்பா பெற்றவர் இதயங்கள் – வேறு

என்னதான் கவலைகள் இருந்திடும்?



விடுதலை வந்ததும் செல்வியாள் – வாழும்

வீட்டுக்குப் போயதைக் கேட்கலாம் – அது

அடுதலைச் செய்கையாய் ஆகுமா – யாரும்

அழுவதைக் கேட்பதோர் பாவமா?



மனமெனும் தோணியும் கேள்வியாம் – பெரு

மலையெனும் பாறையில் மோதப்போய் – அங்கு

கனவொளி விடையெனும் விளக்கினைக் – கண்டு

கரையெனும் நிம்மதித் துறைவரும்!



இரக்கம் என்கிற பாலினை – எல்லா

இதயப் பசுக்களும் பொழிந்திடா – அந்தச்

சுரப்புக்கும் பூமியில் காரணம் – என்றும்

சொல்லில் அடங்கிடா விதியதாம்!









நிலவுக்கு ஒரு கேள்வி





தாவிவரும் சோளகத்தில் கொடிகள் ஏற்றித்

தம்மனதில் சிறுவர்குழாம் களிக்கும் காலம்

தூவிமழை வான்பொழிந்த சேற்றில் நின்று

தூதுவிடும் சித்திரையின் ஓய்வு நாளில்

ஆவியுயிர் வருத்துகின்ற நிலவைப் பார்த்து

அழுதழுது சிவச்செல்வி நெஞ்சம் நோவாள்!

மாவிலையின் சருகுகளைக் கூட்டிக் கூட்டி

மனம்நிறைந்த காதலனை எண்ணிப் பார்ப்பாள்.



கண்ணாலே காதலனைக் கண்டே நானும்

கதைபேச வழியொன்றை நிலவே காட்டாய்!

பெண்ணாக இலக்கியங்கள் உன்னைச் சொல்லும்

பிரிவென்னும் துயத்தை அறியாய் நீயோ?

புண்ணாகிப் போச்சுதடி இதயம் வெந்து

புதுநோவை நீயுந்தான் தருதல் ஏனோ?

மண்ணாகி நானழிந்து சாகும் போதும்

மண்கூட ஜெயதேவா என்றே ஏங்கும்!



அழுகிறது உள்ளமடி அவரைத் தேடி

அலைகிறது கண்களடி உடைகள் கூட

விழுகிறது எனைவிட்டு உணவைக் கண்டால்

வியர்க்கிறது அம்மாவோ ஏதும் கேட்டால்

எழுகிறது பெருங்கோபம் எங்கே தேவன்

என்கிறது புத்தகமும் படிக்கத் தொட்டால்

தழுவுதடி கண்தூக்கம் என்றால் பாயில்

தனிமையிலே கொல்லுதடி கனவே வந்து.



ஒருநாளில் ஜானகியும் காதல் வென்று

உறவாடி இராமனுடன் மகிழ்ந்தாள் என்பார்

திருநாட்கள் பலநோக்கிக் கிடந்த போதும்

தேன்மொழியாள் தமயந்தி நளனைச் சேர்ந்தாள்

கருவாகிப் பிறவாத போதும் கூடக்

கைப்பிடித்தாள் அர்ச்சுனனைத் துரப நாட்டில்

உருவான பாஞ்சாலி விதியால் என்றே

ஊரெல்லாம் கதைபடித்து மகிழும் பாவம்!



தெருவோடு தெருவாக நடந்து பார்த்தால்

திருவோடு ஏந்துகிறோம் பெண்கள் நாங்கள்

பொருளோடு பொருள்சேர்த்துப் பொலிவு காண

புத்தாடை நகையணிந்து அழகு பார்க்க

உருவான செயலல்ல எங்கள் வாழ்வில்

உறவாட ஒருவனையே இடுக பிச்சை

தெருவீதி கேட்கின்றோம் ஆனால் இங்கே

தேவாரம் புராணங்கள் தெய்வம் நூறு!



உரலிட்டுத் துவைக்கிறது உலகம் பெண்ணை

உறவென்று துயர்துடைக்க வருவார் இல்லை

மரவட்டுப் பிடியிழந்த ஓலை போல

மனதுற்ற வேதனையால் பெண்கள் வீழ்ந்தார்

சரவட்டம் போல்முன்னால் துன்ப வட்டம்

சவுக்கடியாய்ச் சீதனநோய் நெருஞ்சி முள்ளாய்ப்

பரவிட்ட பணங்காசு காணி என்ற

பாவச்சுமை காதலெனும் மலரின் மீதே!



பாஞ்சாலி தமயந்தி சீதை என்ற

பாவையர்கள் மட்டுந்தான் காதல் என்ற

பூஞ்சோலை புகுந்தாடும் விதியோ மற்றப்

பூவையர்க்குக் காதலொரு சதியோ காட்டில்

தீஞ்சாற்றுப் பழமரத்தைக் கொடிகள் பற்ற

திரவியங்கள் கொடுப்பதிலை தெய்வம் என்று

மாஞ்சோலைக் கிளிதாங்கும் அம்மன் கூட

மங்கையர்க்கு வாழ்வுதர மறுக்கின் றாளே!



மலைதடவ முகிலினையும் வண்ண வண்ண

மலர்தடவ தென்றலையும் பனியின் தூறல்

இலைதடவச் செடிகளையும் இரவில் கூடும்

இருள்தடவ உலகினையும் இனிமை யான

கலைதடவச் சிலைகளையும் கடலில் ஓடும்

கலந்தடவ அலைகளையும் அடுப்பு மேட்டில்

உலைதடவ அமுதினையும் படைத்த எங்கள்

உத்தமனாம் இறைவனின்று கண்ணா கெட்டான்?



வானகத்து நிலவேநான் இனியும் நின்றால்

வந்துடனே அம்மாவும் விடுப்புக் கேட்பாள்

கானக்தில் வலைவிரிக்கும் வேடன் போல

கதைவிரித்துப் பிடித்திடுவாள் எந்தன் நெஞ்சை

மீனகத்துத் தூண்டிலென ஏனோ நானும்

மீட்ச்சியிலாக் காதலுக்கு இரையாயப் போனேன்

நானகத்தில் உள்ளவற்றை உனக்கும் சொல்லும்

நாடகமும் எத்தனைநாள்? என்றாள் செல்வி!



வயலோரம் நடந்த கால்கள்!

கீற்றோலைக் கைகாட்டிக் கீழ்வானில் இளந்தென்றல்
கீதத்தில் மயங்கும் தென்னை – வயல்
நாற்றோடு போராடி நடுவானின் இடைநின்று
நடைபோட்டு மகிழும் நிலவு – நீர்
ஊற்றோடு போராடி உடல்நோக மெதுவாக
உறக்கத்தில் சாயும் நாணல் – கரும்புச்
சாற்றோடு போராடும் கருவண்டுக் கூட்டத்தின்
சத்தத்தில் மிதக்கும் மாலை!



புல்வளர்ந்த நெடுந்தாளின் மீதமர்ந்து சிறுபூச்சி
புரியாத குரலொன்று காட்டும் – அங்கு
கல்வளர்ந்த இளந்தேரை களிப்போடு தன்னுடைய
கருநாவை அதன்மீது நீட்டும் – போர்
வில்வளர்ந்த பாணமென பொந்திருந்து கிழவாந்தை
வெளியாலே குரல்கொடுத்துப் பறக்கும் – கொடும்
பல்வளர்ந்த பெரும்பாம்பு வரம்பசைந்து மெதுவாக
பலவெலிகள் சுவைபார்க்கும் நேரம்!



கருஞ்சிறுத்தைக் கண்போலக் காதணிகள் மினுமினுக்க
கைவீசிப் பெண்கிழவி நடக்க – பின்னால்
நெருஞ்சிவிதை முள்போலச் சிறுமடிகள் இடைதெரிய
நெருங்கிவரும் கன்றுகளும் பசுக்கள் – அதைப்
பெருஞ்சிறகுக் கைவிரித்துப் பெரியபனை வட்டிருந்து
பிரிந்தவர்போல் கருங்குழவி பார்க்க – ஒரு
குறுஞ்சிரிப்பு நடைபோட்டுக் கோழிகளும் வரவேற்றுக்
கொக்கரிக்கும் நேரமந்த நேரம்!



பனையோலைக் கீற்றாலே பலகாலம் முன்படைத்த
பழுதான வேலிகளே அதிகம் – அதில்
தினைபோலக் குவிகின்ற கறையானின் கைவண்ணம்
தீட்டாத ஓவியமாய்த் தெரியும் – செல்வி
மனைதேடிச் செல்கின்ற ஜெயதேவன் மனதந்த
மருதநிலக் காட்சிகளில் பதியும் – அந்த
நினைவோடு பலர்சொன்ன வழிகேட்டு ஜெயதேவன்
நெடுந்தூரம் வயலோரம் நடந்தான்!







செல்வியின் வீட்டில்!





வீட்டறையின் தட்டியினை அடைக்கச் செல்வி
விழுந்தபல ஓலைகளை நனையப் போட்டுப்
பாட்டுவெயில் காலைமுதல் கிடுகாய்ப் பின்னிப்
பக்குவமாய் அதையடுக்கும் போதில் அன்று
கூட்டிவந்து தேவனையே செல்வி என்று
கூப்பிட்டாள் பக்கத்து வீட்டுத் தோழி
போட்டுவிட்டு ஒலையினைப் போனாள் செல்வி
புன்னகையின் பெருக்கோடு தேவன் நின்றான்

கண்டவுடன் சிவச்செல்வி கண்ணைக் கூடக்
கணநேரம் நம்பாமல் சிலையாய் நின்றாள்
விண்டுரைக்க முடியாத மகிழ்ச்சி பொங்க
வீட்டுக்குள் வாங்கோசேர் என்றும் சொன்னாள்
கொண்டையினைக் கையாலே குலைத்துப் பின்னர்
குனிந்தபடி முன்னாலே சென்று சிவப்புத்
துண்டெடுத்தத் தலைபின்னிக் கொண்டே நெஞ்சம்
துடித்திடவே இருத்துதற்கோர் இடத்தைப் பார்த்தாள்!



மண்ணாலே சுவர்வைத்து அதற்கு மேலே
மட்டையினை வரிந்தஅடுப் படிக்குள் நின்றே
கண்ணாலே பார்க்கின்ற தாயைக் கூவிக்
கல்லூரிச் சேரம்மா என்றே செல்வி
பண்போடு கூறிடவே அவளும் வந்து
பாய்போட்டுத் திண்ணையிலே இருங்கள் என்றாள்
எண்ணாத எண்ணங்கள் எண்ணி வந்தான்
ஏழ்மையது கொடுமையினைக் கண்டே நொந்தான்



உங்களினைப் பற்றித்தினம் வீட்டில் வந்து
ஒருநூறு கதைசொல்வாள் செல்வி என்றும்
தங்களுக்கு மிகப்பிடித்த சேராம் நீங்கள்
தன்னுடனே படிப்பவர்கள் சொல்வார் என்று
எங்களுக்குச் சொல்வதுதான் தினமும் வேலை
என்னதம்பி படிப்பாளோ செல்வி என்றே
பொங்கிவரும் சிரிப்போடு கேட்கும் தாயை
புன்னகையின் துணையோடு தேவன் பார்த்தான்



இடமாற்றம் பெற்றேநான் வேறு ஊரில்
எனக்கொன்றும் தெரியாது ஆனால் ஒன்றைத்
திடமாகச் சொல்லிடுவேன் படிப்பில் செல்வி
திறமைமிகக் காட்டுவதால் படிக்கச் செய்தல்
கடனாகும் உங்களுக்கு குணத்தில் கூட
கல்லூரிப் பிள்ளைகளின் கூட்டம் தன்னில்
நடமாடும் செல்வியைப்போல் நல்ல பிள்ளை
நான்காண வில்லையெனச் சொன்னான் தேவன்



பிள்ளைகளின் நிலைபற்றி உண்மை கேட்டால்
பிழையில்லை என்பதையே பதிலாய்ச் சொல்லி
உள்ளநிலை ஆசிரியர் எவரும் சொல்லார்
ஊருலக வழக்கமிது நீங்கள் கூடக்
கள்ளியவள் மனங்குளிரப் புகழ்கின் றீர்கள்
கணப்போதும் வீட்டினிலே படித்தல் இல்லை
துள்ளியிந்த வயலெல்லாம் குதித்தல் அன்றித்
துணைக்கு வந்து ஒருவேலை செய்ய மாட்டாள்



சொல்லிவிட்டு தாய்திரும்பி மகளைப் பார்த்தாள்
சொல்லவொணா வெட்கமுடன் தாயைப் பார்த்து
செல்வியவள் உதடுகளைக் கடித்தே இல்லைச்
சேரம்மா சொல்வதெலாம் பொய்யே என்று
நல்லதொரு கண்வளைப்பில் காட்டி அப்பால்
நடந்திட்டாள் ஜெயதேவன் தாயைப் பார்த்து
கொல்லவொரு ஆயுதமும் கையில் இன்றிக்
கொன்றுவிடும் வினாவொன்றைக் கேட்க லானான்!



(தொடரும்)

எழுதியவர் : (16-Jan-19, 4:46 am)
பார்வை : 124

மேலே