ஓடிய மகளும் வாடிய தாயும்

Skip to content
நந்தவனம்
முற்றம்
கவிதைகள்
சிறுகதைகள்
கட்டுரைகள்
குறள் தரும் விளக்கம்
ஏனைய படைப்புக்கள்
தொடர்புகட்கு
0
எனது படைப்புக்கள் • இலக்கிய மேடை
அது செல்வோரை வருத்தும் கொடிய பாலைவனப் பெருவழி. அதிலே சில பிராமணர்கள் கொழுத்தும் வெய்யிலைத் தடுக்க குடை பிடித்துக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் தோள் சுமக்கும் தண்டிலே உறி தொங்குகின்றது. அதில் உணவு தேடி உண்ணும் பிச்சைப் பாத்திரமும் இருக்கின்றது. தவநெறி காட்டும் முக்கோலும் அவர்கள் கையில் தெரிகின்றது. இறை உணர்வைத் தவிர வேறு சிந்தனை அற்றுத் தல யாத்திரை புரியும் அவர்கள் பாலை நிலத்திலே உடல் வருத்தி நடப்பதில் நியாயம் உண்டு.
அந்தப் பாலை நிலத்திலே ஒரு வயது முதிர்ந்த தாய் அவர்கள் எதிரிலே ஓடி வருகின்றாள். அந்தணர்களே! என் மகளையும் அயல் வீட்டுப் பையனையும் வரும் வழியில் எங்காவது பாhத்தீர்களா? அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து இருந்தார்கள். யாருக்கும் தெரியாமல் இரவும் பகலும் கூடி மகிழ்ந்திருக்கின்றார்கள்.
இப்போது எனக்கும் சொல்லாமல் என் மகள் அந்த இளைஞனோடு சென்றுவிட்டாள். அதனாலே அவளைத் தேடிக் கொண்டு இவ்வழியால் தவித்து வருகின்றேன். நீங்கள் அவளைப் பார்த்தீர்களா என்று துடிதுடித்தாள் அந்தத் தாய்.
அம்மா! அழகான ஒரு ஆடவனுடன் அணிகலன்கள் அணிந்து மகிழ்ச்சியோடு செல்லும் ஒரு பெண்ணைக் கண்டோம். அவள் உன் மகளாகவே இருக்க வேண்டும். ஆனால் நீ அவளைத் தொடர்ந்து செல்ல வேண்டாம். நாம் சொல்லும் அறிவுரையைக் கேட்பாயாக.
சந்தண மரம் மலையிலே பிறந்து வளர்கின்றது. அது மலையிலே பிறந்தாலும் அரைத்துப் பூசிப் பயன்படுத்தத் தெரியாத மலைக்கு என்ன பயனைச் செய்யும். ஆதனால் நீ அவளைத் தேடாதே. போக விடு.
முத்துக்கள் நீரிலே தோன்றினாலும் அவற்றைக் கோர்த்து மாலையாகப் பயன்படுத்துபவர்களுக்குத் தானே அவை பயன் கொடுக்கும். முத்துக்களைப் பெற்ற நீருக்கு அவைகளால் என்ன பயனைச் செய்துவிட முடியும். ஒன்றுமில்லையே. அதனாலே அவள் வழியைத் தடுக்காதே. திரும்பி நீ வீடு செல்வாய்.
யாழின் ஏழு நரம்புகளிலிருந்து பிறக்கும் இசையானது அதை மீட்டி அனுபவிப்பவர்களுக்கே இன்பத்தை வழங்குமல்லாது தான் பிறந்த யாழுக்கு என்ன மகிழ்ச்சியைத் தந்துவிடப் போகின்றது. நீ இந்த உண்மைகளை உணர்ந்து வீடு செல் என்று எடுத்துச் சொன்னார்கள் அந்தப் பிராமணர்கள்.

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல
உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!
வௌ; இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரை காணிரோ? பெரும!
காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலை உளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேரும்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை
யாழ் உளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
என ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.

இது சங்க இலக்கியம் கலித்தொகையில் பாலைக் கலியிலே எட்டாவது செய்யுளாக உள்ளது. இதை உற்றுக் கவனியுங்கள். ஒரு பெண் ஒருவனைக் காதலிக்கின்றாள். பெற்றாருக்கு அவனைக் கட்டித்தர விருப்பம் இல்லை. நான் அவனோடு உள்ளம் உடல் இரண்டாலும் கலந்து விட்டேன் இனி வேறு ஒருவனைக் கட்டிக் கொள்வதில் உடன்பாடில்லை என்று அந்தப் பெண் மறுத்துப் பார்க்கின்றாள்.
பெற்றாரோ விடுவதாக இல்லை. அந்தப் பெண் வீட்டை விட்டுக் காதலனோடு வெளியேறி விடுகின்றாள். பின்பு நடந்த தேடுதல் படலத்தில் தான் இத்தனை அறிவுரைகளும். இந்த அறிவுரைகள் சங்ககால மக்களுக்கு மட்டும் தானா என்றால் இல்லை. இன்றும் பொருந்தும் அறிவுரையாக உள்ளது.
இன்று தமிழ்நாட்டிலே பார்த்தால் ஓடிய காதலர்கள் திரும்பவும் பிடித்து வரப்பட்டுக் கொலை செய்யப்படும் காட்சிகள் பல இடங்களிலே அரங்கேறி வருகின்றன. உயர்சாதிகளும் தலித் மக்களும் காதலித்து விட்டால் ஊரே திரண்டு ஒரு பக்கமாக நின்று நீதி வழங்குவதைக் காண்கின்றோம்.
இவர்கள் அனைவரும் இன்று தெரிந்து கொள்ள வேண்டிய உபதேசத்தை கலித்தொகை என்றோ தயாரித்துக் கொடுத்திருக்கின்றது.




இரா. சம்பந்தன்

எழுதியவர் : (16-Jan-19, 6:07 am)
பார்வை : 39

மேலே