பழங்காலத் தமிழரும் பாலியல் கல்வியும்

தமிழர் தகவல் இதழில் ஜனவரி 5 2018 வெளியான எனது கட்டுரை

இன்று உலகம் முழுவதும் பாலியல் கல்வியை ஆதரிக்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. பல நாடுகள் பாடசாலைகளில் அந்தக் கல்வியை ஒரு பாடமாக ஏற்றுக் கொண்டு போதிக்கவும் செய்கின்றன. இவற்றுக் கெல்லாம் அவர்கள் கூறும் காரணம் பாலியல் பற்றிச் சிறு வயதிலேயே தெரிந்து கொள்வது பாலியல் தவறுகளில் இருந்து தங்களை மாணவர்கள் தற்காத்துக் கொள்ள உதவும் என்பதேயாகும்.
இது நியாயமானதும் முற்போக்கானதும் வரவேற்கத் தக்கதுமான மாற்றமாகும். சில குற்றமுள்ள மனங்கள் மதம் பண்பாடு சீரழிவு என்று குறுகுறுத்தாலும் அதில் நல்ல பலன்கள் தான் அதிகம் உண்டு. இந்த முன்னேற்றமான கோட்பாடு பற்றி பழைய தமிழர்கள் ஏதாவது அறிந்திருந்தார்களா? பாலியல் கல்வியை சரியானது என்று அவர்கள் ஒத்துக் கொண்டார்களா? ஆம் என்பதே விடையாகும்.
திருக்குறளில் காமத்துப் பாலும் கம்பராமாயணத்திலே உண்டாட்டு படலமும் கலிங்கத்துப் பரணியிலே திருக்கடை திறப்பும் சிலப்பதிகாரத்திலே இந்திரவிழாவும் சீவக சிந்தாமணியின் பல இலம்பகங்களும் எழுதிய பெரியோர்கள் இதைக் குழந்தைகளுக்குப் படிப்பித்து விடாதீர்கள் என்று எங்குமே சொல்லி வைக்கவில்லை. மாணவர்கள் படிக்க வேண்டும் என்றுதான் வள்ளுவர் காமத்துப் பாலை எழுதினார். மாணவர்கள் சுவைக்கத்தான் சயங்கொண்டான் கடைதிறப்புப் பாடினான்.
உதாரணமாக உழவுத் தொழில் பற்றிப் பாட வந்த வள்ளுவன்
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடி விடும்



என்று ஒரு குறள் எழுதினான். ஓவ்வொரு நாளும் தன் நிலத்தைச் சென்று பார்த்து அதன் விளைச்சலுக்கு வேண்டியவற்றை ஒரு உழவன் செய்யாது இருப்பானானால் அந்த நிலம் கணவன் வந்து வேண்டியதைச் செய்து கொடுத்துப் பராமரிக்காத மனைவி போல அவனோடு ஊடி போகமற்றுப் போய்விடும் என்பது இதன் பொருளாகும்.
இந்தக் குறளிலே நிலம் புலந்து இல்லாள்போல் சினந்து விடும் என்று வள்ளுவர் எழுதியிருந்தால் மாணவர்களுக்கு தயக்கமின்றிப் போதித்து விட முடியும். ஆனால் நிலம் புலந்து இல்லாளின் ஊடி விடும் என்று ஊடலை அல்லவா கொண்டு வந்து விட்டான் வள்ளுவன்.
ஒரு மனைவிக்கு புற உதவிகள் போல சில அக உதவிகளும் ஒரு கணவன் செய்ய வேண்டும். அது காமம் சம்மந்தப்பட்டது. அதிலே தவறுகள் ஏற்படும் போது மனைவியிடம் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டும் என்ற பாலியல் விடயங்களை உழவிலே கொண்டுவந்து வள்ளுவன் உதாரணம் காட்டுகின்றான் என்றால் அதனால் குற்றமில்லை. நீ படிப்பித்து விடு என்று தானே பொருள்.
ஆதனால் பாலியல் கல்வியை; திருக்குறள் ஒரு குற்றமாகக் கருதவில்லை. காமம் வெகுளி மயக்கம் என மூன்றின் நாமம் கெடக் கெடும் நோய் என்று காமத்தைக் கண்டித்த குறள் காமம் பற்றிய அறிவை எங்கும் கண்டிக்கவில்லை. அதனால் தான் புலவி நுணுக்கம் இன்றும் இருக்கின்றது மாணவர்களுக்காக.
சங்க இலக்கியங்களிலே சொல்லப்படாத காமத்தையா இன்றைய பாலியல் கல்வியில் மாணவர்கள் தெரிந்து கொள்ளப் போகின்றார்கள். தொல்காப்பியம் அகத்திணையிலே கற்பு களவு என்று காமத்தைப் பிரித்து இலக்கணம் செய்யவில்லையா? அதை வயது வந்தவர்கள் மட்டும் தான் படிக்க வேண்டும் என்று ஏதாவது விதி எழுதி வைத்ததா இல்லையே. இனக் சேர்க்கையைப் புணர்ச்சி என்று நாகரீகத் தமிழால் அறிவித்தான் பழங்காலத் தமிழன்.
கண்ணகியும் கோவலனும் திருமணம் செய்து கொண்டு முதல் இரவிலே எப்படிக் கிடந்தார்கள் என்பதைப் பாடும் போது
தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்
காமர் மனைவி எனக் கைகலந்து நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் – மண்மேல்
நிலையாமை கண்டவர் போல் நின்று.

( சிலப்பதிகாரம் – மனையறம் படுத்த காதை )

என்று பாடினார் இளங்கோவடிகள். நாளைக்கு இந்த உலகம் இருக்காது. அதனால் அனுபவிக்க வேண்டியதை எல்லாம் இன்றே அனுபவித்து முடித்து விடுவோம் என்ற நினைவோடு ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு கோபம் கொண்ட பாம்புகள் இரண்டு பின்னிப் பிணந்து கொண்டு ஒன்றையொன்று தாக்குவது போல கிடந்தார்கள் என்பது இதன் பொருளாகும். இதை எழுதியவன் சமணத் துறவியல்லவா? துறவிக்கு ஏன் இந்த வேலை. அப்படியல்ல. மாணவர்களுக்கு இதையும் கற்றுக் கொடு என்கின்றது சிலப்பதிகாரம்.

கம்பராமாயணத்திலே ஒரு பாடல். பெண்ணொருத்தி தன் காதலனை இறுகத் தழுவிக் கொண்டு அவன் முதுகை எட்டிப் பார்த்தாள். தான் இறுகத் அணைத்ததால் தன் மார்பகங்கள் காதலனின் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு முதுகு வழியாக வெளியே வந்திருக்குமோ என்று முதுகைப் பார்த்ததாக கம்பன் எழுதினான். இதை மாணவர்களுக்கக் காட்டாமல் ஒளித்து வையுங்கள் என்று கம்பன் எழுதி வைக்கவில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கட்டும் என்றே கம்பனும் நினைத்தான்.

கொலை உரு அமைந்து எனக் கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள் கணவன் புல்குவாள்
சிலை உரு அழிதரச் செறிந்த மார்பில் தன்
முலை உருவின என முதுகை நோக்கினாள்.

( கம்பராமாயணம் – உண்டாட்டு படலம் )

எனவே எம் மூதாதையர் காட்டுமிராண்டிகள் அல்ல. அவர்கள் நாகரிகத்தின் உச்சம் எது என்று கண்டவர்கள். பாலியல் கல்வியை சலனமில்லாமல் ஆதரித்தவர்கள். அதனால் தான் அவர்களின் நூல்கள் எல்லாம் எதையும் மறைத்து வைக்காமல் வெளிப்படையாகப் பேசுகின்றன. எமது முன்னோரின் சிந்தனை புனிதமானது. முற்போக்கானது. இன்றைய உலகம் சிந்திப்பதை அன்றே சிந்தித்து நடைமுறைப் படுத்தியவர்கள்.

சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் விரிவாக பாலியல் விவகாரங்களை எடுத்துக் கூறினாலும் கடுமையான ஒழுக்க நெறிகளையும் அதற்குப் போதிக்கத் தவறவில்லை. அதனால் எண்ணிறந்த ஒழுக்க நூல்கள் தமிழில் தோன்றி நீதி நூல்கள் என்ற பெயரோடு வேலிகளாகக் குற்றங்களில் இருந்து எம்மைக் காத்து நிற்கின்றன.

நந்தவனம்
ஜனவரி 15, 2018
இரா. சம்பந்தன்

எழுதியவர் : (17-Jan-19, 10:22 am)
பார்வை : 36

மேலே