தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க்கு இல் - நாலடியார் 69

நேரிசை வெண்பா

உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். 69

- சினமின்மை, நாலடியார்

பொருளுரை:

தாம் முன்பு உதவி செய்ததை நினையாமல் பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும் அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வதல்லாமல் அவர் குற்றங் காரணமாக அவருக்குத் தீங்கு செய்ய முயலுதல் உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.

கருத்து:

தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலும் மேலும் நன்மை செய்வதல்லாமல், தீங்கு செய்ய முயலார் சான்றோர்.

விளக்கம்:

பிறர்பால் உண்டாகும் தீய நினைவை அவருக்கு நன்மை செய்து செய்தே மாற்றுதல் இயலும் என்பதனாலும், தமக்கும் அம் மனப்பான்மை மேன்மேலும் ஞான விளக்கத்துக்கு இடஞ் செய்யும் என்பதனாலும் இங்ஙனங் கூறப்பட்டது. உயர்வை நன்கு புலப்படுத்தும் பொருட்டு, ‘வான் தோய் குடி' என்றார்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jan-19, 10:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே