மழலை பாடல்

================
பூ சிரிக்கும் புன்சிரிப்பை நீ சிரிப்பாயே
பூங்குயிலின் குரலெடுத்து நீ இசைப்பாயே
வான் நிலவின் ஒளி மழையை நீ பொழிவாயே
வானவில்லின் அழகை எல்லாம் நீ தருவாயே..
**
பனித்துளிப் பட்டு கருகிய மலர்கள்
உன்முகம் தேடும் அதிகாலை
மலரிதழ் அமரும் வண்டுகள் யாவும்
உன்னிடம் காணும் மலர்ச்சோலை
நீ நிலவது நடக்கும் செவ்வானம்
என்றும் உன்னுடன் தவழும் என் மேகம்
இந்த வையகம் வாழும் வரையினில் எனக்கு
தீரா திருக்கும் உன் தாகம்,
**
மழலை தமிழின் கவிதை உன்னை
மனதில் சுமப்பேன் அழகாக
அழகுகள் பூத்த பட்டாம் பூச்சி
சிறகுகள் கேட்பேன் உனக்காக
நீ மார்கழி மாத வெண்பனி
உந்தன் மழையில் நனைவது என் பணி
ஒரு காவியம் பாடும் கருவென வந்தே
கண்களில் நிறைந்தாய் கண்மணியே..
***மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Jan-19, 2:36 am)
Tanglish : mazhalai paadal
பார்வை : 87

மேலே