ஒரு வரவேற்பு------------------------------கலாச்சாரம்,------ சமூகம்

சுந்தர ராமசாமியிடமிருந்து தொற்றிக்கொண்ட கெட்ட வழக்கங்களில் ஒன்று நடக்கச்செல்லும்போது நின்று நின்று சுவரொட்டிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவது. நம்மை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்கள். அதனாலென்ன? சுவரொட்டிகளைப்போல உள்ளூர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆவணங்கள் வேறில்லை. அந்தந்த ஊரில் என்னென்ன சாதிகள், என்னென்ன சாதிச்சண்டைகள், சாதிக்கு எவர் தலைவர், எந்த நடிகர் செல்வாக்கானவர், எந்த அம்மன் துடியானது என எத்தனை செய்திகள்!.

நாகர்கோயில் கடந்தால் தெரியும் சுவரொட்டிகளில் பெரும்பான்மை உள்ளூர் புதுப்பணக்காரப் பிரமுகர்கள் தங்களுக்குத் தாங்களே அடித்து ஒட்டிக்கொள்பவை. காதுகுத்து, கடாவெட்டு வைபவங்கள் மற்றும் திருமணங்கள். செம்பவுடர் அடித்த மணமகள்கள் மணமகனுடன் நின்று போஸ் கொடுக்கும் பிரம்மாண்டமான தட்டிகளுக்கு காலடியில் தலைகளின் வரிசை. அப்பத்தாக்கள், ஆத்தாக்கள், கறுப்புக் கண்ணாடிபோட்ட கைக்குழந்தைகள். நண்பனுக்குத் திருமண வாழ்த்து சொல்லும் ஒட்டடைக்குச்சிக் கிராப் அடித்து காதுக்குமேல் மயிரை வரண்டிவிட்டு செல்போனில் சிரிக்கும் படிப்புக்களை அற்ற பயல்கள். உடலை தெருவுக்கும் உயிரை நடிகர்களுக்கும் அளித்துவிட்ட காளைகள்.

இன்னொரு பக்கம் அழைக்கிறார் அண்ணன், வாழ்த்த வயதில்லை சுவரொட்டிகள். நடுவே ஸ்டாலின் முழிபிதுங்கி தென்படுவார். எடப்பாடியின் ‘ஒரு தப்பு நடந்துபோச்சுங்’ பாணி சிரிப்பு. பன்னீர்செல்வத்தின் ‘இருக்கட்டும் இப்ப என்ன?’ என்னும் நமுட்டுச் சிரிப்பு. ‘தொ’ திருமங்கலத்திலும் ‘ன்’ அரசரடியிலும் இருக்கும்படி எழுதப்பட்ட தொல்.திருமாவளவன் பெயர். அனைத்துக்கும் மீதாகப் பெருகியிருக்கும் சினிமாப் போஸ்டர்கள். அத்தனை படங்களும் மாபெரும் வெற்றியடையும் களம் சுவரொட்டிப்பரப்பன்றி வேறென்ன?

நான் அவற்றில் இருந்து தமிழகத்தின் சாதிச்சமூக அமைப்பின் எழுச்சி வீழ்ச்சிகளை புரிந்துகொள்ள முயல்வேன். பத்தாண்டுகளுக்கு முன்புவரை ‘ஆண்ட இனமே’ என வெத்திலைச்செட்டியார்கள் தங்களை அழைத்துக்கொண்டதில்லை. தமிழகப் பூக்கட்டிப் பண்டாரம் பேரவை மாநில அளவில் அழைப்புவிடுக்கும் சுவரொட்டிகளை சமீபமாகவே பார்க்கிறேன். புதியபுதிய சாமிகள் சாலையோரம் பிளெக்ஸ்போர்ட் மரியாதை பெறுகின்றன. நெடும்பட்டி நின்றசீர் மாடசாமி அரிவாள் மறந்து அருள்கைகாட்டி மந்தகாசம் செய்கிறார். முழி பழையதுதான். டாஸ்மாக் அருகே அவர் நின்றிருப்பதில்கூட ஒரு பொருத்தம். எடுத்துக்கட்டி முத்தாலம்மன் சமையலறையின் சோலிமுடிந்து கைதுடைக்காமல் வந்து அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறாள்.

நாகர்கோயிலின் சுவரொட்டிகளுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. இங்கே உள்ளூர் மிகமுக்கியபிரமுகர்கள் பொதுவாக அலட்டிக்கொள்வதில்லை – என் பெயர் கொண்ட ஒரு டாக்டர் மட்டும் விதிவிலக்கு. பணக்காரர்கள் போஸ்டர் அடித்துக்கொள்ளக்கூடாது என்று கற்பித்ததே குமரிமாவட்டத்திற்கு கிறிஸ்தவம் அளித்த பெருங்கொடை. பதிலுக்கு ஆவிக்குரிய எழுப்புதல்கள், முழு இரவு உபவாசங்கள், பில்லிசூனிய ஒழிப்புகள். கோட்டும் டையும் கட்டி கையில் பைபிளுடன் கைசுட்டி பேயை ஓட ஓடத் துரத்தும் நற்செய்தியாளர்கள். [எனக்கு பொறத்தாலே போ ப்ஸாஸே!!” முக்காடு போட்ட செய்தியாளினிகள்.

குமரிமாவட்டம் மொட்டைக்கடிதாசிகளின் சொற்கம் என இங்கே வேலைபார்த்தவர்களுக்கு தெரியும். “நல்ல ஊருதான். ஆனால் அங்கிண பத்துவருசம் வேலைபாத்தா புரோஸ்டிரேட்ல பிரச்சினை வந்திருதுங்க. ஏன்னேன் தெரியல்ல” என்று இங்கே துணைஆட்சியராக இருந்த கௌரிஷங்கர் ஒருமுறை சொன்னார். மொட்டைக்கடுதாசிகளின் பரிணாமம் மொட்டைச் சுவரொட்டி. ஊழலை அறிவிப்பவை. கள்ளத்தொடர்பு தெரியும் என சொல்லிக்கொள்பவை. எச்சரிப்பவை, எள்ளிநகையாடுபவை.

குமரிமாவட்டம் ஒரு மாபெரும் முதியோர்விடுதி. இங்கே இளைஞர்கள் பிளஸ்டூ முடித்ததும் ஊரைவிட்டுச் சென்று ஓணம் தீபாவளி கிறிஸ்துமஸுக்கு வந்துசெல்வார்கள். எஞ்சீனியரிங் வரை மிஞ்சிப்போனால். அரியர்ஸ் இருப்பவர்களையே இங்கே பொதுவாக இளவட்டங்கள் என்கிறோம். மற்றபடி கிழடுகள் வீடுகட்டி பாக்கெட் மாவு வாங்கி தோசை ஊற்றி தின்று சீரியல் பார்த்தோ, ஜெபக்கூட்டங்களுக்குச் சென்றோ வாழ்க்கையை கடப்பார்கள். ஆகவே எங்கு பார்த்தாலும் ‘சர்க்கரை நோயா அச்சம்வேண்டாம்!” “இயற்கை ஓமியோபதி!” [இரண்டையும் கலக்கிறார்களாமாம்] ‘வாழும்கலை’ ’மனசே ஜாலியா இரு” சுவரொட்டிகள் நிறைந்திருக்கும். காலையில் நடைசெல்லும் ஓய்வுபெற்றபின்னரும் மைபூசிய மீசைகொண்ட மாமாக்கள் “இப்ப கொஞ்சம் வெந்தயத்த எடுத்து கொஞ்சம்போல நல்லெண்ண சேத்து அப்டியே பத்துநிமிசம்…” எனபேசிக்கொண்டே செல்வார்கள்.

இன்று காலைநடை செல்லும்போது இந்த சுவரொட்டியை பார்த்தேன். ஆச்சரியப்பட்டு நின்று கவனித்தேன். பாரதிய வித்யார்த்தி பரிஷத் நடத்தும் விழா. நல்ல விஷயம்தான். ஒவ்வொரு ஆண்டும் குமரிமாவட்டத்திற்கு ஆயிரம்பேர்வரை வடகிழக்கு மாணவர்கள் வந்து பொறியியல், மருத்துவம் படிக்கிறார்கள். எண்பதுகளில் கேரளத்தில் தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி இருக்கவில்லை. அப்போது இங்கே மாட்டுத்தொழுவமெல்லாம் பொறியியல் கல்லூரிகளாக மாறின. இன்று நான்கு மருத்துவக் கல்லூரிகளும் 27 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. அவற்றில் பத்து கல்லூரிகள் உண்மையிலேயே சிறந்தவை என்கிறார்கள்.

ஒருகாலத்தில் கேரள மாணவர்கள் நிறைந்திருந்தார்கள். வாராவாரம் மோகன்லால் படம் வெளியாகும். பரோட்டாக் கடைகளில் பீஃப் வாங்க கூட்டம் அம்மும். “டா அது போத்தாண்டா” “போத்து நல்லது மோனே… அம்பது ரூபாய்க்கு அஞ்சுமணிக்கூர் தின்னாலோ”. மலையாளக்குரல்கள். அரைடிராயர் போட்ட தாடிவைத்த பையன்கள் சாலைகளில் மோகன்லால் போல குடைசாய்ந்து நடப்பார்கள். இப்போது அங்கேயே தனியார் கல்லூரிகள் வந்துவிட்டன. அந்த இடங்களுக்கு வடகிழக்கு மாணவர்களை அள்ளிவருகிறார்கள்.

வடகிழக்கு மாணவர்களுக்கு தென்னகம் உவப்பானது. பெங்களூர், ஹைதராபாத், சென்னை, கோவை என வந்துகொண்டே இருக்கிறார்கள். இங்கே அவர்கள்மேல் இனக்காழ்ப்பும் ஏளனமும் இல்லை. [பயக்க நல்ல செவெப்பு கேட்டியா?] ஆப்ரிக்க மாணவர்களால்தான் தாக்குப்பிடிக்க முடியவில்லை. டெல்லியில் வடகிழக்கு மாணவர்கள் ஏளனம் செய்யப்படுவதும் மாணவிகள் பாலியல்சீண்டல்களுக்கு ஆளாவதும் மிகச்சாதாரணம். காரணம் டெல்லியின் பெரும்பாலான மஸாஜ் நிலையங்களில் நேபாளப் பெண்கள் பணியாற்றுகிறார்கள். டெல்லியின் பீடாவாயர்களுக்கு அவர்களுக்கும் வடகிழக்கிலிருந்து வந்து முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சிசெய்யும் மாணவிக்கும் வேறுபாடு தெரிவதில்லை. அவர்களில் சிலருக்கு வடகிழக்கிலிருந்து வரும் பெண் யார் பையன் யார் என்பது தெரியாது. பீடாவாயர்கள் டெல்லியின் அரசியல்கட்சிகளின் அடித்தளத் தொண்டர்களும்கூட என்பதனால் அவர்கள் மேல் அங்குள்ள போலீஸ் நடவடிக்கை எடுப்பதில்லை.

நான் வடகிழக்கு சென்றபோது சிரபுஞ்சியில் ஒருவர் இதயநோய் வந்த தன் அம்மாவை ரயிலில் சென்னைக்கே கூட்டிவந்ததாக சொன்னார். நான்குநாள் ஆயிற்று ரயில் வந்துசேர. அருகே இருக்கும் டெல்லி அவருக்கு தேவையில்லை. காரணம் மக்கள் அன்பானவர்கள். டெல்லியில் நாகரீகமான எவரையும் பார்க்கநேரிட்டதில்லை என்று அவர் சொன்னார். டெல்லியில் அதெல்லாம் கட்டுப்படியாகாதுபோல என நினைத்துக்கொண்டேன். ஆனால் வடகிழக்குப் பையன்களுக்கு தமிழகத்திலேயேகூட நாகர்கோயில் மேலும் உகந்தது. முதன்மையாக இங்கே நல்ல பீஃப் சுக்கா கிடைக்கும். இரண்டாவதாக இங்குள்ள பச்சைச்சூழல் அவர்களுக்கு சொந்த ஊரை காட்டும். கடைசியாக இங்கே ஆட்டோ ஓட்டுநர் உட்பட எல்லாருமே கொஞ்சம் ஆங்கிலம் பேசுவோம். அவர்களைப்போல கொஞ்சம் மூக்கொலி கலந்து.

வடகிழக்கு மாணவர்களுக்கு உள்ளூரில் ஓர் அமைப்பு உள்ளூர் பிரமுகர்களை கூட்டி வந்து வரவேற்புவிழா நடத்துவது மிகமிகச்சிறந்த ஒரு நிகழ்வு. அவர்களுக்கு புதிய ஊரைப்பற்றிய மிரட்சி விலகும். இங்கே தங்களுக்கு ஆளிருக்கிறது என்னும் உணர்வு உருவாகும். தேசம் என்னும் உணர்வு அவர்களுக்கு உருவாகும். அதைச் செய்வது வித்யார்த்தி பரிஷத் என்பதில் விமர்சனமிருந்தால் கம்யூனிஸ்டுகளும் அதை செய்யலாம். நாம் தமிழர்கள்கூட வடகிழக்கின் அத்தனை மொழிகளும் தமிழிலிருந்தே வந்தன என்று அவர்களுக்குச் சொல்லி புரியவைக்கலாம்.



ஜெ
மின்னஞ்சல்
ஜனவரி 20, 2019

எழுதியவர் : (20-Jan-19, 5:44 am)
பார்வை : 55

மேலே