மனம் மகிழ அருள்வான்

அத்தி பூத்தது போலொரு
இரயில் பயணம்
ஆற்றோரம் வீற்றிருக்கும்
ஆலமர பிள்ளையாராய்
இருக்கையில் அமர்ந்திருக்க

பழி சுமந்தவன்
பாவத்திற்கு அஞ்சி
பயந்து ஓடுவதுபோல் இரயில்,
பார்த்து வழிவிடும்
பாமரமக்கள் எதிர் திசையில்

வலப்பக்க அருவி—குதித்து
விளையாடி மகிழ்வதும்,
ஆறாய் ஒன்றுபட்டு
அசைந்து, நடந்து இடப்பக்கம்
கையசைத்து போவதும்

வானையும், மண்ணையும்
உறவாக்கும் மலைகள் மீது
மோகம் கொள்ளும் மேகம்
மழையைப் பொழிந்து
மறுபடியும் உறவை கூறும்

இயற்கையை விஞ்சிய
இறையுண்டோ?
இயற்கையை ஆராதியுங்கள்
மாயவன் வருவான்
மனம் மகிழ அருள்வான்

எழுதியவர் : கோ. கணபதி. (20-Jan-19, 11:18 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 62

மேலே