கெட்ட பழக்கம் சிறிதும் படியாமல் நல்ல வழக்கம் வளர் - பழக்கம், தருமதீபிகை 33

நேரிசை வெண்பா

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்,பின்
ஒட்டித் தொடரும் உறுதியால் - கெட்ட
பழக்கம் சிறிதும் படியாமல் நல்ல
வழக்கம் வளர வளர். 33

- பழக்கம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இளமையில் பழகிய பழக்கம் இறுதி வரையும் உறுதியாகத் தொடருமாதலால் முதலிலேயே தீயதை அணுகாமல் நல்லதை நாடி வளர்த்துக் கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பது இந்நாட்டில் வழங்கி வரும் பழமொழி. மனிதனது நிலையையும் பழக்கத்தின் இயல்பையும் இது எவ்வளவு அழகாக உணர்த்தி நிற்கிறது!

பிள்ளைப் பருவத்தில் நல்ல பழக்கங்களைப் பழகிக் கொள்ள வேண்டும்; இல்லையானால் சாகும் வரையும் தொல்லையாகும்; எவ்வழியும் தொட்டு வந்த கெட்ட பழக்கம் விட்டொழியாது என்றும், இதனை உய்த்துணர்ந்து உயர் நலம் தழுவி உய்தி பெறுக என்றும் கூறப்படுகிறது.

ஒரு நாள் பழகியது உள்ளத்தில் படிந்து உடல் அழிந்தாலும் தான் அழியாமல் உயிரைத் தொடர்ந்து நிற்குமாகலான் நல்ல பழக்கத்தை இளமையிலேயே நலமுற ஆராய்ந்து கொள்ள வேண்டும். படியாமல் என்றது இருபொருள் பட நின்றது. தீயதை நீ பழகிக்கொள்ளாமலும், உன்னிடம் அது படிந்து விழாமலும் பாதுகாத்து வருக எனப்பட்டது.

கொஞ்சமும் தீய பழக்கத்தைப் பழகாது நெஞ்சம் பேணுக என்பதற்காக ’சிறிதும்’ என்றார். கெட்டது அணுவளவே ஆயினும் எட்டிவிதைபோல் இன்னல்களை விளைக்கும்; அது எவ்வழியும் யாதும் நண்ணாதபடி கண்ணுான்றி நோக்கிக் களைந்து போக்கி எண்ணுான்றி அருள்க என்பதாம்.

கெட்ட பழக்கம் உயிரைக் கெடுத்துவிடுமாதலால் அதனை யாண்டும் ஒட்டாது ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-19, 6:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

சிறந்த கட்டுரைகள்

மேலே