தீயபழக்கம் தினையளவே ஆனாலும் தீயனாக்கிப் புலையாடச் செய்யும் - பழக்கம், தருமதீபிகை 34

நேரிசை வெண்பா

தீய பழக்கம் தினையளவே ஆனாலும்
நேய முடன்சிலநாள் நீளவிடின் - மாய
மலையாய் வளர்ந்து வலுதீய னாக்கிப்
புலையாடச் செய்யும் புகுந்து. 34

- பழக்கம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தினை அளவு தீயபழக்கமும் நாளடைவில் மலையளவாய்ப் பெருகி நல்ல மனிதனையும் பொல்லாத கொடியனாய்ப் புலைப்படுத்திவிடும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

வலுதீயன் - எவ்வழியும் திருந்தாத திண்ணிய தீவினையாளன்.

தினை என்பது தானிய வகையுள் ஒன்று. நுண்ணிய உருவினது. கடுகு, அணு என்பன போலச் சிறிய அளவுக்கு ஒர் எடுத்துக்காட்டாக ஈண்டு அது இசைந்து நின்றது.

காலமும் பயிற்சியும் சாலவும் சிறிதே யாயினும் தீயபழக்கம் மாய மலையாய் வளர்ந்து தூய உயிர்களைத் தீயனவாக மாற்றி மாயச் செய்யும். எனவே அதன் தீமையும் திண்மையும் நன்கு புலனாம்.

நொடிப்பொழுது தொட்ட சிறு தீய பழக்கமும் பின்பு யாதும் விடுப்பரியதாய் மனிதனை வடுப்படுத்திக் குடிப்பழி செய்து வருதலைப் படிப்படியாக உலகம் பார்த்து வருகின்றது.

தலைமையான நிலைமை மாறி ஈனமாய் இழிந்துபடும்படி மோனமாய் அது இயற்றிவிடும் என்றதனால் புலையாடச் செய்யும் என்றது. புகுந்து என்றது வலிந்து இடங்கொண்டு அஃது அடியூன்றி நிற்கும் அடல் தோன்ற நின்றது. எனவே தீய பழக்கத்தை உள்ளே புகவிடாதே எனப்படுகிறது.

பழக்கத்தின் வளர்ச்சியும் வன்மையும் வியத்தகு நிலையினவாதலால் தீயதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்; எறியாமல் ஏமாந்து இருப்பின் அது வலிதாய் ஓங்கி உன்னை நிலைதிரியச் செய்து நீசன் ஆக்கி முடிவில் எரிவாய் நரகில் கொடிதாய்த் தள்ளிவிடும்.

எள்ளள வேனும் இழிபழக்கம் ஈனமெல்லாம்
உள்ளள வீனும் உணர். - அரும்பொருளமுதம்

என்பதை உணர்ந்து உறுதி நலம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-19, 5:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

சிறந்த கட்டுரைகள்

மேலே