தஞ்சை பெரிய கோயில்

காலை எழுந்தது எனக்குள் இனம் புரியா உற்சாகம்
என் கால்களுக்கே கால் முளைத்தால் போலும் வேகம்
கிஞ்சித்தும் தோன்றவில்லை களைப்பு பசி தாகம்
ஏனெனில் பெரிய கோயில் மேல் அத்தனை மோகம்

இறங்கியதும் கண்ணுக்கு தெரிந்தது தட்சிணமேரு
தமிழர் கலைக்கு பல்லாண்டு கூறும் கற்பகத்தாரு
அண்மைய சென்றது இதயத்துடிப்பில் ஒரு தாறுமாறு
அடைந்திருந்தே புளங்காகிதமோ சொல்வதற்கில்லை; அது வேறு .

முதலில் தாண்டியது கேரளாந்தகப் பெருவாயில் -முதலைப்
பார்த்ததுமே கையை வைத்துவிட்டேன் என் வாயில்
இதற்குமுன் நான் விக்கித்து நின்றது திருச்சீரலைவாயில்
தலைசுற்ற வைத்து விட்டதென்னை தஞ்சை பெருங்கோயில்

ஒவ்வொரு கதை கதை சொல்லும் பலநூறு சுதை சிற்பம்
அச்சிற்பகலைக்கு முன் என்னறிவு எறும்பினும் அற்பம்
அற்பம்மா.. இல்லை இல்லை அதை விடவும் சொற்பம்
முழுவதையும் நான் செரித்துமுடிக்க புகவேண்டும் இன்னொரு கர்ப்பம்.



பின்னர் இராசராச பெருவாயிலை கைஎடுத்து கும்பிட்டபடி கடந்தேன்..
முன்னிற்கும் நந்தியை நோக்கியபடி உள்ளே நடந்தேன் - வினாடிக்கு
வினாடி உள்ளும் என் உவகைக்கு நிகர் கோடி கோடி குடந்தேன்
என் முன்னோர்களின் கண்காணா திறமையை எண்ணி வாய் பிளந்தேன்


அதுவா நந்தி ?
இல்லை இல்லை நிஜ நந்தியே அதற்கு பிந்தி
இது அதற்கும் முந்தி
என் முன்னோரின் கட்டிடக்கலையாட்சி இப்போதைய நிபுணர்களைச் சிரிக்க வைக்கும் சந்தி
மனம் அப்போதே அடித்தது ராசராசனுக்கு நன்றி எனும் தந்தி

மலைப்பாறையிலிருந்து நந்தியைச் செதுக்கினார்களாம்
அண்டப்புழுகு..
மலையையே பெயர்த்தல்லவா நந்தி செதுக்கி இருக்க வேண்டும் ?
இதை செதுக்க மட்டுமே பட்டிருப்பார்கள் பெரும்பாடுதான்
அம்மாடுக்கு என்னுருவம் கால்மாடுதான்

நந்திக்கு முன் இருந்தது உலோகத்தாலான கொடிமரம் - அந்தக்
கொடிமரம் செய்தவனுக்கே வீசவேண்டும் கோடி சாமரம்
இப்போதுள்ள சிற்பகலை இதற்கு ஒப்புவைப்பின் வெறும் பாமரம்
கல் போன்ற நெஞ்சையும் அது ஆகிவிடும் பூமரம்

அங்கிருந்து பார்க்கையிலேயே பெருவுடையார் தெரிந்தார்
கைக்கூப்பியதும் என்மனக்கண்ணில் புன்னகை சொரிந்தார்
உள்சென்ற சமயம் குருக்கள் உடையாருக்கு சிறப்பு அர்ச்சனை புரிந்தார்
மேலிருந்து கீழ் நோட்டம் விட்டு நாங்கள் மலைநாட்டவர் என்று அறிந்தார்

இதோ...
என் கண்கள் பனிக்கின்றன -
வார்த்தைகள் தடுமாறி எத்தனிக்கின்றன
எண்ணங்கள் பின்னோக்கி பயணிக்கின்றன
என்னை என் சிவத்தோடு பிணைக்கின்றன

கொன்றை அரவு மதியொடு நதி அணி சடையார்
தீயும் மானும் மழுவோடு சூலமேந்திய விடையார்
கண்டத்தில் நஞ்சணிந்து அரிமாத்தோல் போர்த்திய இடையார்
அங்கயர்க்கண்ணி அகிலாண்ட நாயகி அமர் தொடையார்
வானசுரர் தொழ தீயசுரர் அழ ஆர்ப்பரிக்கும் பூதப் படையார்
அன்பர் வேண்டின் அளவிலா வரமருளும் வரம்பிலா கொடையார்
அனுதினமும் பணிகின்ற பத்தரை தவிர்ந்து வேறோரிடம் அடையார்
ஐந்து சபை, அட்ட வீரட்டம், பஞ்சபூதத் தலங்களும் உடையார்
இங்கு பிரகதீஸ்வரராய் காட்சி தரும் தஞ்சை பெருவுடையார்
இவரைக் காணும் எவரும் இனி எப்போதும் பிறவி வேறு அடையார்
காணாதவரோ வடிகட்டின மடையருக்கும் கடையார்

தொழுது முடிந்து வெளிவந்ததும் கண்டது கோட்டோவிய சாயல்கள்
நாயக்கர் காலத்தில் எழும்பியுள்ளது ஆனைமுகனுக்கும் அறுமுகனுக்கும் கோயில்கள்
அவற்றுக்கும் அங்கே தனி தனி வாயில்கள்


கோவிலுக்குப் பின்பக்கம் சிலையாய் கருவூர் சித்தர்
பிரகதீஸ்வரரை மிதித்தே பிரதிஷ்ட்டித்த எத்தர்
ராசராசனை பொருத்தவரையில் அவனுக்கு அவர் அத்தர்
வரம்பிலா சித்தி பல கொண்ட சிவத்துக்கு இணையான சீவன் முத்தர்

நவக்கிரக சன்னிதி சிலையுடன் இருப்பதுதான் பொதுவானது
லிங்கங்களே நவகிரகமாய் தஞ்சையில் காண்பது முற்றிலும் புதிதானது
மொத்தத்தில் எம் ராசராசன் எவ்வளவு சிவக்கிறுக்கன் என்பது ருசுவானது
ஆகா அந்தக் கணம் நான் பெற்ற இன்பம் ஒரு தனி ருசியானது

பிறகு வந்தோம்,
நெடுநேரம் உபசரித்தாள்
தஞ்சையின் பேரரசி புவனமுழுதுடையாள்
சோழ மண்டலம் முழுதும் ஆளும் வெண்கொற்றக் குடையாள்
குரலில் தேனடையாள்
ஒயிலில் அன்ன நடையாள்

பாட வைத்தாள் எங்களை அபிராமி அந்தாதி
பெற்ற இன்பம் , பெருமகிழ்ச்சி இத்யாதி இத்யாதி
பரமன் போலல்ல ; அவள் புன்னகை சிந்தாதீ
என்வரையில் உலகுக்கு இவளே அந்தம் ஆதி

ஐயரிடம் வழிகேட்டு சென்று கண்டோம் வாராகி
அவளை நினைத்தாலே நினைத்தவை எல்லாம் முடியும் சீராகி
பிரச்சினைகளும் தடங்கல்களும் ஆகும் வெந்து நீறாகி
தஞ்சை அவள் கருணை கரைபுரண்டு ஓடுகிறது ஆறாகி

கோயிலை சுற்றி முடித்தோம்
வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தோம்

கோயில் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தேன்..
முற்றிலுமாய் எனை மறந்து கண்களில் நீர் வார்த்தேன்
வாயெடுக்க வார்த்தையின்றி உடல் வேர்த்தேன்
என் பல்லாண்டு கனவை ஒரு பகலில் கண்டு தீர்த்தேன்





ரவீந்திரன் முத்து கிருஷ்ணன் தேவர்

எழுதியவர் : (21-Jan-19, 8:24 pm)
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே