நல்லாரை நாடி நயந்து நயமிலாப் பொல்லாரை ஒழிக புறம் - பழக்கம், தருமதீபிகை 35

நேரிசை வெண்பா

சார்ந்த இனத்தின் தகவே உயிரினங்கள்
நேர்ந்து திகழும் நிலைமையால் - ஓர்ந்துமுன்
நல்லாரை நாடி நயக்க; நயமிலாப்
பொல்லார் ஒழிக புறம். 35

- பழக்கம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தாம் மருவிய இனத்தின் இயல்புக்குத் தக்கபடியே உயிரினங்கள் உயர்வு தாழ்வுகளை அடைகின்றனவாதலான், பொல்லாரைப் புறம் ஒதுக்கி நல்லாரை நாடிக் கூடிக்கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதர் மாத்திரமேயன்றி மிருகங்களும் பறவைகளும் கூடத் தாம்சேர்ந்த இனத்தின்படியே செயல் நிலைகள் நேர்ந்து வருகின்றனவாதலால், உயிர் இனங்கள் என வந்தது. பன்றியோடு சேர்ந்தால் கன்றும் மலம் தின்னும்' என்னும் பழமொழி இந்நாட்டில் எங்கும் வழங்கி வருகின்றது. இதனால் ஈனச் சேர்க்கையால் விளையும் இழிநிலை தெளிவாம்.

சொல்லாலும் செயலாலும் பல்வகையிலும் ஆராய்ந்து நல்லவரைத் தெளிந்து தமராகத் தழுவிக் கொள்க என்பதை நல்லாரை நாடி நயக்க என்றது. நயத்தல் - நயந்து பேணுதல்.

பளிங்கு போலவே மனிதன் சார்ந்ததன் வண்ணமாய் நேர்ந்து விடுகின்றானாதலால் முதலிலேயே புன்மையாளரைப் புறம் ஒதுக்கி நன்மையாளரை அவன் ஓர்ந்து கொள்ள வேண்டும்
.
தருமகுண சீலரை நல்லார் என்றது.
தீவினையாளரைப் பொல்லார் என்றது.

நயம் இலா என்றது அவரது இயல்புணர வந்தது. நயம் - நன்மை, அறம்; பயன் உணர்ந்து பயில வேண்டும்,

அயலே யாதும் அணுகலாகாது என்பதைப் புறம் ஒழிக. என்றது.

தீவினை புரியும் பாவகாரிகளுடன் ஒரு சிறிது பழகினும் உள்ளம் பழுதாய் ஊனங்கள் விளையுமாகலான் அவ்வீனங்களை யாண்டும் அணுகாமல் அமைந்து ஒழுகவேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தீய ரொடுசிறிது சேரினும் தூயரும்
பேயராய் வீழ்வர் பிறழ்ந்து.

என்றதனால் பொல்லாச் சேர்க்கையின் புலைநிலை புலனாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-19, 7:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே