ஒரு புதிய வாசகர்-------------------------கடிதம்

அன்புள்ள ஜெ,

இது நான் அச்சிலே தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். எவ்வளவோ கடிதங்கள் கொந்தளிப்பு மன நிலையில் தங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்து மனதிலே எழுதி மனதிலே அழிந்து விடும் .கடந்த ஒரு வாரமாக நீங்கள் மட்டும் தான் என்னுடன் இருக்கிறீர்கள். காடு , வெள்ளை யானை ,இரவு ,கார் கடல் என உங்களது சொற்களே என் மீது மீண்டும் மீண்டும் அலையென அடித்து கொண்டிருக்கிறது .

நேற்றிரவு வெள்ளை யானை படித்து முடித்ததும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத மன நிலையை அடைந்தேன் .யாரிடமும் பேசத் தோன்றவில்லை. மனது கனத்து கிடந்தது .உலகத்தின் கடைகோடி மனிதர் வரை அனைவரையும் எனக்கு நெருக்கமானவர்களாய் உணரச் செய்தது. நான் ஏன் உங்களை தந்தை என நினைத்து கொள்கிறேன் .முக நூலில் உங்களோடு இருக்கும் படங்களை நண்பர்கள் பகிரும் பொழுது நான் அங்கு உங்கள் அருகில் இருக்க வேண்டும் என எண்ணிகொள்வேன். எந்த ஒரு நிகழ்வையும் அதன் நீண்ட நெடிய வரலாற்றில் வைத்து பார்க்கும் சிந்தனை முறையை தங்களிடம் இருந்து தான் பெற்றேன் .ஒவ்வொரு உன்னத கணங்களையும் நான் வாசிப்பில் அடையும் பொழுது தந்தை, ஞானத்தந்தை என்ற சித்திரத்தையே அடைவேன்.

2010 வாக்கில் ஆனந்த விகடனில் சாரு ஆன்லைன் பற்றி எழுதியிருக்க, அவருடைய இணயதள பக்கத்தை வாசித்து கொண்டிருந்த பொழுது உங்களை விமர்சித்து எழுதி உங்களது இணைய தள பக்கத்தை சுட்டியாக கொடுத்திருந்தார்.அதன் வழியாக தான் உங்களை வந்தடைந்தேன் .அப்போது வரை சுஜாதா வரை மட்டுமே வசித்திருந்தேன். திரு நெல்வேலி நிலப்பரப்பில் எழுதப்பட்ட வண்ண நிலவனின் நாவல்களை வாசிக்க தொடங்கிருந்தேன் .எனக்கு நாவல்களின் மையப்பொருளை விட திருநெல்வேலியின் சித்திரம் கிளர்ச்சி ஊட்டுவதாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக தான் தங்களின் கன்னியாகுமரி வாங்கினேன் ஆனால் என்னால் உள்ளே செல்ல இயலவில்லை .உண்மையில் அதுவரை நான் வாசித்தவற்றை கொண்டு நாவலை உள்வாங்க இயலவில்லை . அதன்பின் உங்களை பின் தொடரவில்லை .

கல்லுரி முடித்த பின் சென்னைக்கு பொருள் தேடி சென்ற வாழ்வில் புத்தகங்கள் ஆசுவாசப்டுத்திக்கொள்ள உதவின.அப்போது தான் அறம் சிறுகதைகள் பற்றி அறிந்தேன் .உங்களது இணைய தளத்தில் வாசிக்க தொடங்கினேன் . ஒவ்வொரு கதை படித்த பின்பும் அது தந்த மன எழுச்சியை இப்போதும் துல்லியமாக நினைவு கூற முடிகிறது .சோற்றுக்கணக்கு எனக்கு மிகவும் பிடித்தமான கதை . கெத்தேல் சாகிப்பின் கை எனக்கு அளித்த நம்பிக்கை பெரியது .ஒரு வகையில் எனது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வாழ்வின மீதான நம்பிக்கை குலையும் போதெல்லாம் அதனை முன்னெடுத்து செல்ல அறம் உதவியது .

அதன் பின் உங்கள தளத்திலே தான் கிடப்பேன் .உங்கள் அறிமுகத்திலே இருந்து தான் ஒவ்வொருவரையும் கண்டடைந்தேன் . அதில் கி.ரா தாத்தா முக்கியமானவர் . என் புறவாழ்வை ஒருவர் அப்படியே ஒருவர் பக்கத்தில் இருந்து பார்த்து எழுத முடியுமா அவர் எழுதியிருந்தார் . பாதி ஊர் தமிழ் பேசிக் கொண்டிருக்க நாங்கள் மட்டும் தெலுங்கு பேசிக் கொண்டிருக்கும் வரலாறு புரிந்தது .ஒவ்வொன்றும் மிகப்பெரிய திறப்பு .அதன் பின் சூழ்நிலைகள் காரணமாக அரசுப் போட்டித் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தபின் அந்த இலக்கிய மனம் இல்லாமல் போனது . வெறும் தகவல்கள் .மொகலாயர்கள் ,ஆங்கிலேயர்கள் சுதந்திரப்போரட்டம் ,காந்தி என எல்லாமே தகவல்கள் மட்டும். வெள்ளெயேன வெளியேறு -1942 இதில் அந்த வருடத்தை தாண்டி அந்த நிகழ்வுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை .உண்மையில் இந்நாட்களில் முற்றிலும் தகவல்கள் சேர்த்து வைக்கும் குலுவைகள் போன்று ஆனேன். முற்றிலும் இலக்கிய வாசிப்பை இழந்திருந்தேன்.வேலைக்கு சென்ற பின்பும் அந்த மனநிலையை மீட்டெக்கும் நம்பிக்கையைய இழந்திருந்தேன் .

ஒரு நன்னாளில் மீண்டும் உங்கள் தளம் ,மீண்டும் தீப்பிடித்து கொண்டது . சொற்கள் ,சொற்கள் தீராச் சொற்கள் நான் உங்களை பற்றி நினைக்கும்போதேல்லாம் திருச்செந்தூர் கடலை நினைத்து கொள்வேன் ,தீராதது முடிவிலாதது .

காடும் வெள்ளை யானையை யும் அடுத்த அடுத்து வாசித்ததில் கிரிதரனுக்கும் ஏய்டனுக்கும் சில ஒற்றுமைகளை கண்டுகொண்டேன் .இருவரும் லட்சியவாத வாழ்க்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையே தத்தளிப்பவர்கள் . ஒரு கட்டத்தில் இந்த நடைமுறை வாழ்க்கை அளிக்கும் குரூர யதார்த்ததில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள். லட்சிய வாழ்க்கை அவர்கள் வாசித்த குறுந்தொகையிலும் ஷெல்லியிலும் உண்டு . நடைமுறை வாழ்க்கை அவர்களோடு இருக்கும் குட்டப்பனிடமும் மாக்கன்ஸியிடம் உண்டு .அப்படியானால் இந்த தத்தளிப்பு தான் நிஜமான மனித வாழ்க்கை போல. மானுட உச்சங்களையும் மானுடக்கீழ்மைகளையும் மனித வாழ்வில் வைத்து விளையாடிக்கொண்டிருப்பது எது .

இந்த கேள்விகள் எல்லாம் துளைத்து கொண்டிருப்பதனால் தான் வெகு நாட்களாக மனதிலே எழுதி எழுதி அழித்துகொண்டே இருந்த கடிதத்தை இன்று எழுதிவிட்டேன்.

சின்ன வயதில் புதுப்பட்டி முத்தாரம்மன் கோவில் திருவிழா நடக்கும்போது முதல் நாள் முளைப்பாரி எடுத்து அம்மன் வேளார் வீட்டில் இருந்து வெளியே வரும்போது அம்மா பாருல பாருல என்று இடுப்பில் ஏற்றி வைத்துக் கொள்வாள் .தேய் வழக்காயினும் உங்களை நான் அப்படி தான் நினைத்துக் கொள்கிறேன்.

இன்னும் நிறைய எழுத வேண்டும்.என் கண்ணீரை, சிரிப்பை சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்

காசினி வேந்தர் பெருமாள்.

அன்புள்ள காசி,

உங்கள் கடிதம் நிறைவை அளித்தது. எழுதுபவன் தன்னை அணுகிவரும் காலடியோசைகளை செவிகூர்ந்து காத்திருப்பவன் என்ற எண்ணம் எனக்கு உண்டு. சின்னவயதில் நான் எதையேனும் வாசித்துக்கொண்டிருந்தால் அம்மா மெல்லிய காலடியோசையுடன் அருகே வருவாள். கையில் சாப்பிட ஏதேனும் இருக்கும். பின்னர் வாசிக்கையில் காலடியோசை கேட்டால் மனம் துள்ளும். வாசகர் ஒருவரின் வருகை அப்படிப்பட்டது.

மீண்டும் உற்சாகமாக வாசிக்கிறீர்கள் என அறிந்தது மகிழ்ச்சி. இந்த வாசிப்பு உங்களுடன் இறுதிவரை உடன்வரட்டும்.

நேரில் சந்திப்போம்.

ஜெ

எழுதியவர் : (23-Jan-19, 4:35 am)
பார்வை : 9

சிறந்த கட்டுரைகள்

மேலே