கண்ணீர் என் காதலி

வெண்தோல் மங்கையரை வெறியோடு காதலித்து
புன்னகை மாற்றானோடு புரிந்தால் பிரியும்
கலியுகக் கள்வர் காதலின் முன்
நிறமென்று ஏதுமின்றி நிரந்தரமாய் நின்றிருப்பாள்

உருவம் போதுமென்று உள்ளத்தைப் புறந்தள்ளும்
பருவம் அடைந்த பகைவர் காதல்முன்
உவமை உரைக்க உருவம் ஏதுமின்றி
உள்ளக் கனம்தீரும் உருவமாய் செரிந்திருப்பாள்

இன்று இவரிடத்தில் நாளை அவரிடத்தில்
சென்று சேர்வது இயல்பென்ற காதலின்றி
பிறந்த முதல்நிமிடம் என்னிடம் விளையாடி
இறந்த மறுநிமிடம் ஊரார்கண் விளைந்திருப்பாள்

சித்திரையில் சிரித்து ஐப்பசியில் ஐயமிடும்
சப்பரை மனிதர்களின் சரித்திர நட்பு
முன்னுரை ஏதுமின்றி முடிவுரை யுரைப்பதால்
நித்திரையிலும் நிலைத்தே நின்று விடுகிறாள்

துடைக்க யாருமில்லை துடிதுடித்து ஓடிவருவாள்
வெற்றியிலும் தோல்வியிலும் வேட்கையோடு உடனிருப்பாள்
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தும்
அழுதவுடன் முதலில் வருவாள் கண்ணீர் என் காதலி

எழுதியவர் : ஏ.தினபாகர் (24-Jan-19, 9:31 pm)
சேர்த்தது : தினபாகர்
Tanglish : kanneer en kathali
பார்வை : 2329

மேலே