விடையறிந்த நாளினில்

#விடையறிந்த நாளினில்..!

நெடுங்காலமாய் கீச்சொலிகள்
செவிக்கு மட்டுமென…!
ஒலிகளின் திசை
உணர்ந்தறிய இயலாத
சூனியமாய்…!

பார்வைக்குக் காட்சிகள்
புலப்படாத போதெல்லாமும்
பயத்தின் சாயல்
தழுவாமல் இருந்ததில்லை..!

என்னவாக இருக்கும்
இக்கீச்சொலியின்
பின்புலம்..?
கேள்விகளின்
அடுக்குப் படிமாணங்களில்
மனம் கனத்திருக்கும்
விடை என்றாவது கிடைக்காதாவென..!

ஆபத்துக்கான அறிகுறியா..?
இல்லை… மாயையா..?
மீண்டும்.. மீண்டுமாய்.. கேள்விகள்
கேள்விகள் மட்டுமே
மீளவியலாதபடி…!

விடுகதைக்கெல்லாம் விடையாய்
இருட்டினில் கூட
சில வெளிச்சக் கதவுகள்…

இருட்டில் கறுத்திற்கும்
அந்த எலிப்பொந்தில்
இயல்புநிலை மாறிய
எதேசங்களின் எச்சங்கள்..!

கறுத்த தடித்த கயிறு தோற்றத்தில்
அந்த பொந்தின் வாயிலில்
காட்டிக்கொடுத்து விடுகிறது
எலியின் வாலொன்று அசைவினில்
இத்தனை நாள்வாழ்ந்த
வாழ்வினையும்…
கீச்சொலிகளின் அர்த்தங்களையும்..!

அறிய இயலுகிறது
எலிப்பொந்தில் எலி மட்டுமல்ல..
பசியாற்றிக்கொண்டிருக்கும்
நாகப்பாம்பும்தான்…

எலியின் மரண ஓலம்..
வயிற்றைப் பிசைகிறது மனிதம்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (1-Feb-19, 12:18 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 88

மேலே