குடியரசு மருவலாம்

குடியரசு மருவலாம்..!

குடியரசு தினம்
கொண்டாடப்பட்டுக் கொண்டுதானிருகிக்கிறது
நிதமும் டாஸ்மாக்கில்..!

“குடி குடியைக் கெடுக்கும்”
எச்சரிக்கை பலகை வைத்தே
கோடி கோடியாய்
விற்பனை இலக்கு நிர்ணயம்..
பண்டிகை நாட்களில்.!

திருப்பதி உண்டியல் பணத்தையும்
சாராய விற்பனை
மிஞ்சி விடுவதால்
குவிந்த பணத்தை எண்ணவும்
கூலி ஆட்கள்
தேவையாய்த்தான் இருக்கிறார்கள்..!

கூவாமல் கூவிக் கூவி விற்கிறது
குடியை அரசு
நிதமும் குடி மகன்கள்
கொண்டாடிக் களிக்கையில்
குடியரசு தினம் என்று எதற்கு..?

பழமொழிகள் மருவி
அர்த்தம் அனர்த்தம் ஆனதுபோல்
குடியரசு என்பதின் அர்த்தமும்
மாறிவிடக் கூடும்
இனி வரும் காலங்களில்..!

எழுதி எழுதி வையுங்கள்..
பட்டி தொட்டிகளில் எல்லாம்
குடியரசு என்றால் என்னவென்று..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (1-Feb-19, 12:35 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 55

மேலே