நீ இன்றி நான் இல்லை

என்வாழ்வில் நீவந்தாய் ஏற்றமெல்லாம் வந்ததடி
இல்லாமை என்பதுவும் இல்லாமல் போனதடி
கண்ணாக எனையென்றும் கருத்தோடு காப்பதனால்
கவலையேதும் அண்டாமல் காததூரம் ஓடுதடி
இன்னல்கள் என்பதெல்லாம் எனைவந்து மோதாமல்
இன்பநிலை தேடிவந்து எனைஅணைத்துக் கொள்ளுதடி
நன்னெறிகள் செய்திடவே நாளுமெனை வைப்பதனால்
நல்லவனாய் வல்லவனாய் எனைமாறச் செய்துதடி !

இல்லறத்தை நல்லறமாய் நடத்துகின்ற தன்மையினால்
இதயமதில் இன்பமெனும் தேனாறு பாயுதடி
இல்லையென வருவோரின் ஏக்கமதைப் போக்குகின்ற
இயல்பான எண்ணமதை இதயத்தில் கொள்வதனால்
தொல்லையேதும் இல்லாமல் சொந்தங்கள் வாழுதடி
சொர்கமதும் தேடிவந்து உன்னுடனே ஒட்டுதடி
கள்ளமனம் இல்லாமல் காசுமனம் எண்ணாமல்
கனிந்திருக்கும் சொல்கேட்க செவியதுவும் ஓடுதடி !

என்உயிராய் நீயிருந்து நம்வழியை வகுப்பவளே
இனிமையினை எடுத்துவந்து இதயத்தில் நிறைப்பவளே
புன்னகையே போதுமென்று பொன்னகையை மறுப்பவளே
பெண்ணான உன்பிறப்பே புதுமையெனத் தோன்றுதடி
தென்றலென தவழ்ந்துவந்து தாவியெனை அணைப்பதனால்
தள்ளாமை எனையென்றும் தழுவாமல் போகுமடி
குன்றாத நின்குணத்தால் குடும்பமது கோவிலென
கொண்டாடி மகிழ்ந்திருக்கும் கோமகளே நீதான்டி !

பெற்றெடுத்த பிள்ளைகளை பாசமுடன் நீவளர்க்க
பண்பட்ட உள்ளமுடன் பாராட்டு கொள்ளுதடி
உற்றவொரு துணையாக உள்ளமெல்லாம் அன்புகொண்டு
உறவோடு எனையென்றும் அரவணைக்கும் தாயாக
பற்றோடு எனையென்றும் நீதாங்கி நிற்பதனால்
பூமியிலே என்வாழ்வும் பிறழாமல் ஓடுதடி
முற்றாக எனைஎண்ணும் மனங்கொண்டு நீவாழ
மனையாளே நீஇன்றி நானிங்கு இல்லையடி !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (9-Feb-19, 3:11 pm)
பார்வை : 272

மேலே